நீங்கள் ஏன் என்னை கொல்ல நினைக்கிறீர்கள்

Oleh: Arulezhilan
June 6, 2008

நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு.எஞ்சியிருக்கும் நாட்களில் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையை நீங்கள் அசை போடக் கூடும் அந்த நினைவுகள் வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும் ஒரு சேர உங்கள் நினைவுகளில் கொண்டுவரக் கூடும்.ஆனால் அந்த நினைவுகள் கசப்பான பக்கங்களாக மட்டுமே இருந்தால் உங்களின் அந்திமக் காலத்தில் நிம்மதியின்மை மட்டுமே உங்களுக்கு பரிசளிக்கப்படும்.

அப்படி ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்தவர் ஜனார்த்தனன் பிள்ளை.நாகர்கோவிலுக்குப் பக்கத்திலுள்ள பார்வதிபுரத்த்தில் வாழ்ந்து தொண்ணூருகளில் மறைந்தவர் ஜனார்த்தனன் பிள்ளை.திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்டனால் தூக்கிலிடும் பணியைச் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராட்சர் சமூகத்தில் வழி வழியாக வந்ததில் கடைசி தூக்கிலிடுபவராக வாழ்ந்தவர் ஜனார்த்தனன் பிள்ளை.மன்னராட்சியிலும் சுதந்திர இந்தியாவின் ஆட்சியிலுமாக 117 பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியவர் ஜனார்த்தனன் பிள்ளை.அவரது வாரிசுகள் இன்றும் பார்வதிபுரத்தில் வாழ்கிறார்கள்.

கனவுக்கும் கயிறுக்குமான இடைவெளியில் கழிந்த ஜனார்த்தனன் பிள்ளையின் வாழ்க்கை தனக்கு விதிக்கப்பட்ட பணிகள் காரண்மாய் நிம்மதியற்றதாய் கழிந்திருக்கிறது.மன்னனின் ஆணையினாலும் தர்மத்தின் பெயராலும் இந்த தண்டனைகளை நிறைவேற்றினாலும் பசியும் வயிறும்தான் அவரை தூக்குக் கயிற்றின் லிவருக்கு பக்கத்தில் கடைசி வரை நிறுத்தியிருக்கிறது ஜனார்த்தனன் பிள்ளையை.இருபது ஆண்டுகளில் அவரும் அவரது மனைவியுமான செல்லம்மாளும் பெற்றெடுத்த ஒன்பது பிள்ளைகளுக்கும் தெரியும் தன் தகப்பனின் மன வலி பற்றி,
நினைவுகள் மங்கி அந்திமக்காலத்தில் தன் அனுபவங்களை எழுத அதை ஆங்கிலத்தில் முழுமையாக்கி Hangnman’s Journal என்ற நூலாக கொண்டு வந்தார் சசிவாரியார்.

அது இப்போது தூக்கிலிடுபவரின் குறிப்புகள் என்று தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.அதை இரா.முருகவேள் தமிழில் மொழிபெயர்த்து உன்னதம் வெளியீடாக வந்திருக்கிறது.மரண தண்டனைக்கு எதிரான விவாதங்கள் இந்தியாவிலும் தமிழகத்திலும் மனித உரிமை ஆர்வலர்களால் முன் வைக்கப்படும் இந்த நேரத்தில் இந்த நூல் மரணதண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் வைக்கும் மிகச்சிறந்த ஆவணமாக இருக்கும் என்பதில் அய்யம் இல்லை.

வெண்ணெய்யில் தோய்த்தெடுத்து மிருதுவாக்கபட்டு வெண்மையானதும் மென்மையானதுமான தூக்குக்கயிறு.தூக்கிலடப்படும் நபரின் எடையை விட கூடுதலாக ஒன்றரை மடங்கு அதிகாமான எடைக்கல் ஒன்றை வைத்து சோதிக்கும் தூக்குக்கு முந்தைய சடங்குகள்.
கச்சிதமாக செயல் பட எண்ணைய் விடப்பட்டு பரிசோதிக்கப்படும் தூக்கு மேடையின் லிவர். கைதி நிறுத்தப்படும் மேடை என தன் தொழிலில் தேர்ந்த கலைஞனைப் போல எழுதுகிறார் ஜனார்த்தனன்.தன்னைப் போலவே தூக்கிலிடும் நிகழ்ச்சிக்கு உதவியாளர்களாக செயல்படும் அடியானகள் மீதும் அதே கரிசனம்தான் ஜனார்த்தனன் பிள்ளைக்கு.
எப்படி இருந்தாலும் தூக்கில் விழுபவரின் உயிர் சில மணித்துளிகளில் பிரிந்து விடுகிறது அவர் இந்த உலகிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார்.அல்லது விடுவித்து அனுப்பப்படுகிறார்.ஆனால் தூக்கிலிட்டவனின் கதி அவர்கள் காலம் முழுக்க அந்த கயிற்றுக்குக் கீழே வாழ்க்கையை வைத்து ஆடிக் கொண்டிருக்கிற நிம்மதியற்ற விளையாட்டுதான் ஜனார்த்தனன் பிள்ளையின் வரலாறும்.மரித்துப் போதலை விட தினம் தோறும் மரித்துக் கொண்டிருப்பது கொடுமை அல்லவா?

தனது அனுபவங்கள் குறித்து அவர் இப்படி எழுதுகிறார்,
தூக்கிலிடப்பட மனிதன் ஒரு இளைஞன்.இருபதுகளின் துவக்கத்தில் இருப்பவன்.அவன்தான் முதல் பலி.சரியாகச் சொன்னால் அவன் உண்மையில் மன்னருக்கு பலியானவன்.மன்னன் அளித்த தண்டனையை நிறைவேற்றுவதுதான் எனது வேலை.அவன் இன்னும் பையனாகத்தானிருக்கிறான்.வயது இருபதுக்கு கீழ்தான் இருக்கும்.மென்மையாகத் தோன்றுகிறான் சிறையறையின் மூச்சுத் திணற வைக்கும் சூழல் ஏற்படுத்திய ஆரோக்கியமற்ற தன்மையை அவனில் காண முடிகிறது.மாதக் கணக்கில் உடற்பயிர்ச்சி எதுவும் செய்யவே இல்லை.உணவும் மோசமானதாகத் தான் இருந்திருக்க வேண்டும்.ஒளியே படாமல் வெளுத்துப் போன உடல் தொய்ந்து போயிருக்கிறது.முன் தினம் மாலைதான் முகத்தை மழித்திருக்கிறான் மென்மையாகவும் வழு வழு வழுப்பாகவும் தோன்றிய அவனது தோல் அவனை இன்னும் சிறுவனாக பரிதாபத்துக்குரியவனாகக் காட்டியது.இருள் விலகிக் கொண்டிருந்தது நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்தன.விரைவில் அதிகாலைப் பனி வந்து விடும்.ஆனால் அதற்கு முன்பு என் பணி முடிந்து விடும்.தூக்கு மரங்களின் அருகே காத்திருக்கிறேன்.வார்டர்கள் அவற்றினிடையே அவனைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.அடியான்களில் ஒருவன் தூக்கிலிடப்பட உள்ளவனின் காலைக் கீழே திறக்கும் பொறிக்கதவின் மேல்,நடுவில் வைக்கச் செய்கிறான்.கயிறு தயாராக இருக்கிறது.அதன் ஒரு முனை கிழக்குப் பக்கமுள்ள கம்பத்தின் ஒரு கொக்கியில் கட்டப்பட்டுள்ளது.மறுமுனையில் இறுக்கக்கூடிய முடியுடன் கூடிய சுருக்கு.நான் தான் நடுங்கும் விரல்களால் அந்த முடிச்சைப் போட்டேன்.

அந்த இளைஞன் பொறிக்கதவின் மேல் நின்றதும் அடியான்கள் அவன் கைகளைப் பின்னால் கட்டுகின்றனர்.கால்களையும் சேர்த்து வைத்து கட்டுகின்றனர்.

முகத்தை மறைக்கும் விதமாக முகமூடி இறக்கப்படுகிறது.அவன் இறுதியாகப் பார்த்தது தனக்கு முன்னால் உள்ள எந்த நம்பிக்கையையும் அளிக்காத சுவரையும்,சீருடை அணிந்த சிலரின் இருகிப்போன முகத்தையும்தான்,முதல் ஒளிக்கதிர்களின் ஒளியில் தன் உடல் விழ விருக்கும் கதவைக் கூட அவன் பார்த்திருக்கலாம்.
உலகை இறுதியாக பார்க்கும் போது பார்க்க விரும்பக்கூடிய் எத்தனையோ அதில் இருக்கிறது.அவன் இறுதியாக எதை பார்க்க விரும்பியிருப்பான் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.
அவன் காதுக்குக் கீழே சுருக்கை சரியான நினைக்கு கொண்டு வரும் போது அவன் விழிகளில் இறுதியாகத் தென்பட்ட பார்வையை நினைத்துக் கொள்கிறேன்.அவன் முகம் வினோதமான நிம்மதியைக் காடுகிறது முகம் மட்டுமல்ல உடல் முழுவதுமே.கண்களின் பார்வை உள் நோக்கியிருந்ததை நான் கவனிக்கிறேன்.சுவரை நோக்கி இருந்தாலும் அவன் பார்வை அதில் இல்லை.அவன் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறான்.
முகமூடி இழுத்து விடப்பட்டுள்ளது.சுருக்கு இருக்கபட்டுள்ளது.சூப்பரின்டென்டென்ட் சைகை காட்டுகிறார்.நான் லிவரை இழுக்கிறேன்.அவன் கிணற்றில் மறைகிறான்.கீழே திறந்து கொண்ட கதவு பக்கச் சுவர்களில் மோதிக் கொண்ட தட்டென்ற ஓசை கேட்கிறது.முடியவே போவதில்லை என்று தோன்றிய கணநேரத்திற்கு கயிறு உதறுகிறது.பின்பு அது அசைய வில்லை.அவன் சென்று விட்டான்.ஆனால் அந்தக் கேள்வி என்னுள் மிச்சமிருக்கிறது.அவன் இறுதியாகப் பார்த்தது என்ன?அது அவனுக்கு இறுதியாக அனுபவித்த உணர்வான வலியிலிருந்து விடைபெற உதவியதா?

என்று தன் முதல் தூக்குப் பற்றி எழுதுகிறார்.அதிகாலையில் பறிக்கப்படுகிற ஒவ்வொரு உயிரும் ஜனார்த்தனன் பிள்ளைக்குள் வேறு வேறு அனுபவங்களை உருவாக்கியிருக்கிறது.ஓவ்வொரு தூக்குத்தண்டனையை நிறைவேற்றிய பிறகும் பலிகொடுத்து சிறு பூஜையை செய்து பாவக் கறை போக்கிக் கொள்கிறார் ஜனார்த்தனன்பிள்ளை பாவம் அத்தோடு கழுவிடப்பட்டதாக நம்பும் ஜனார்த்தனன் பிள்ளை கடைசி வரை துன்பச் சேற்றில் புரண்டுதான் வாழ்ந்திருக்கிறார்.அவர் ஜேம்ஸ் என்ற கைதியை பற்றி எழுதுகிறார்,விடிந்தல் ஜேம்ச்சுக்கு தூக்கு சிறைவிதிகள் அனுமதிக்கிற எல்லை வரை அவரை கரிசனத்தோடு நடத்துகிறார்கள் சிறை அதிகாரிகள் அவர் விரும்புகிற உணவு சிறையதிகாரியின் இல்லத்தில் ஸ்பெஷலாக தாயரிக்கப்பட்டு ஜேம்சுக்கு வழங்கப்படுகிறது.அநேகமாக அனைத்து தூக்குத் தண்டனை கைதிகளுக்கும் இவ்விதமா உணவு பரிமாறப்படுமாம்.

மரணத்துக்கு முந்தைய மாலையில் கடைசியாய் கழிந்து கொண்டிருக்கும் மணித்துளிகளில் அவன் விரும்பினால் தன் உறவினர்களை சந்திக்கலாம்.விரும்பினால் தான் விரும்புகிற மத குருவையும் சந்திக்க முடியும்.தூக்குக் கயிற்றிக்குக் கீழே ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு உயிரின் தவிப்பு காலத்தால் கழிகிற அந்த கணங்களை பதிவு செய்கிற ஜனார்த்தனன் பிள்ளை தன்னால் தூக்கிலிடப்பட்ட ஜேம்ஸ்சின் கதையை இப்படி விவரிக்கிறார்.

ஜேம்ஸ் முந்தைய இரவில் பாதிரியார் வேண்டுமென்று கேட்கிறார்.சில மணிநேரங்களிலேயே பாதிரியார் வந்து விடுகிறார்.ஆனால் தூக்கிலிட வேண்டிய தினத்தன்று காலை நான்கு மணிக்கு பாதிரியார் அவரது அறைக்குச் சென்ற போது ஜேம்ஸ் அவரை பார்க்க விரும்பவில்லை.

‘‘இங்கே நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை ஃபாதர்’’என்று அவர் சொல்கிறார்.

‘உங்களோடு நானும் பிரார்த்தனை செய்கிறேன்’பாதிரியார் கெஞ்சுகிறார்.

உனது இறுதி ஜெபம்.

’முடியாது இல்லை ஃபாதர் பிரார்த்தனை வேண்டாம் இன்னும் நேரம் வரவில்லை.

என்னை தனியாக விட்டு விடுங்கள்’’ஜேம்ஸ் உறுதியாக சொல்லி விடுகிறார்.

சடங்குகள் முடிந்து விட்டன.ஜேம்ஸ் குளித்து விட்டார்.

முந்தைய இரவு அவர் நன்றாகச் சாப்பிட்டிருந்தார்.தலைமைக்காவலரின் தலைமையில் பல வார்டர்கள் எச்சரிக்கையுடன் அவரது அறைக்குள் செல்கின்றனர்.‘வா’என்கிறார் தலைமைக்காவலர் ‘உனக்கே தெரியும் நேரம் வந்து விட்டது’
‘எதற்கு நேரம் வந்து விட்டது?ஜேம்ஸ் கேட்கிறார்.
‘நீ ஜெபம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது’என்று வார்டர் பதிலளிக்கிறார்.
‘நீங்கள் என்னைத் தூக்கிலிடப் போகிறீர்கள் இல்லையா?’ஜேம்ஸ் கேட்கிறார்.
‘வேறு வழியில்லை என்று நினைக்கிறேன்’வார்டர் பதிலளிக்கிறார்.
‘நான் வரமாட்டேன்‘அவர் சொல்கிறார்.நகர மறுக்கிறார்.

அந்த வார்டர் தன் தலைமை அதிகாரியான சூப்பிரின்டென்டென்டிடம் சொல்கிறார்.ராகவன் நாயர்தான் அவர்.எவளவு குறைந்த பிரச்சனைகளோடு முடியுமோ அவளவு குறைவான தொல்லையோடு ஜேம்ஸை நகர்த்திச் செல்லும் பொறுப்பு அவருடையது.நேரம் கழிந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்திருந்தார்.அவரை விரைவில் தூக்கிலிட்டாக வேண்டும் அவர் மரணதண்டனை அறைக்கு விரைகிறார்.
ஜேம்ஸை அவரது அறையிலிருந்து வெளிவரச் செய்வதற்கு ராகவன் நாயர் செய்த முயர்ச்சிகளுக்கு.பாதிரியாருக்கு கிடைத்த எதிர்வினையே கிடைத்தது.

‘நான் இங்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் நீங்கள் என்னோடு பேசியிருக்கிறீர்கள்.நான் கெட்டவனல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.உங்களுக்கு நான் ஒரு தீங்கும் செய்ய வில்லை.நீங்கள் ஏன் என்னை கொல்ல வேண்டும் என்று இவளவு தீவீரமாக இருக்கிறீர்கள்? உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்?‘ஜேம்ஸ் அவரிடம் கேட்கிறார்.

‘நாம் பின்பு பேசலாம்.இப்போது முதலில் இங்கிருந்து கிளம்பலாம்.நடக்கும் போது பேசிக் கொண்டே போகலாம்’ராகவன் நாயர் சொல்கிறார்.

’நான் ஏன் இங்கிருந்து வரவேண்டும்‘
பின்பு ராகவன் நாயர் சடங்கின் அடுத்த பாகத்தைத் தொடங்குகிறார்.ஜேம்ஸ் புரிந்த குற்றங்களின் பட்டியலைப் படிக்கிறார்.இது கைதியை கரைத்து விட்டது போலத்தோன்றுகிறது.அவர் நகர உடன்படுகிறார்.அவர் சிறையறையை விட்டு வெளியே வருகிறார்.அவர்கள் இருவரும் தூக்கு மேடையின் நுழைவாயிலை நோக்கி நடக்கிறார்கள்.பத்து வார்டர்கள் கையில் பிரம்புகளுடன் எச்சரிக்கையுடன் பின் தொடருகிறார்கள்.வழி எல்லாம் ஜேம்ஸ் தான் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யாத போதும் ஏன் அவர்கள் தனனைக் கொல்ல விரும்புகிறார்கள் என்று கேட்டுக் கொண்டே வருகிறார்.நுழைவாயிலில் என்னிடமும் அந்தக் கேள்வியைக் கேட்கிறார்.நான் பதிலே பேசாமல் அமைதியாக இருக்கிறேன்.அவரது கைகள் கட்டப்படுகின்றன.முகமூடி முகத்தின் மேல் இழுத்து விடப்படுகிறது.கழுத்தில் சுருக்கு மாட்டப்படுகிறது நான் லிவரை இழுக்கிறேன்.ஜேம்ஸ் எங்கள் பார்வையிலிருந்து மறைகிறார்.அவர் தனது கடைசி கேள்விக்கான பதில் பெறாமலேயே விடை பெற்று விட்டார்.

‘நீங்கள் ஏன் என்னை கொல்ல நினைக்கிறீர்கள்?தூக்கு மேடையின் மீது நின்று கொண்டிருந்த அவர் என்னிடம் கேட்டார்.

என்னால் என்ன சொல்ல முடியும்.நான் கேட்ட அந்த குரல் நிம்மதியோடு மரணத்தை நோக்கியிருக்கும் ஒருவரின் குரல் அல்ல.அவர் என்னிடம் பேசிய போது அவரது குரல் கெஞ்சுவது போல் இருந்தது நினைவுக்கு வருகிறது.நான் முகத்தை திருப்பிக் கொண்டேன்.ஆனால் அந்தக் கேள்வி என் மனதின் ஏதோர் ஒரு இருண்ட மூலையில் பதிந்து விட்டது.

இந்தக் தண்டனைக் குற்றவாளிகள் தன்னைப் பார்த்து எழுப்புகிற கேள்விகளுக்கு ஜனார்த்தனன் பிள்ளையிடன் என்ன பதிலிருக்கக் கூடும் சமாஸ்தானத்தின் ஆட்சியில் இவர் பணியாற்றிய தூக்குமரம் ஆயிரத்துக்கும் மேலான மரணங்களைப் பார்த்தது ஒவ்வொரு மரணமும் விடை தெரியாத விடை சொல்ல முடியாத பதில்களோடு மரணக்குளிக்குள் மறைந்து போகும் பரிதாபம் கொண்டது.

தவிறவும் இந்த பழி தலைமுறை தலைமுறையாய் தங்களை தீண்டாத மக்களாய் ஒதுக்கி வைத்திருந்த வேதனையும் ஜனார்த்தனன் பிள்ளையிடம் உண்டு.இதனாலே தூக்குக் கயிறு பற்றிய சுவராஸ்யமான கதைகளும் உள்ளதாய் சொல்கிறார்.சிறை ஊழியர்கள் பார்வையாளர்கள் என துக்கிலடப்பட்ட கயிற்றின் பாகங்களுக்காக போட்டியிடுவார்களாம்.அந்தக் கயிற்றின் சிறு பகுதியை வீட்டில் வைத்திருந்தால் பெரிய ஆபத்திலிருந்து அது காப்பாற்றும் என்றும்.குழந்தையின் தொட்டிலுக்குக் கீழே அந்தக் கயிற்றைக் கட்டி விட்டால் குழந்தையை துஷ்ட ஆவிகளோ கெட்ட கனவோ அண்டாது என்பதும் அதில் ஒரு நம்பிக்கை.ஜனார்த்தனன் பிள்ளையின் அப்பா அப்படி ஒரு கயிற்றை வீட்டுத் தொட்டிலின் கீழ கட்டி விட்டிருந்தாராம் இதை எல்லாம் பற்றி எழுத்கிற ஜனார்த்தனன் இந்த புனைவுகள் பற்றி சமூகம் தங்கள் மீது உமிழும் வெறுப்புகளைக் களைவதற்கு ஒரு கருவியாக இம்மாதிரி கதைகளை தூக்கிலிடுபவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும்.

தன் தொழில் பற்றி இபப்டிக் கூறுகிறார் ‘‘தூக்கிலிடுபவனின் பணி ஒரு கலையைப் போன்றது என்று சொல்கிறார்கள்.முடிச்சை கைதியின் வலது காதுக்குக் கீழ் நிறுத்துவதுதான் பணியின் மிகவும் முக்கியமான பகுதி.அதை சரியாகச் செய்தால் கீழே விழுவதால் கழுத்து உடைந்து ஏற்படும் சிறிய நடுக்கத்தைத் தவிற கயிறு உதறவே உதறாது.சில மில்லி மீட்டர்கள் தள்ளி முடிச்சு நிறுத்தப்பட்டிருந்தால் கைதியில் கழுத்து உடையாது.மூச்சுத் திணறி மெதுவாக வேதனை மிகுந்த மரணத்தை அவர் அடைவார்.

என்று எழுதுகிற ஜனார்த்தனன் பிள்ளையையும் சில நேரங்களில் கலை கைவிட்டுருக்கிறது அந்த நேரங்களில் நீண்ட நேரம் கயிறு துடித்தால் அதை காணச் சகிக்காதவாராய் நீண்ட மனத் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார் ஜனார்த்தனன் பிள்ளை.
“உங்களுக்கும் மரணதண்டனை அளிக்கப்பட்ட மனிதருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?”
ஆமாம்,அவர் கழுத்தில் சுருக்கை மாட்டும் போது இதை நான் என் விருப்பப்படி செய்வதில்லை மன்னர் மற்றும் தர்மத்தின் பெயராலேயே செய்கிறேன் என்று அமைதியாகச் சொல்வேன்.
நான் சொல்வது அவருக்கு கேட்கா விட்டாலும்கூட நான் மன்னிப்பு கேட்பேன்.இறுதியாக தண்டனை உறுதிப் படுத்தப்படுவற்கு முன்பு நீண்ட நாள் காத்திருக்கையில் தனது செயல்களைப் பற்றி அவர் சிந்தித்திருப்பாரேயானால் எனக்கு மன்னிப்பு கிடைத்து விடும் என்பதை நான் அறிந்திருந்தேன்.

என்றெல்லாம் விரிகிற ஜனார்த்தனன் பிள்ளையின் நூல் இன்றைய தமிழ்ச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெருகிறது.ஏனென்றால் உலகில் மரணதண்டனையின் வடிவல் சிலுவையில் தொங்க விட்டு சாகடிப்பதில் தொடங்கி விஷம் என்கிற வடிவம் பெற்று மினசார படுக்கைகளுக்கு மாறி இன்று தூக்கு மேடை வடிவத்தில் வந்து நிற்கிறது.அதன் நிழலில் இன்னும் எத்தனையோ உயிர்கள் ஊசாலாடிக் கொண்டுதான் இருக்கிறது.இந்தியாவில் அஃப்சல்குருவும் பாகிஸ்தானில் சரப்ஜித்சிங்கும் இவ்விதமாய் ஆட்டிக்கொண்டிருப்பவர்கள்தான்.தமிழகத்தில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்க்கின் தீர்ப்பில் சிலருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது தூக்கு தேவையற்றது என்பதுதான் என் கருத்து எனச் சொன்ன கலைஞரின் கருத்திலும்.தூக்குத் தண்டனைக்கு எதிரான மருத்துவர் ராமதாசின் கருத்திலும் இருப்பது அரசியல் அல்ல அனுபவத்தின் பயனாய் விளைகிற கரிசனக் கருத்துக்கள் தான்.பெரும்பாலான மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு கொலைக்கு பதில் இன்னொரு கொலையைச் செய்யக் கூடாது என்கிற கருத்தை நமதாக்குவோம்.

Category: கட்டுரைகள், மனித உரிமை, முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

15 Comments

 • //கழுத்து உடைந்து ஏற்படும் சிறிய நடுக்கத்தைத் தவிற கயிறு உதறவே உதறாது.சில மில்லி மீட்டர்கள் தள்ளி முடிச்சு நிறுத்தப்பட்டிருந்தால் கைதியில் கழுத்து உடையாது.மூச்சுத் திணறி மெதுவாக வேதனை மிகுந்த மரணத்தை அவர் அடைவார்.//

  இவ்வரிகளை வாசிக்கும் போதே பதறுகிறது :-(((((

  தூக்குத்தண்டனை கண்டிப்பாக வேண்டும் என்று சொல்பவர்களை முதலில் தூக்கில் போடவேண்டும்!

 • நான் எழுதினா நாண்பா நீ மட்டும்தான் ஏதோ பதில் எழுதுகிறாய்….ஆமா ஓராளவுக்கு நாம்ம பதிவுகளையும் கொஞ்சம் பேர் படிக்கணும்ணா என்ன எழுதணும்.லக்கி லுக் ப்ளீஸ் ஹெல்ப் மீ…

 • மிக நல்ல ஆவணம்
  “தூக்கிலிடுபவரின் குறிப்புகள்”
  மிகச்சிறப்பான பதிவை இங்கு பகிர்ந்த்தது மிக்க மகிழ்வை தருகிறது அருள்
  ஆனால் இந்த சித்தார்தன் இவ்வளவு கேவலமாக புத்தகத்தை வடிவமைத்திருக்க்கூடாது ஒரு டெக்ஸ்புக் மாதிரி ……
  சித்தார்த்தனை தூக்கில்போட்டால் இப்புத்தக ஆர்வலர்கள் மெத்த மகிழ்சியடைவார்கள்

 • உங்கள் பதிவு நன்றாக இருந்தது.

  மரண தண்டனை இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. எதோ அந்த தண்டனையின் பெயரால் தான் கொஞ்சம் குற்றங்கள் செய்ய பயப்படுகிறார்கள். அதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், பிறகு எதற்குமே பயம் இல்லாமல் போய் விடும். ஆனால் அவ்வாறு தண்டிக்கபடுபவர் நிரபராதியாக போய் விட கூடாது என்பதே என் கவலை.

  கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபவர்களை தூக்கில் அல்ல அதை விட கொடுமையான முறை எதாவது இருந்தால் அதன் படி சாகடிக்க வேண்டும் என்பது என் கருத்து. மனிதர்களை தானே தூக்கில் போட கூடாது இவர்கள் எல்லாம் மனித ஜென்மங்களே கிடையாது.

  முடிவாக மரண தண்டனை இருக்க வேண்டும் என்பதே என் கருத்து, குற்றங்கள் குறைய அல்லது கொடுமையான தவறுகளை செய்ய துணியும் போது வந்து நினைவு படுத்த.

 • நாம் தவறு செய்தால் தூக்கிலடப்பட்டு கொல்லபடுவோம் என்று தெரிவதனால் யாரும் கொலை செய்யாமல் இருப்பதில்லை.கொலை என்பது கணத்தில் உணர்ச்சி மயத்தில் நடப்பது.அப்போது தண்டனைகள் பற்றி யாரும் யோசிப்பதில்லை.பாலியல் வன்முறை என்பதும் அப்படியே.கடைசியாக கல்கத்தாவில் சிறூமியை பாலியல் வன்முறை செய்த குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டார் தனஞ்செய்.அதன் பிறகு சிறுமிகள் பாலியல் வன்முறைக்குள்ளாக வில்லையா?என்ன அப்படி ஒன்றே கிடையாது கடந்த [பத்தாண்டுகளில் கடைசி இரண்டு ஆண்டுகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்திருக்கிறது.இதெல்லாம் தண்டனைகள் குறித்த அறிவலோ அறிவின்மையாலோ ஏற்படுவதல்ல சமூக பொருளாதாரத்தின் பின் விளைவே கொள்ளைச் சமபவங்கள்.நணபரே இந்தியாவில் அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.அதையும் நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி.

 • பதிவிற்கு நன்றி அருள் எழிலன்.

  காத்திரமான நூலொன்றை கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

  நூல் குறித்த விவரங்களை சற்று விளக்கமாகத் தருவதும் நல்லது. இணைய வாசகர்கள் பலர் தேடிப் பிடித்து வாசிக்க உதவியாக இருக்கும்.

  மற்றது, தொடர்ந்து எழுதுங்கள் … வாசித்துக் கொண்டிருக்கிறேன் … வாழ்த்துக்கள்.

  அன்புடன் …

  வளர் …

 • நன்றி வளர்மதி.

 • மிக முக்கியமான பதிவு. நன்றி.

 • அன்புள்ள அருள் எழிலன்,

  நேற்றுதான் குங்குமத்தில் இந்தக் கட்டுரையை வாசித்தேன், நூல் எங்கே கிடைக்கிறது என விசாரிக்கவேண்டும் என்று குறித்துவைத்தேன், இன்று அதே கட்டுரையின் முழு வடிவத்தை இணையத்தில் வாசிக்கமுடிந்தது மிக மகிழ்ச்சி.

  நன்றிகள். நேரமிருக்கும்போது nchokkan@gmail.comக்கு எழுதவும்

  என்றும் அன்புடன்,
  என். சொக்கன்,
  பெங்களூர்.

 • This comment has been removed by the author.

 • ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களுக்கும் சொக்கனுக்கும் நன்றி.யாத்ரீகன்
  நீங்கள் சொல்கிறா “green mile”படத்தை நான் பார்த்ததில்லை.எனக்கு அதை கொடுக்க முடியுமா?நான் “Dancer in the Dark”
  க்கை பார்த்திர்க்கிறேன் பிரம்மாதமான படம் மனதை நெருடும் பல படங்களுள் அதுவும் ஒன்றாக் இருந்தது எனக்கு.

 • //தூக்குத்தண்டனை கண்டிப்பாக வேண்டும் என்று சொல்பவர்களை முதலில் தூக்கில் போடவேண்டும்!//

  அவர்களைக்கூட தூக்கில் போட வேண்டாம்

 • //அவர்களைக்கூட தூக்கில் போட வேண்டாம்//

  உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டேன் டாக்டர் 🙁

  I stand correct

 • டிவிடி-யை இங்கிருக்கும் பொது நூலகத்திலிருந்து பார்த்திருந்தேன் ..

 • //கனவுக்கும் கயிறுக்குமான இடைவெளியில் கழிந்த ஜனார்த்தனன் பிள்ளையின் வாழ்க்கை தனக்கு விதிக்கப்பட்ட பணிகள் காரண்மாய் நிம்மதியற்றதாய் கழிந்திருக்கிறது//

  மிகவும் உருக்கமான முகவுரைகள்…. இந்த கட்டுரையை வாசித்த இந்த விநாடிகள் நான் இந்த மனிதர்களையே அடியோடு வெறுக்கிறேன்…
  மரணம் என்பது மனிதருக்கு இறைவன் அளிப்பது… இந்த உரிமையை வேறு யாருக்கும் இன்றைய நாள் வரை இறைவன் அளிக்கவில்லை என்பதே என் தாழ்வான கருத்து……..

Leave a Reply