‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்!

Oleh: Arulezhilan
June 26, 2018

2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்கதை. மேற்கு தொடர்ச்சி மலையும், இலங்கைத் தீவும் முதுகு போல இருந்து இயற்கையாக பாதுகாக்கப்பட்ட பிரதேசமான குமரி மாவட்டத்தில் அந்தமானுக்கும் இலங்கைக்கும் இடையே வீசிய அரிதினும் அரிதான ஓகி இயற்கை அனர்த்தனம் வீசி ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒகி புயல் வீசிய அடுத்த சில நாட்களில் ஒரு நள்ளிரவில் கிளம்பி அப்பகுதிக்குச் சென்றேன். அதே நாளில் நியூஸ் 18- குணசேகரன், பாரதி தம்பி, தயாளன் உட்பட அவர்களின் தென் மண்டல செய்தியாளர்களும் அங்கு வந்தார்கள். புதிய தலைமுறை செய்தி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், நெறியாளர் செந்தில் உள்ளிட்ட அவர்களின் செய்தியாளர்களும் அங்கு வந்தார்கள். இரு தொலைக்காட்சிகளும் ஓக்கி புயல் தொடர்பாக செய்த பதிவுகள்தான் வெகு மக்களிடம் ஓக்கி பாதிப்பு பற்றிய அவலத்தையும்,அதன் கோரமுகத்தையும் உலகிற்குக் காட்டியது.

நான் அங்கு சில நாட்கள் சுற்றித்திரிந்தேன். வினவு தோழர்கள் ‘கண்ணீர் கடல் ‘ என்றொரு ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எனக்கு ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. சென்னை திரும்பிய பின்னர் அரபிக்கடலோரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த ஓலம் என் நிம்மதியை குலைத்தது.

எப்போதும் என்னை விட்டு விலகாதவரான ஜவஹர் இணைந்து கொண்டார். அஸ்வின் மடோன், ஒளிப்பதிவாளர் ஜோசப் விஜயை அறிமுகம் செய்து வைத்தார். முகநூல் வழியே ஜெயக்கொடி அறிமுகமானார்.ஜவஹர், ஜெயக்கொடி, ஜோசப் விஜய் என புவியியல் ரீதியாக குமரி கடலோரங்களை அறிந்த மூவர் என் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்கள்.இவர்களின் மூவரின் பங்களிப்பும்தான் இந்த படத்திற்கு ஒளியூட்டியது. துயரம், வேட்கை, கடலோர மக்களின் பண்பாட்டு ஓர்மைகள் என அக்கடலோரத்தின் நீள அகலமாக உழுதவர்கள் இவர்கள்தான்.

நிறைய விவாதித்தோம், சண்டை போட்டோம்.கிட்டத்தட்ட மூன்று ஷெட்யூல் ஷூட் பண்ணினோம். ஒவ்வொரு பேட்டி முடியும் போதும் மனம் பாரமாய் இருக்கும். உடல் எந்த அளவு சக்தியோடு இருந்தாலுமே, மனம் பலவீனமாகி அடுத்து நகர்வதற்கு கூட துணிச்சல் இருக்காது. எதாவது ஒரு கடையில் டீ சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் கடலை வெறித்துக் கொண்டு நிற்போம். அதுவும், எங்களால் காணாமல் போனவர்களை மீட்க முடியும் என நம்பி பேட்டியளித்தவர்களை எல்லாம் நிமிர்ந்து பார்க்க முடியாதபடி நெஞ்சம் பதறும். பிறகு,திடீரென ஒரு நம்பிக்கை கீற்று எங்கிருந்தாவது கிடைக்கும். ஆட்டோ டிரைவரோ, பிள்ளைகளோ, இளைஞர்களோ எதாவது பேச, மனம் கொஞ்சம் அமைதியாகி மறுபடி பயணிப்போம்.

தலைப்பு பற்றி யோசித்தேன்.சங்கப்பாடல்களில் கொற்கை பரதவர் பற்றிய குறிப்பில் “பெருங்கடல் வேட்டத்து சிறு குடி” என்று இருக்கும் வரி பற்றி யோசித்தேன். அது பற்றி பேராசிரியர் தேவசகாயகுமாரிடம் பேசி தெரிவு செய்தேன்.போஸ்டர் வெளியிட்டோம்.போஸ்டருக்கான படத்தை எடுத்தது ஸ்னேகாதான். ஜவஹர், ஜெயக்கொடி,ஸ்னேகா மூன்று பேருமே போஸ்டருக்கான படங்களை எடுத்துக் கொண்டு தான் இருந்தார்கள்.ஸ்னேகாவின் படத்தை உயிரோட்டமாக மாற்றிக்கொடுத்தவர் தினேஷ்.

எடுத்துக் கொண்டு வந்திருந்த ஃபூட்டேஜை பார்த்த போது தான் எவ்வளவு பெரிய பொறுப்பை கையில் எடுத்திருக்கிறோம் என்பது உண்மையில் புரிந்தது.பல டேபிள்கள், அமர்வுகள் என பெரும் பொறுப்பு தனி ஒருவனாய் என் தலையில் இருந்தது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இந்த படத்தின் எடிட்டிங்கில் என்னை முழுமையாக தனியொருவனாக என்னை அர்ப்பணித்தேன். இந்த படத்திற்கு முழு மூச்சாய் உயிர்கொடுத்தவர் தம்பி தாசன். ஒவ்வொரு முறையும் படத்தை பார்த்து பார்த்து செழுமைப்படுத்தியவர்கள் சிலர். இன்னொரு சூழலில் நிச்சயம் அது பற்றி எழுதுவேன். படப்பிடிப்பைவிட பெரிய வலியாய் இருந்தது எடிட்டிங் டேபிள் தான். ஏனெனில், எடிட்டிங்கில் நாங்கள் முன்னர் மனம் விம்ம கேட்ட ஒரு கதையை பல முறைகள் கேட்க வேண்டியதானது. ‘எனக்கு எண்டே பர்த்தாவு வேணும்’ ‘எம் மக்களுக்க அப்பாவை கண்டு பிடிச்சு தாங்கய்யா’ எனும் அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. அப்போது தொடங்கி இப்போது வரை பித்துப் பிடித்தது போலவே தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

இதை வந்து பாருங்கள் என்று உங்களை விளிப்பது, உண்மையில் எங்களுடைய மனச்சிதைவை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே. எப்படி ஒரு தேசம் தன் மக்களை கடலில் மரிக்கவிட்டுவிட்டு கடற்படை கப்பல்களை அவசர அவசரமாக கரையொதுக்கியது என்பதையும், உடலில் நீர் வற்றிப் போய் வேறொறுவனின் சிறுநீரை குடித்த கிழவன் கடைசியில் எப்படி செத்தான் என்பதையும், கடலில் கணவளை இழந்தவளுக்கு எவ்வளவு கடன் பாக்கி இருக்கிறது என்பதையும், வெட்கமே இல்லாத அமைச்சர்களின் ஆங்காரத்தையும் எல்லாம் நாங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் போதாது. வாருங்கள் , வந்து பாருங்கள்.

( பின் குறிப்பு : நிதிச்சுமையும் பெருஞ்சுமையாகவே இருந்தது.என் ஊதியத்தை படப்பிடிப்பிற்கு பயன்படுத்தினேன். இரண்டாவது ஷெட்யூல் முடித்து விட்டு மூன்றாவதும் எடுக்க வேண்டியிருந்த போது நண்பர்களிடம் உதவி கேட்டேன். என் ஆவணப்படத்திற்கு நிதி உதவி அளித்த நண்பர்கள் இவர்கள்தான். இவர்களின்றி இப்படம் முடிவடைந்திருக்காது.

ஜோ மில்ட்டன் | ராஜகுள்ளப்பன் | ஜோசப் ஜெலாஸ்கர் | சுபகுணராஜன் | ஆண்டஸ் ராஜ் பெர்ணாண்டோ | ஜெகன் ஆன்ட்ரூஸ் | கில்பர்ட் | ஆன்டன் பிரகாஷ் | வின் செண்ட் ராஜூ | யோ. திருவள்ளுவர் | பாஸ்டின் பென்னி | சரவணன் கன்னியாரி

இந்த பட்டியலில் உள்ள நண்பர்கள் தவிர வேறு எந்த ஒரு தனி நபரிடமோ, மத நிறுவனங்களிடமோ, NGO குழுக்களிடமோ, கிராம மக்களிடமோ எந்த வடிவத்திலும் நன்கொடைகள் ஒரு ரூபாய் கூட பெறப்படவில்லை. )

(பெருங்கடல் வேட்டத்து பதிவு தொடரும்..)

முதல் திரையிடல்

நாள் – 07-07-2018

நேரம் -மாலை 5 மணி

இடம் – ரஷய கலாச்சார மையம்

கஸ்தூரிரங்கன் சாலை, (சோழா ஷெராட்டன் பின்புறம்)- சென்னை.

#

இரண்டாம் திரையிடல்

நாள் – 08-07-2018
நேரம் -மாலை 5 மணி
இடம் – கவிக்கோ அரங்கம்
ஆழ்வார்பேட்டை

Tags: , , , , , , , , , , , , ,

Category: அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply