ரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா?

Oleh: Arulezhilan
June 6, 2018


சமூக விரோதிகள் என்று தமிழக மக்கள் குறித்து குறிப்பிட்ட ரஜினியால் அம்மக்களை முட்டாளாக்க முடியவில்லை. ஆனால், ‘காலா’ திரைப்படம் அறிவுலகின் ஒரு பிரிவினரை முட்டாளாக்கி விட்டது. அவர்கள் ரஞ்சித்திற்காக களமாடுவதாக நினைத்துக் கொண்டு ரஜினிக்காக களமாடுகிறார்கள். அல்லது ரஜினியின் தமிழகம் குறித்த பார்வைகள் தொடர்பாக பெருமளவு மவுனம் காக்கும் அவர்கள் ஒரு பக்கம் ரஞ்சித்திற்காக காலா பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் தலித் வெறுப்பு ஒன்றையே தங்கள் சாதி இருப்பாகக் கொண்டோர் ரஞ்சித் மீது வன்மம் கொட்டுகிறார்கள். இந்த இரு தரப்பிற்கும் இடையில் வலதுசாரிகளை எங்கும் எப்போதும் எதிர்ப்போர் ரஜினியின் வலதுசாரிப்பார்வைகளை ஆபத்தானதாக கருதி அவரது அரசியல் வருகையையே கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
அவரது அரசியல் வருகைக்கு ‘காலா’ பயன்படும் என்பதால் காலாவை தனியாக விலக்கி வைத்து பார்க்க முடியாத பார்வையை முன் வைக்கிறார்கள். இயக்குநரும் நண்பருமான மீரா கதிரவரவன் ஒரு எல்லையை தீர்மானிக்கிறார். இப்படி, ///காலாவின் எல்லைக்குள் நின்றே ரஞ்சித்தை விமர்சிக்கவேண்டும். காலாவிற்கு வெளியே நின்றே ரஜினியை விமர்சிக்கவேண்டும்.//

இப்படி ஒரு எல்லையை தீர்மானித்து அதை நம் தலையில் கட்டும் உரிமைதான் அறிவுலகில் பிளவை உருவாக்குகிறது. காலாவை விமர்சிப்போர் மட்டுமல்ல, ரஜினியை விமர்சிக்கிறவர்களே தலித் எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி கொலைகளை மறைமுகமாக கருத்தியல் ரீதியாக ஆதரித்த ரஜினியை விமர்சிப்பதா? அல்லது காலாவுக்காக ரஜினியை விமர்சிக்காமல் அமைதி காப்பதா என்ற நிர்பந்தம் தமிழ் வெளியில் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்னோலின் உட்பட ஸ்டெர்லைட்டிற்காக கொல்லப்பட்டவர்களில் உடல் அடக்கம் செய்யப்பட்ட ஈரம் இன்னும் காயவில்லை. ஸ்டெர்லைட் நிர்வாகி ராம்நாத் இன்று டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். “ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம். அதற்கான பணியை துவங்கிவிடோம்.போராட்டத்தில் சமூக விரோதிகளும். தன்னார்வக்குழுக்களும் ஊடுறுவியதால் வன்முறை ஏற்பட்டது” என்று பேசியிருக்கிறார்.
அப்படியே அதே ரஜினியின் குரல்…ஸ்டெர்லைட்டின் குரலும் ரஜினியின் குரலும் வேறு வேறு அல்ல…
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டை பெரும்பாலான தலைவர்களும், தமிழக மக்களும் கண்டித்துக் கொண்டிருந்த போது அதிமுக, பாஜக மட்டுமே சமூக விரோதிகள் என்ற சொல்லை பயன்படுத்தின. உண்மையில் அது போன்ற ஒரு சொல்லை ரஜினி பயன்படுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதே காலா படப்பிடிப்பிற்காக தமிழில் எனக்கு பிடிக்காத சொல் “வேலை நிறுத்தம்” என திமிராகச் சொன்ன ரஜினி தூத்துக்குடி சென்று வந்த பின்னர் “சமூக விரோதிகளே வன்முறைக்கு காரணம். அவர்கள் போலீசை தாக்கியதால்தான் வன்முறை வெடித்தது” என்பது போல பேசினார்.

அதுவரை கைது செய்வதில் பெரும் சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருந்த போலீஸ் சுமார் 180-க்கும் மேற்பட்டோரை இரவோடு இரவாக வேட்டையாடியது. ரஜினியின் இந்த வாய்ஸ்தான் பண்ருட்டி வேல்முருகனை மோசமான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்ய வைத்தது. மேலும் சிலரை போலீசார் கைது செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது போன்ற பின்னணியில்தான் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் காலாவை ரஞ்சித்திற்காக வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வாதம், அல்லது கருத்து முன் வைக்கப்படுகிறது. தமிழகத்தில் காலா தடை செய்யப்படவில்லை. 7-ஆம் தேதி வெளியாகிறது. ஏதோ காலாவை தடை செய்து விட்டது போன்ற போலியான தோற்றத்தை சிலர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் ரஜினியின் முந்தைய சினிமாக்களுக்கு கிடைத்த வரவேற்பு காலாவுக்கு இல்லை. இதற்கு ரஜினி எதிர்ப்போ, காலா வெறுப்போ காரணமல்ல. சினிமா சந்திக்கும் நெருக்கடிகளில் இதுவும் ஒன்று. ஆனால் ரஜினியின் படம் ஒன்று திரையரங்கத்திற்கு வருவதற்கு முன்பே அவருக்கு இரண்டு அல்லது மூன்று மடங்கு லாபத்தைக் கொடுத்து விடுகிறது. அவரை நம்பி படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் முதலிட்ட பணத்தை எடுக்க வேண்டும். அதற்காகவே காலா வெளிவருகிறது. ஒரு வேளை காலா வராமல் போனால் அதனால் ரஜினியோ, அல்லது இயக்குநர் ரஞ்சித்தோ நட்டமடைய போவதில்லை.

இன்றைய தேதியில் காசு கொடுத்துதான் ‘காலா’ பார்க்க வேண்டும் என்றால் ரஜினி ரசிகர்களே கலாவைப் பார்க்க முடியாது. காஸ்டிலியான ஷாப்பிங் மால் சினிமா கொள்ளை அப்படி இருக்கிறது. அதனால்தான் ரசிகர் மன்றங்கள் மூலம் 90% ரஜினி ரசிகர்கள் ரஜினியின் படத்தை பார்ப்பார்கள். காலா வெளியான பின்னர் மக்களிடம் ‘கலா’ பற்றிய வாய்வழி உரையாடல்கள் பரவி படம் ஓடும் என்பதுதான் பொதுவான எண்ணம். ஆனால் இப்போதைக்கு, ஒரு வேளை உண்மையாக இயக்குநர் ரஞ்சித்திற்கோ, அல்லது அவர் எடுக்கும் சினிமாக்களில் அவர் பேசுவதாக அவரது ரசிகர்கள் கூறும் தலித் அரசியலுக்கோ ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்றால் அதற்கு தமிழக மக்களோ, அல்லது ரஜினியை விமர்சிப்பவர்களோ காரணம் அல்ல. ஜெயலலிதா மரணம் வரை மூடிக் கொண்டு போயஸ் கார்டனில் முடங்கிக் கிடந்த ரஜினி ‘ஜெ’ மரணத்தின் பின்னர் துக்ளக் ஆண்டு விழா துவங்கி ஒரு பொறுப்பற்ற வலதுசாரியாக தொடர்ந்து எச்சில் துப்பி வருகிறார் தமிழக மக்கள் மீது.. ‘காலா’வுக்காக இவைகளை சகித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை பெரிய அபத்தம்.

ரஜினியை விமர்சித்தால் அதை ரஞ்சித்திற்கு எதிராக திருப்பும் வேலையை விட்டு தூத்துக்குடி கொலைகள் தொடர்பான. ஐ.பி.எல் போட்டி தொடர்பான, ரஜினியின் கருத்துக்கள் எப்படி வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய தேதியில் ரஜினியை ஆதரிப்பதென்பது அரசு பயங்கரவாதத்தை ஆதரிப்பது. வலதுசாரிக் கொள்கைகளை ஆதரிப்பது போன்ற ஆபத்தாகும். அரசியல் அரங்கில் இருந்து அடியோடு துடைத்தழிக்கப்பட வேண்டிய நபர்தான் ரஜினி.

Category: அனுபவம், அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply