விவிலிய வாசிப்பும் கல்வியும்-1

Oleh: Arulezhilan
March 12, 2017

சடங்காச்சாரங்களை பேண அனுமதி மறுக்கப்பட்ட அத்தனை சமூகங்களுமே தீண்டத்தாத சமூகங்கள்தான். மந்திரங்களை ஓதும் அனுமதியே இல்லாத போது வாசிப்பு எப்படி தமிழ் சமூகத்துக்கு சாத்தியமானது.

விகடனில் நான் எழுதிய அந்த நாள் தொடருக்காக, 60-பதுகளில் இடிந்து விழுந்து பெண் மாணவிகள் பலியான மதுரை வ்கை நதிக்கரை சரஸ்வதி பள்ளிக்குச் சென்றேன். அப்போது மாணவிகளாக இருந்து தப்பிப்பிழைத்த பலர் இப்போதும் வசிக்கிறார்கள். அவர்கள் சொன்ன கதைகள் வேடிக்கையாக இருந்தது. பெண்கல்வி தமிழ் சமூகத்திற்கு பரவலாக சாத்தியமானது 60-பதுகளில்தான். முதல் தலைமுறையாக கல்வி கற்க வந்த மாணவிகள் பள்ளி இடிந்து விழுந்ததை சாபம், சாஸ்திரக்கேடு என்றெல்லாம் அப்போது ஓத பல பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பள்ளியில் இருந்து விலக்கிக் கொண்டார்களாம்.
இந்த நிலையை விட மேம்பட்ட ஒரு நிலை குமரி மாவட்டத்தில் நிலவியது. 20-பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே அங்கு பெண் கல்வியை சீர்திருத்த கிறிஸ்தவத்தினர் கொண்டு வந்தனர். டதி கல்லூரியும் பள்ளியும் அங்கு நிறுவப்பட்டது. ஆனால், அந்த கல்வி முயற்சியின் துவக்கம் எதுவாக இருக்கும், நிச்சயம் அது விவிலிய வாசிப்பின் மூலமே சாத்தியமானது, மயிலாடி வேதமாணிக்கம் மூலம் ஒடுக்குமுறைகளைக் கடந்து வளர்ந்த சீர்திருத்த கிறிஸ்தவம் நாடார் இன மக்களை தோள் சீலைக் கலகம் செய்ய தூண்ட வில்லை. மாறாக அவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் இயல்பாகவே கிளர்ச்சியை உண்டாக்கியது. பெருமளவு நாடார் இன மக்கள் கிறிஸ்தவம் தழுவியதை அய்யா வைகுண்டர் விரும்பவில்லை. அவர் தனது அகிலத்திரட்டில் கடுமையாக இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் சாடுகிறார்.‘கொடும் வேதம்’ என்கிறார். சீர்திருத்த கிறிஸ்தவத்தின் பரம்பலை தடுத்து நிறுத்தியவர் அய்யா வைகுண்டர் எனலாம்.இடுப்பில் துண்டு கட்ட முடியாத சமூகத்திற்கு தலையில் துண்டு கட்ட வைத்த எதிர்ப்பு அடையாளத்தை ஆன்மீகமாக்கி அதில் வெற்றியும் பெற்றார்.

ஒவ்வொரு சீர்திருத்த சி.எஸ்.ஐ தேவலயங்களிலும் பைபிள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டது.வைகுண்டர் அகிலத்திரத்தை ஓதச்சொன்னார். ஆக மொத்தம் நாடார் இன மக்களிடம் வாசிப்பு என்பது ஒரு இயக்கமாக மாற்றப்பட்டது. தெருக்கள் தோறும், கிறிஸ்தவ ஆலையங்கள் தோறும் மக்கள் வாசித்தார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கு அது ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது. ரிங்கல் தௌபே. மீட் பாதிரியார் போன்றோரின் பங்கு இதில் அளப்பரியது.
மிகக் குறைந்த காலத்தில் ஒரு சமூகம் கல்வியில் பெரும் பாய்ச்சலோடு முன்னேற விவிலிய வாசிப்பும், அகிலத்திரட்டு வாசிப்பும் உந்த அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக கல்வி அமைந்தது….

அந்த வாசிப்பும், கல்வியும் சமூக உற்பத்தியில் ஆற்றிய பங்கு அளப்பரியது…
இது இருபதாம் நூற்றாண்டில் நடந்தது..

ஆனால் 16-ஆம் நூற்றாண்டிலே மீனவ மக்களிடம் கத்தோலிக்கம் வேர் விட்டது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் முதல் அச்சு நூலை மீனவர்கள் நிதியில் கொண்டு வந்த போதிலும்…. கத்தோலிக்க சமயத்தின் திருவிவிலிய வாசிப்பை ஏன் பாதிரியார்கள் மீனவ மக்களிடம் பரவலாக்க வில்லை?
ஜெபங்களை மட்டும் மனப்பாடம் செய்ய சொல்லிக் கொடுத்ததன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

திருவிவிலியத்தை மீனவ மக்களிடம் மறைத்த கத்தோலிக்கம்!
(அடுத்த கட்டுரையின் தலைப்பு)

Category: அனுபவம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply