அசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை!

Oleh: Arulezhilan
February 9, 2017

ஃபேஸ்புக்,டுவிட்டரை ஆக்டிவேட் பண்ணும் போதும், நம் வீட்டு தொலைக்காட்சிகளை நாம் ஆன் பண்ணும் போதெல்லாம் நாம் அசாதாரணச் சூழலுக்கு உள்ளாகிறோம். நாம் உணரும் இந்த அசாதாரணச்சூழலை தமிழகத்தில் அசாதாரணச் சூழல் என்கிறார்கள் பாஜகவினர். அதையே கவர்னரும் அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
மெரினா போராட்டத்தின் பின்னர் முதல்வர் பன்னீரின் உத்தரவின் பேரில் போலீசார் தமிழகம் முழுக்க நடத்திய நரவேட்டைதான் தமிழகம் சந்தித்த அசாதாரணச் சூழல். மற்றபடி ஜெயலலிதா இறந்த போதோ, சசி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன போதோ, பன்னீர் ராஜிநாமா செய்த போதோ, சசி முதல்வர் பதவிக்கு தேர்வான போதோ தமிழகத்தில் அசாதாரணச் சூழலும் இல்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பி விடவும் இல்லை.

டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறப்பை அறிவிப்பதற்கு முன்பே ஆளுநர் மாளிகையில் முதல்வர் பதவியேற்க ஆஜராகியிருக்க பன்னீர்செல்வமும் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க பொறுப்பு ஆளுநர் அவசரமும் காட்டிய நிலையில், கடந்த 7-ஆம் தேதி பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்த பின்னர், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்கள். ஆனால் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டிய ஆளுநர் 48 மணி நேரம் தாமதம் செய்தார். தமிழகத்தில் இருந்து கிளம்பி டெல்லி சென்றார் அங்கு பாஜகவினரின் ஆலோசனைப்படி தாமதம் ஏற்படுத்தினார். அதற்குள் பன்னீர் செல்வத்தை தயாரித்து பிளவை உருவாக்கினார்கள். ஆனாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பன்னீருக்கு இல்லை. ஒரு வேளை இருந்தால் அவரையாவது ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரலாம்.
நான்கு நாட்கள் வேண்டுமென்றே இந்த தாமதத்தைச் செய்து தமிழகத்தை குழப்புகிறார் மோடி. நான்கு நாட்களின் பின்னர் இன்று சென்னை வந்திருக்கும் தற்காலிக ஆளுநர் வித்யாசாகர் ராவை சசிகலாவும், சந்திக்கிறார் பன்னீரும் சந்திக்கிறார்.
சசிகலா தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் பட்டியலைக் கொடுக்கிறார். பன்னீர் தனது ராஜிநாமாவை வாபஸ் பெறுவதாக கோருகிறார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் கோருகிறார். ஆளுநர் ஒன்
றிலோ முதல்வராக இருக்கும் பன்னீருக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் கெடுவை கொடுக்க வேண்டும். அல்லது பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறும் சசிகலாவை பதவியேற்று பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் பன்னீர் கேட்ட கால அவகாசத்தை அசாதாரணம், பதட்டம் எனும் பெயரில் தாமதம் செய்து அவருக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறார்.
இதுதான் அநீதி. இன்னும் சில நாட்கள் கழித்தால் மொத்தமாக இது குழம்பி விடும். ஒன்றிலோ மோடியின் பொம்மை பன்னீரின் ஆட்சி நீடிக்கும் அல்லது ஆட்சியே இல்லாமல் போகும் . குதிரை பேரத்தின் மூலம் வேறு வழிகளில் இதில் ஒரு பாதிபேரையாவது கைப்பற்றலாம் என்ற பாஜகவின் அரசியல் எண்ணத்திற்கு ஆளுநர் விதை போடுகிறார்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு சர்வாதிகார ஒற்றைத் தன்மையை இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்தும் மோடி. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆளுநரை வைத்து படுத்திய பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அதையே புதுச்சேரியில் முயன்று பார்க்கிறார்கள். இதோ யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமல்ல மாநிலங்களுக்கும் கூட கவர்னரை மீறிய உரிமை எதுவும் இல்லை என்பதை உணர்த்த தமிழகத்தை சோதனைக்களமாக்கி இருக்கிறார்கள்.
அந்த சோதனைக்களத்தை நிரூபிக்க இல்லாத அசாதாரணச் சூழல் என்ற ஒரு பொய்யை இட்டுக் கட்டி உருவாக்கிறார் ஆளுநர். இது அதிமுக, திமுக, பன்னீர், சசிகலா பதவிச் சண்டை போட்டு, உள்குத்து விவகாரம் அல்ல தமிழகத்தின் உரிமைகளை ஒரு நியமனப்பதவி மூலம் பறித்தெடுக்க முயலும் அராஜகவாதம். தமிழகத்தை தமிழக மக்களின் விருப்பங்களையும் மீறி தன் கட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் திமிர். இதை அனுமதிப்பது இங்குள்ள அனைத்து பிராந்தியக் கட்சிகளுக்குமே பாஜக வைக்கும் மிகப்பெரிய ஆப்பு!

Category: அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply