பன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்!

Oleh: Arulezhilan
February 7, 2017

அருணாச்சலப் பிரதேசத்தில் ஆளும் பாஜக நடத்திய தாக்குதல் ஏற்படுத்திய பின் விளைவுகளால் அவர்களை நம்பிப் போன முன்னாள் முதல்வர் கலிகோ புல் உச்சநீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு பின்னர் சீந்துவாரில்லாமல் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நேரடியாக அல்லாமல் மறைமுகமாக அருணாச்சலப்பிரதேச அரசை கைப்பற்றிய பாஜக அனைத்து சதிகளையும் கச்சிதமாக நிறைவேற்றிய பின்னர் கைப்பற்றியவர்களை தன் கட்சியில் இணைத்து 33 பேருடன் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. உண்மை என்ன தெரியுமா இதில் ஒருவர் கூட பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர்கள் அல்ல, அத்தனை பேரும் காங்கிரஸ் கட்சியில் வென்றவர்கள். இதோ அதே பாணியில் தமிழகத்தில் பன்னீர்செல்வத்தை வைத்து பாஜக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறது.

சசிகலாவுக்கும் பன்னீருக்குமிடையிலான பனிப்போர் பற்றியும், அது சில இடங்களில் நுட்பமாக வெளியானதையும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது டெல்லி சென்ற பன்னீருக்கும், டெல்லியில் எம்,பிக்களோடு இருந்த தம்பிதுரைக்கும் இடையிலான மோதல் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்தியா டுடே சென்னையில் நடத்திய என்கிளேவ் கருத்தரங்கில் பன்னீர் பேசிக் கொண்டிருந்த போது வெடுக்கென்று சசிகலா எழுந்து சென்றது பெரிதாக இங்கு கவனம் கொள்ளவில்லை. ஆனால் அது இருவருக்கிடையிலான பனிப்போரின் வெளிப்படையான முதல் அறிகுறியாக இருந்தது. நிற்க, இப்போது கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்ததாக ஜெயலலிதா சமாதியில் வைத்து கூறியிருக்கிறார்,

கடந்த இரு மாத கால பன்னீர்செல்வத்தின் ஆட்சியை கவனித்தால் அதில் அவர் மோடியோடு நெருக்கம் பேணியதை கவனிக்க முடியும், அவர் ராஜிநாமா செய்த நிலையில் (நிர்பந்த ராஜிநாமா) என்கிறார். ராஜிநாமாவை வாபஸ் பெறுவேன் என்கிறார்.சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில்,கவர்னர் தன் வருகையை ஒத்தி வைத்து டெல்லியில் இருக்கும் நிலையில், பன்னீர் சசிகலாவுக்கு எதிராக ஏவப்பட்டிருக்கிறார். இனி நாளை நிச்சயம் கவர்னர் சென்னை வருவார்.

சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கியதில் பன்னீர் செல்வத்தின் பங்கு பெரும்பங்கு. அவர்தான் அந்த ஆணையை கொண்டு போய் சசிகலாவிடம் கொடுத்தார்.சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா முதல்வராக முன்மொழிந்ததே பன்னீர்செல்வம்தான். சசிகலாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பன்னீர் முன்மொழிந்தது நிர்பந்தம் என்றால் அன்று இரவோ, மறு நாளோ பன்னீர்செல்வம் இதை பேசியிருக்கலாம். ஆனால், இரண்டு நாள் கழித்து இன்று ஜெயலலிதா சமாதியில் பேச வேண்டிய அவசியம் என்ன? இடையில் நடந்தது என்ன என்பது மிகவும் முக்கியம்.

மற்றவர்கள் கூறுவது போல ஜெயலலிதா உடல் நிலை தொடர்பாகவோ,ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவோ எதுவும் சந்தேகம் எழுப்பவில்லை. இதுதான் மோடி அரசின் நிலைப்பாடும். அப்படி சந்தேகம் எழுப்பினால் முதலில் சிக்குகிறவர்கள் மத்திய அரசுதான். காரணம் எய்ம்ஸ் மருத்துவர்களை மத்திய உள்துறை, சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அனுப்ப முடியாது. சிகிச்சையில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று வெங்கய்யா நாயுடுவும் தன் பேட்டிகளில் கூறியிருக்கிறார். நிற்க, பொதுச்செயலாளர் பதவி உங்களுக்கு சி.எம். நான் இதுதான் பன்னீரின் நிலைப்பாடு. அவர் கூறும் குற்றச்சாட்டுகளை வைத்துப் பார்த்தால் சசிகலா குடும்பத்தினராலும்., அவரது ஆதரவாளர்களும் அவமானப்பட்டதை கூறுகிறார்.

வர்தா, ஜல்லிக்கட்டு விவகாரங்களில் தனக்கு நற்பெயர் கிடைத்ததாகக் கூறுகிறார். வர்தா, ஜல்லிக்கட்டு, வறட்சி இம்மூன்று விவகாரங்களிலும் தமிழக அரசு மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்திருக்கும் போது எந்த அளவு கோலின் அடிப்படையில் தன் அரசுக்கு நற்பெயர் என்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியது தனக்கு தெரியாது என்கிறார் இதெல்லாம் நம்பும் படியாக இல்லை.

அதிமுகவினுள் நீண்ட கால உறுப்பினரான பன்னீர்செல்வம் இது பற்றி பேச முழு தகுதியும் உண்டு. ஆனால் அவர் ஜெயலலிதா மரணத்தின் பின்னர் டிசம்பர் 5 துவங்கி ராஜிநாமா செய்தது வரையிலான சம்பவங்களின் ஒரு பகுதியை மட்டும் பேசுகிறார்.இதில் பேசப்படாத பெரும் பகுதி ஒன்றை மறைக்கிறார்.சசிகலா முதல்வராக வேண்டும் என பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் இதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாது என ஆட்சியை கைப்பற்ற மத்திய பாஜகவின் கருவியாக செயல்படுகிறாரா?

பாஜக அதிமுக கைப்பற்ற நினைக்கிறது,அழிக்க நினைக்கிறது என்று தம்பிதுரையும், மதுசூதனனும் பேசினார்கள். அதற்கு ஒரு கருவியாக பன்னீர் பயன்படுத்தப்பட்டார் என்பது அதிமுகவிற்குள் பேசப்படும் கருத்து. இது பற்றி பன்னீர்செல்வம் முதலில் தெளிவு படுத்த வேண்டும்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கும் பட்சத்தில் அவரை பதவியேற்க அனுமதிக்காத கவர்னர் மத்திய பாஜக உத்தரவின் பேரில் தாமதப்படுத்தி பன்னீரை ஏவியிருக்கிறார்கள். காரணம் இனியும் தீபா வழியாக மறைமுக நெருக்கடியை சசிகலாவுக்கு கொடுத்த நிலையில் இனி அதை மறைமுகமாக செயல்படுத்த முடியாது என்பதால் வெளிப்படையாக வெளிவந்துள்ளார்கள். அதையே பாஜகவினர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதும், அந்த ஆதரவை மத்திய அரசோடும், ஆளுநரோடும் இணைத்து தமிழக சட்டமன்றத்தை குழப்ப நினைப்பதும் வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது.

Tags: , , ,

Category: அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply