அதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி?

Oleh: Arulezhilan
February 5, 2017

87-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அதிமுகவை ஒன்றாக்கி 91-ல் ஆட்சியைக் கைப்பற்றிய போது ஜெயலலிதாவுக்கு வயது 43.ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தோழியாக இருந்த சசிகலாவுக்கு இப்போது 62 வயது ஆகிறது. முதல்வராக இருந்து ராஜிநாமா செய்துள்ள பன்னீர்செல்வத்துக்கு இப்போது 66 வயது ஆகிறது.43 வயதில் கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க ஜெயலலிதா பட்ட துயரங்களோ, அடைந்த ஆக்கினைகளோ பன்னீருக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அதிமுக எனும் கட்சியும், அதன் ஆட்சியும் இருக்குமா என்பதே இப்போதைய கவலை?

டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாலை 6 மணிக்கு மரணமடைந்தார். ஆனால் அவர் மரணமடைந்த பின்னர் இரண்டு விதமான சோதனைகளை அவருக்கு செய்தனர். அந்த இரண்டும் வெற்றியடைய வாய்ப்பே இல்லை. காரணம் அவர் மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் இறந்து விட்டார்.அவரது உடலில் எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவேறு சோதனைகள் நடத்திக் கொண்டிருந்த போது பன்னீர் செல்வத்தை முதல்வராக்க கையெழுத்து பெறப்பட்டது. அதில் மத்திய பாஜக அரசின் செல்வாக்கு இருந்தது. சசிகலா 10.30 மணியளவில் அப்பல்லோவில் இருந்து கிளம்பி போயஸ் கார்டன் சென்ற பின்னர் அவரது மரணத்தை அறிவித்தார்கள்.
ஜெயலலிதா சமைத்து வைத்த ஆட்சியை பன்னீர் எடுத்துக் கொள்ள. அதிமுகவின் அவை விதிப்படி தொடர்ந்து 5 ஆண்டுகாலம் அடிப்படை உறுப்பிப்பினராக அல்லாத சசிகலாவை போட்டியின்றி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தார்கள். பன்னீருக்கும் சசிகலாவுக்கும் இடையில் பனிப்போர் நிலவியது உண்மை.

கடந்த இரு மாத பன்னீர்செல்வத்தின் ஆட்சியை கூர்ந்து கவனித்தால் தெரியும் மிக மோசமான அவரது நிர்வாகத் திறமையும், அரசை வழி நடத்திச் செல்ல திராணியற்று இருந்த அவரது நிலையும். மூன்று முக்கியமான விஷயங்களை எடுத்தால், வர்தா, வறட்சி, மெரினா போராட்டம் இம்மூன்றிலுமே பன்னீர் செல்வத்தில் நிர்வாகத் தோல்வி பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. இம்மூன்றிலுமே மத்திய அரசின் எண்ணங்களை அவர் தமிழகத்தில் ஈடேற்றி வந்தார்.

ஆனால் இன்னொரு பக்கம் கட்சிக்கு தலைமையேற்ற சசிகலாவுக்கும், ஆட்சிக்கு தலைமையேற்ற பன்னீருக்கும் இடையில் பனிப்போர் நடந்து வந்தது. அவை டெல்லி தம்பிதுரை தலைமையிலும், சென்னையில் பன்னீர் தலைமையிலும் வெளிப்படையாகவே தெரிந்து வந்தது. ஜல்லிக்கட்டுக்காக டெல்லி செல்வதற்கு முன்னால் சென்னை விமான நிலையத்தில் “மத்திய அரசோடு மென்போக்கு வேண்டும்” என்றார் பன்னீர் செல்வம்.அவர் கேட்ட உடன் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது. தமிழக முதல்வர்தான் என்றாலும் கூட இதே வாய்ப்புக்காக கடந்த 6 மாதங்களாக காத்திருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அவருக்கு கிடைக்காத வாய்ப்பு பன்னீருக்கு கிடைத்தது.மோடியுடன் பன்னீர் பேசிக் கொண்டிருந்த போது அதிமுக எம்,பிக்களுக்கு சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட தம்பிதுரை அதே டெல்லியில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதற்கு முன்னதாக நடந்த முக்கிய நிகழ்வு துக்ளக் ஆண்டு விழா அதில் பேசிய துக்ளக் ஆசிரியர் குடும்ப ஆட்சி என சசிகவாலைச் சாட. தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் ம.நடராசன் குருமூர்த்தியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். அதிமுகவை பாஜக அபகரிக்க நினைக்கிறது என்றார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நாட்களிலேயே உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்த போதே இந்தக் கருத்தை நான் எழுதியிருக்கிறேன்.ஆனால் அதிமுகவினர் குறிப்பாக சசிகலாவை இயக்கப் போகும் நடராசன் போன்றவர்களும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் போன்றவர்களும் பாஜகவை வெளிப்படையாகவே விமர்சித்து இதே குற்றச்சாட்டை வைத்தனர். ஆனால் அது பாஜக எதிர்ப்பு என்பதை விட பன்னீரின் இமேஜை உடைப்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டது.

இப்போதைய அதிமுகவை இரண்டு விதமாக பார்க்கலாம். மோடி ஆதரவு அதிமுகவினர் சசிகலா ஆதரவு அதிமுகவினர். நிச்சயமாக ஜெயலலிதா ஆதரவு அதிமுக என்ற ஒன்று இல்லை. அவரது காலில் விழுந்ததும், பம்மி பம்மி நடந்ததும் சுத்த நடிப்பு என்பதை அவரது மறைவுக்குப் பிந்தைய இரண்டு மாத காலத்திலேயே உணர்ந்திருக்கிறோம்.
இப்போதைய அதிமுகவை ஜெயலலிதாவின் இமேஜ் காப்பாற்றவில்லை.ஆனால் அவர் கொடுத்து விட்டு சென்றுள்ள வெற்றி காப்பாற்றுகிறது. இன்னும் நான்காண்டுகாலம் இருக்கிறது. இந்த நான்காண்டுகாலம் என்கிற வருடங்கள்தான் இப்போதைக்கு அதிமுகவை காப்பாற்றியிருக்கிறது.

சசிகலாவைப் பொறுத்தவரை முதல்வராகி தன் இமேஜை மக்களிடம் உயர்த்த நினைக்கிறார். 91-ஆம் ஆண்டு ஜெயலலிதா நடத்திய காட்டாச்சியின் பங்காளியாக இருந்த சசிகலாவுக்கு அந்த அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். ஜெயலலிதா கட்சியை ஒருங்கிணைப்பதற்கு முன்பு அதிருப்தியாளர்களைச் சந்தித்து தன் பக்கம் ஈர்த்தார். மொத்தமாக கட்சி தன் கைக்கு வந்த பிறகு அத்தனை பேரையும் ஓரம் கட்டி விட்டு தனக்கு விசுவாசமான செல்லப் பிராணிகளை மட்டுமே கட்சிக்குள் வளர்த்தார். அந்த செல்லப்பிரணிகள் இந்த நான்காண்டுகாலம் பதவியில் இருக்க விரும்புகிறது.
இப்போது சசிகலா அதிருப்தியாளர்களை சமாதானம் செய்திருக்கிறார். செங்கோட்டையன், பண்ருட்டியார், நாஞ்சில் சம்பத்,சைதை துரைசாமி,என நீளும் பட்டியலை அவர் சரிக்கட்டி அதிருப்தியை திருப்தியாக மாற்றியிருக்கிறார்.
அதன் மூலமாகவே இப்போது முதல்வரும் ஆகிறார். ஆளும் கட்சியின் பல்வேறு அனுகூலங்களை அனுபவிக்க காத்திருக்கும் அதிமுக பிரமுகர்களும், ஆளும் கட்சி பிரமுகர்களும் பன்னீரோ, சசிகலாவோ நமக்கு ஆதாயம் இருந்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள்.தவிறவும் அதிமுகவில் பெரியாரோ, அண்ணாவோ, காமராஜரோ முதல்வராக முடியாது சசிகலாவோ, பன்னீர்செல்வமோ, மதுசூதனனோ தான் முதல்வராக முடியும்.ஆக, சசிகலா முதல்வராகிறார் என்பதால் பதட்டமடைய அவசியமில்லை.

ஆனால், அதிமுக தொண்டர்கள் மன நிலை வேறாக உள்ளது. சசிகலாவுக்கு பெரும்பாலும் ஆதரவற்ற நிலையே காணப்படுகிறது. இதை பயன்படுத்தி தீபாவை பால்கனியில் நிறுத்தி பாஜக அரசியல் செய்ய முயல்கிறது.
சசிகலா முதல்வராகி விட்டார். ”ஜெயலலிதா பாணியில் ஆட்சி செய்வேன்” என்கிறார்.ஜெயலலிதா மறைந்த இந்த இரண்டு மாதத்தில் சசிகலாவின் நடவடிக்கைகள் நிதானமாகவே உள்ளது. ஜெயலலிதா போல அவர் மேக்கப் போட்டுக் கொள்கிறார்.பேச பயிற்சி எடுத்து பேசுகிறார். ஆனால் அவரைப் போல ஆட்சி நடத்துவது அத்தனை எளிதல்ல என்பதே நிதர்சனமான உண்மை.

சொத்துக்குவிப்பு வழக்கு பலவீனமாகி விட்டது. ஒரு வேளை தீர்ப்பு வந்து சசிகலா தண்டனை பெற்றால் ஜெயலலிதாவைப் போல மீண்டு வர முடியாது. அவரை பலி கொடுக்க வேறு ஒரு குழுவினர் தயாராக உள்ளார்கள். இப்போது சசிகலா தானே விரும்பி ஆபத்தான அந்த பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் இதில் வென்றால் அவர்கள் சசிகலாவுக்கு பின்னே நிற்பார்கள். சற்று சறுக்கினாலும் சசிகலாவை பலி கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.இப்போதைக்கு சசிகலாவுக்கு வாழ்த்துக்கள்!

Category: அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

One Comments

Leave a Reply