மயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்

Oleh: Arulezhilan
April 28, 2016

வருகிற ஏப்ரல் 17-ம் தேதி மயூரன் சுகுமாறனுக்கு 34-வது பிறந்த நாள். ஆனால் அந்த நாளைக் கொண்டாட, ஜாவா தீவில் இருக்கும் நுசகம்பன்கன் சிறையில் அவர் உயிரோடு இருப்பாரா அல்லது அதற்குள் அவரைச் சுட்டுக் கொன்றுவிடுவார்களா என்பது இந்த நிமிடம் வரை விடை தெரியாத கேள்வி!


ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவன் என்ற குற்றச்சாட்டில் மயூரன் சுகுமாறன் கைதுசெய்யப்பட்டதும், இதேபோல ஒரு பிறந்த நாளில்தான். 2005, ஏப்ரல் 17-ம் தேதி பாலி தீவில் கைதானார் மயூரன். ஒன்பது பேரை போதைப்பொருட்களோடு இந்தோனேஷியா காவல் துறை அதிரடியாகக் கைதுசெய்து ஊடகங்கள் முன்பு நிறுத்தியபோது, அன்று அதுதான் தலைப்புச் செய்தி. கைதானது இந்தோனேஷியாவில் என்றாலும், கைதானவர்களில் அதிகமானவர்கள் ஆஸ்திரேலியா குடிமக்கள். அந்த அதிரடிக் கைது வழக்குக்கு இந்தோனேஷியா அரசு வைத்த பெயர் ‘பாலி-9’.

வழக்கு நடந்த அடுத்த ஆண்டே, அதில் முதன்மைக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட மயூரன் சுகுமாறனுக்கும் ஆண்ட்ரூ சானுக்கும் சுட்டுக் கொல்லும் மரணதண்டனை வழங்கியது பாலி நீதிமன்றம். மேல் முறையீடுகள் தண்டனையை உறுதிசெய்ய, கடைசியாக எஞ்சியிருந்தது கருணை மனு மட்டுமே. இப்போது இந்தோனேஷியா அதிபர், இந்த இருவரின் கருணை மனுக்களையும் நிராகரித்துவிட்டார். நுசகம்பன்கன் சிறைக்கு மாற்றப்பட்டு, மரணத்தின் நிழலில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தன் மகனை எப்படி மீட்பது எனத் தவிக்கிறார் மயூரன் சுகுமாறனின் தாய் ராஜனி, ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புதம் அம்மாளைப் போல!

”என் அம்மாவும் அப்பாவும் இலங்கையில் இருந்தாலும், நானும் என் கணவர் சுகுமாறனும் லண்டனில் வேலை செய்தோம். அங்கேதான் மயூரன் பிறந்தான். இருவருமே வேலைக்குச் சென்று வந்ததால், அவனை இலங்கையில் இருந்த அவனது பாட்டியிடம் விட்டிருந்தோம். பிறகு, இலங்கைக்கு வந்து மயூரனை அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா சென்றோம். நான்கு வயதில் இருந்து அவன் ஆஸ்திரேலியாவில் படிக்கத் தொடங்கினான். ஒரு தாயாக அவனை வளர்த்தபோதும் சரி, சக மனிதனாக அருகில் இருந்து பார்த்தபோதும் சரி, அவன் அன்பானவனாகவே இருந்தான். பள்ளியில் கெட்டிக்காரன். தேவாலயத்தில் வாரம்தோறும் தன் கடமைகளை உற்சாகமாக நிறைவேற்றுகிறவன். அவனுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர். ‘பாலி-9’ வழக்கில் அவன் கைது செய்யப்பட்ட தினத்தில் இருந்து இன்று வரை எங்கள் குடும்பத்தில் யாராலும் அதை நம்ப முடியவில்லை. இப்போது அவனுக்கு இறுதித் தண்டனை வந்த பிறகு, அவனது வளர்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா எனச் சிலர் கேட்கிறார்கள். ஒரு தாய் தன் மகனை எப்படியெல்லாம் அன்பாக வளர்ப்பாளோ, அப்படித்தான் நான் அவனை வளர்த்தேன். அவனை மட்டும் அல்ல மூன்று குழந்தைகளையுமே. இடையில் அவன் திசைமாறிப் போயிருக்கலாம். நண்பர்கள் தவறாக வழிகாட்டியிருக்கலாம். ஆனால், இப்போது அது பற்றி பேசுவதோ, ஆராய்வதோ பலரையும் காயப்படுத்தும். நான் ஆஸ்திரேலிய மக்களிடமும் அரசிடமும் மன்னிப்புக் கேட்கிறேன். அவனை மன்னித்து, கருணை காட்டும்படி கேட்கிறேன். ஒரு தாயாக நான் இதை மட்டுமே செய்ய முடியும். எனக்கு என் மகன் வேண்டும்!

நாங்கள் அவனை விடுவிக்க இந்தோனேஷியா நீதிமன்றத்தில் போராடினோம். ஆஸ்திரேலியா வழக்குரைஞர்களின் உதவியோடு இந்தோனேஷியா வழக்குரைஞர்கள் இயன்றவரை வாதாடிப் பார்த்தனர். எந்தப் பலனும் இல்லை. நாங்கள் ஏன் அவனுக்காக இவ்வளவு போராடுகிறோம் என்றால், தன் வாழ்வில் இழைத்த ஒரு தவறுக்குப் பிராயச்சித்தமாக, சிறையில் மயூரன் சிறந்த மனிதனாக கடந்த 10 ஆண்டுகளாக வாழ்கிறான். தன்னால் முடிந்த உதவிகள் அனைத்தையும் பிறருக்குச் செய்கிறான். நான் தேவாலயம் போய் என் மகனுக்காகப் பிரார்த்திக்கிறேன். சிறைக்குப் போய் அவனைச் சந்திக்கிறேன். இதுதான் என் வாழ்க்கை என்றாகிவிட்டது. அவனை முதலில் வைத்திருந்த பாலி சிறை பற்றி வாசித்தபோது, அது மிக மோசமான கெட்ட கனவாக இருந்தது. அவனை நேரில் பார்த்தபோது, என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை. குமுறிக் குமுறி அழுதேன்; அவன் என்னைத் தேற்றினான். அதன் பின்னரும் நான் சில முறை அவனைச் சந்தித்தேன். ஆனால் ஒருபோதும் அவனிடம், ‘நீ இதைச் செய்தாயா?’ எனக் கேட்டது இல்லை; கேட்கவும் விரும்பவில்லை. இந்த உலகம் அவனைக் குற்றவாளி என்கிறது. அவன் செய்தது பயங்கரமான குற்றம் என்கிறது. ஆனால், அவன் என் மகன்… அவ்வளவுதான். நான் போனால், என்னிடம் தன் ஆஸ்திரேலிய நண்பர்கள் பற்றி விசாரிக்கிறான். தன்னைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு வீடு பற்றி, தெரு பற்றி, தேவாலயம் பற்றி தகவல் கேட்கிறான். தங்கையிடமும் தம்பியிடமும் படிப்பு பற்றி பேசுகிறான். யோகா செய்யுமாறு சொல்கிறான். தான் சிறைக்குள் பைபிள் வாசிப்பதாகவும், தான் வரைந்த ஓவியங்கள், டி ஷர்ட் அச்சடிக்கும் தொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டி, அதைப் போதைப் பழக்கத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் மறுவாழ்வுக்குச் செலவழிப்பதாகவும் சொல்கிறான். இதனால்தான் இன்னொரு முறை அவனுக்கு வாழும் வாய்ப்பை வழங்கக் கேட்கிறேன்” – அமைதியாகச் சொல்லிவிட்டு, அழுத்தமான மௌனத்தில் ஆழ்கிறார் ராஜனி.

‘பாலி-9’ வழக்கில் மரணதண்டனையை எதிர்நோக்கி இருக்கும் ஆண்ட்ரூ சானும் மயூரன் சுகுமாறனும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்தவர்கள்; எனினும், நெருங்கிய நண்பர்கள் இல்லை. 2002-ம் ஆண்டுவாக்கில் நெருக்கமாகிறார்கள். சீனா வம்சாவளியான ஆண்ட்ரூ சான் குடும்பமும், இடம்பெயர்ந்து ஆஸ்திரேலியா வந்த குடும்பம்தான். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அவல வாழ்வுக்குப் பலியாகும் பெரும்பான்மையானவர்கள் தங்களின் பூர்வீகங்களைத் தொலைத்து அலையும் அகதிகளே. பாலியில் வைத்து இந்தோனேஷியா போலீஸாரிடம் ஒன்பது பேரும் சிக்கியதே ஒரு பாசப் போராட்டத்தின் பக்கவிளைவு.

தன் மகன் தவறான பாதையில் செல்கிறான் என அவனைத் திருத்தும் வழி தெரியாத லீ ரஷ் என்கிற ஆஸ்திரேலியர், ஆஸ்திரேலியா போலீஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கிறார். ‘இந்தோனேஷியாவின் பாலி தீவில் தன் மகன் ஸ்காட் ரஷ் போதை மருந்து தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாகத் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், அந்தக் கடத்தல் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, தன் மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறும் தகவல் கொடுக்கிறார். ஆஸ்திரேலியா போலீஸ் இந்தத் தகவலை இந்தோனேஷியா போலீஸுக்கு சொல்ல, ஹெராயினோடு ஆஸ்திரேலியா விமானத்தில் ஏற இருந்த சிலர் கைதுசெய்யப்படுகிறார்கள். மயூரனை ஹோட்டல் ஒன்றில் வைத்து போலீஸ் கைது செய்தபோது, அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் மீட்கப்படவில்லை. அன்று மாலையே ஆண்ட்ரூ சானைப் போதைப்பொருளோடு போலீஸ் கைதுசெய்ய, ‘பாலி-9’ வழக்கு இருவரையும் இறுகப் பற்றிக்கொள்கிறது.

அண்ணன் பற்றிய நினைவுகளைக் கம்மிய குரலில் பகிர்கிறார் மயூரனின் சகோதரி பிருந்தா… ”எனக்கு அவன் ஒரு நல்ல சகோதரனாக இருந்தான். அவனை நோக்கி வீசப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வியாகவே இருந்தது. அவன் கைதுசெய்யப்பட்டபோது நாங்கள் நிலைகுலைந்துபோனோம். அப்போது நான் ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். படிப்பை அப்படியே கைவிட நேர்ந்தது. இன்று ஆஸ்திரேலியா அரசு எவ்வளவோ முயன்றும், என் அண்ணன் இன்னும் மரணத்தின் பிடியில் இருந்து விலகவில்லை. அவன் எங்கேயாவது ஓர் இடத்தில் உயிரோடு இருந்தால்கூடப் போதும். ஆனால், அது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாட்டில் இருந்து மரண தண்டனை விதிக்கப்படும் அந்நிய நாட்டின் சட்டப் பிடியில் இருந்து என் சகோதரனை மீட்கும் வழி தெரியாமல் தவிக்கிறோம். அவனைச் சுட்டுக் கொல்லும் நாளில் மரணிக்கப்போவது மயூரன் மட்டும் அல்ல… நான், அப்பா சுகுமாறன், அம்மா ராஜனி, தம்பி மைக்கேல்… என எங்கள் அனைவரின் மனசாட்சியும்தான். அன்று நாங்கள் அனைவருமே துயரமான ஒரு வாழ்க்கையினுள் விழப்போகிறோம். இப்போதே நாங்கள் தனித்து வாழ்கிறோம். எங்கள் வீட்டில் நல்ல சாப்பாடு சாப்பிட்டே பல நாட்கள் ஆகின்றன. அந்தக் கறுப்பு நாளுக்குப் பிறகு எங்கள் நிலை என்னவாக இருக்கும் எனக் கற்பனைகூட செய்ய முடியவில்லை.”

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் ஆறு பேர் கையெழுத்திட்டு, மயூரனையும் ஆண்ட்ரூ சானையும் விடுவிக்குமாறு இந்தோனேஷியா அரசாங்கத்துக்கு வைத்த கோரிக்கை யும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆஸ்திரேலியா கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரையும் மட்டும் ஒப்படைக்குமாறு கேட்டுப்பார்த்தது. அதற்கும் வளைந்து கொடுக்கவில்லை இந்தோனேஷியா. அடுத்த யோசனையாக, இவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கினால் ‘பாலி-9’ வழக்குக்காகச் செலவிட்ட மொத்த தொகையையும் வட்டியோடு திருப்பித்தருவதாகவும் கூறியது ஆஸ்திரேலியா. ஐ.நா-வின் மனித உரிமைக் கண்காணிப்பகம் உள்பட பல நாட்டு மனித உரிமை அமைப்புகளும் தலைவர்களும், அவர்கள் இருவருக்கும் ‘மரண தண்டனை விதிக்க வேண்டாம்’ என்ற கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால், ‘போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக எங்கள் அரசு வழங்கும் தண்டனையை ரத்துசெய்யக்கோரும் பேச்சுக்கு இடமே இல்லை. அது எங்களின் இறையாண்மையில் தலையிடும் செயல்’ எனக் கண்டிப்போடு சொல்லிவிட்டார் இந்தோனேஷியா அதிபர் ஜொகோ விடோடோ.

‘பாலி-9’ வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் மிக மோசமான குற்றம்புரிந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபாட், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்க மறுக்கிறார். ஏற்கெனவே சில பிரச்னைகளில் இருநாட்டு உறவுகளும் பாதிக்கப்பட்டிருக்க, இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அந்த நாடுகளின் உறவில் மேலும் விரிசல் விழலாம்.

10 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் மயூரன் சுகுமாறனின் மனநிலை என்ன?

‘நான் கைதுசெய்யப்படும் வரை, யாருக்கும் நான் எந்த ஒரு சிறு உதவியும் செய்தது இல்லை. மிக மிக சுயநலமாக என்னைப் பற்றி மட்டுமே யோசிக்கக்கூடிய ஒரு மனிதனாக இருந்தேன். வாழ்க்கையின் தேவைகள் என்ன, நோக்கங்கள் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்ளாமல் ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டேன். ஆனால், இந்தச் சிறை வாழ்க்கை, எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்துவிட்டது. இப்போது நான் மனிதர்களைப் பற்றி நிறையவே யோசிக்கிறேன். அவர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ, அதை மட்டும் செய்கிறேன். இப்போது நான் வாழ ஆசைப்படுகிறேன். ஏனென்றால், நான் கைதுசெய்யப்பட்டதில் இருந்து இந்த நிமிடம் வரையிலான என் வாழ்வை நான் அர்த்தம் உள்ளதாக மாற்றியிருக்கிறேன். எனக்குத் தெரியாத பல விஷயங்களை வாழ்க்கை இப்போது கற்றுக்கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியா மக்களிடமும் இந்தோனேஷியா மக்களிடமும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் அனைவரிடமும் நான் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்’ என்பதே மயூரன் கடைசியாக உலகத்துக்குச் சொன்ன செய்தி. அவரால் இனி வெளியுலகைத் தொடர்புகொள்ள இயலாது. ஏனென்றால், மரண தண்டனையை நிறைவேற்றும் ஜாவா தீவின் நுசகம்பன்கன் சிறை அத்தனை கொடியது.

நுசகம்பன்கன் சிறைக்கு மாற்றப்படும் எந்தக் குற்றவாளிக்கும் 72 மணி நேரத்தில் தண்டனையை நிறைவேற்றிவிடுவதுதான் இந்தோனேஷியா மரபு. ஆனால், அந்தச் சிறைக்கு மாற்றப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் ஆண்ட்ரூ சானுக்கும் மயூரன் சுகுமாறனுக்கும் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதை ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகப் பார்க்கிறார்கள் சிலர். அதே சமயம், ‘இந்தத் தாமதம் மயூரனின் பிறந்த நாளை எதிர்நோக்கியா?’ என்பதும் விடை தெரியாத கேள்வி!காலம், பல தவறுகளைச் சரிசெய்யலாம். ஆனால், கருணை என்பது காலம் கருதி வருவதல்ல. மயூரன், ஆண்ட்ருவின் முடிவு கருணையின் கையிலா… சட்டத்தின் கையிலா என்பதை காலம்தான் முடிவுசெய்யும்!

சிறையில் என்ன செய்கிறார்கள்?

‘பாலி-9’ வழக்கில் கைதுசெய்யப்பட்ட மயூரன் சுகுமாறனும் ஆண்ட்ரூ சானும் எப்படி இருக்கிறார்கள்? கைதுசெய்யப்பட்ட சில நாட்களிலேயே புதிய வாழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட மயூரன், தனக்குள் இருந்த ஓவியத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிறையில் தான் வரைந்த ஓவியங்களை ஏலம்விட்டு, அதில் வந்த தொகையை மது அடிமைகள் மறுவாழ்வு மையத்துக்குக் கொடுத்தார். தனது கடந்தகாலத்தை மறக்கவும், மன அமைதிக்காகவும் மயூரன் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்தார். அவற்றில் பல ஓவியங்களில் தன் அம்மா, தங்கை, தம்பி, நண்பன் ஆண்ட்ரூ சான் ஆகியோரோடு தன்னையும் வரைந்திருக்கிறார் மயூரன்.

ஆண்ட்ரூ சான், போதைப் பழக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டு, சிறையில் கிறிஸ்தவ போதகர் ஆகிவிட்டார். தன் காதலியை மணம் முடித்திருக்கும் ஆண்ட்ரூ சான், தன் சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதில், ‘என் குடும்பத்தில் நடந்த திருமணங்களுக்கு நான் சென்றது இல்லை. யாராவது இறந்தால், அந்த இறுதிச் சடங்குகளுக்குக்கூட நான் சென்றது இல்லை. என் குடும்பத்தினருடன் நான் ஒருபோதும் நேரம் செலவிட்டது இல்லை. ஆனால், இப்போது இந்த வலிகளையும் வேதனைகளையும் நான் மட்டும் அனுபவிக்கவில்லை; என் குடும்பமும் சேர்ந்து அனுபவிக்கிறது’ என எழுதியிருக்கிறார்!

நன்றி- ஆனந்த விகடன்

Category: அனுபவம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply