கல்லறைகள்

Oleh: Arulezhilan
November 21, 2015

’’நீதிமான் மடிந்து போகிறான்,ஒருவனும் அதை கவனிக்கிறதில்லை…
நேர்மையாய் நடந்தவர்கள் தங்கள் படுக்கையில் இளைப்பாருகிறார்கள்…”
என்கிறது விவிலியம்.

கல்லறைக்குப் போவதென்பது கத்தோலிக்க வழிபாட்டு பண்பாடுகளில் ஒன்று. நீத்தாரை நினைவு கூர்வதும், அவர்களுக்காக கல்லறைகளை அலங்கரிப்பதும் மிக முக்கியமானது. அது முக்கியமான ஒரு பண்பாக இருந்த காரணத்தால்தான் இயேசு தன் சொந்த சமூகத்தாரை விமர்சிக்கும் போது ’’வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்” என்று கல்லறைகளோடு வியாபாரிகளை ஒப்பிட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே ஓரமாக இருக்கும் கல்லறை, தாமஸ் குன்றின் கீழே இருக்கும் யுத்தக் கல்லறை, பழவேற்காட்டில் இருக்கும் டச்சுக்கல்லறை, பட்டினப்பாக்கத்தில், காசி மேட்டில் இருக்கும் கல்லறை என பல கல்லறைகளுக்கு நான் சென்றிருந்தாலும் கூட கீழ்பாக்கம் கல்லறைக்கு ஒரு முறை கூட சென்றதில்லை. இத்தனைக்கும் சென்னையின் பழமையான கல்லறைகளில் ஒன்று, எண்ணிக்கையில் பெரிய கல்லறையும் கூட இதுதான்.

மழை சின்னதாய் பெய்து கொண்டிருந்த ஒரு மாலையில் கீழ்பாக்கம் கல்லறைக்குள் நுழைந்தேன். பெரும்பாலும் அடர்த்தியான மரங்கள் மழையை ரம்மியமாக்குவதோடு சூழலை இறுக்கமாக்குகிறது. 16 ஏக்கரில் சதுர வடிவத்தில் அமைந்திருக்கும் கல்லறையின் வடக்குப் பகுதி முழுக்க வேப்பமரங்கள் அடர்ந்து இருக்கின்றன. இப்போது 45,000 ல் இருந்து 50,000 வரையிலான கல்லறைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். 1903 -ல் உருவான கல்லறையில் இதுவரை லட்சக்கணக்கானோர் அடக்கம் செய்யப்பட எஞ்சியிருப்பது இவைகள்தான். 1903- ல் அடக்கம் செய்யப்பட்ட அந்த முதல் மனிதன் யார் என்று தேடினால் கண்டு பிடிக்க முடியவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் கல்லறைகளால் நிரம்பி வழிகிறது அந்த தோட்டம்.

1931 -ல் அடக்கம் செய்யப்பட்டவரின் கல்லறை

அந்த முதல் மனிதரின் கல்லறையை தேடினேன் அநேகமாக கல்லறையின் வடக்குப் பகுதியில் முதலில் புதைக்கப்பட்டவரின் கல்லறை இருக்கலாம் என்று போனால் அவைகள் அழிந்து விட்டன. இப்போது அதிகமும் 1931 முதல் அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகள் உள்ளது. சில வெளிநாட்டுக்காரர்களும் நம்மவர்களும் புதைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு கல்லறையில் ‘’30 ஆண்டுகளாக இவர் ஆசிரியராக இருந்தார்” என எழுதியிருந்தார்கள். 30 பதுகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களில் யாரால் பழிங்கு கல்லறை கட்ட முடிந்ததோ, அல்லது வலிமையாக ஒரு கூட்டை எழுப்ப முடிந்ததோ அவர்கள் இப்போதும் நீடித்திருக்கிறார்கள். அப்படி கட்ட முடியாதவர்களின் கல்லறைகள் அழிந்து போய் விட்டன.

பழைய கல்லறை ஒன்று

கீழ்ப்பாக்கம் கல்லறையை கல்லறையை கல்லறைத் தோட்ட வாரியம் ( Madras Cemeteries Board) பராமரிக்கிறது. கீழ்ப்பாக்கம் கல்லறையின் வலது பக்கம் ரோமன் கத்தோலிக்கர்களை அடக்கம் செய்யவும், இடது பக்கத்தை சீர்திருத்த கிறிஸ்தவர்கள் (C.S.I) அடக்கம் செய்யவும் அனுமதித்திருக்கிறார்கள். சராசரியாக நாளொன்றுக்கு மூன்று முதல் ஆறு சடலங்கள் வரை வருகிறதாம். ஒரு கட்டத்தில் இட நெருக்கடியைத் தவிர்க்க பலரையும் அடுக்கடுக்காக அடக்கம் செய்யும் multi tier vault யை 2007 ல் உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதையும் விரிவாக்க வேண்டிய நெருக்கடி உருவாக புதிய கல்லறையை உருவாக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருகிறது வாரியம். கல்லறைகளைப் பேணி ஆண்டு தோறும் கல்லறைத் திருநாளில் தோட்டத்திற்கு வந்து போகும் மரபும் கொண்ட கத்தோலிக்கர்களுக்கு இப்போது சென்னையில் அடக்கம் செய்ய ஒரு இடம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

முன் பதிவு


இதனால் இறக்கப் போகும் தங்களின் உறவினர்களுக்காக அவர்கள் கல்லறைத் தோட்டங்களில் இடங்களை முன்பதி செய்து {RESERVED} என்று கல் பதிந்து வைத்திருக்கிறார்கள். தங்களுக்காக தன் மகன் இப்படி ஒரு இடத்தை ரிசர்வ் செய்து வைத்திருக்கிறார் என்பதை அந்த பெற்றோர் அறிந்தால் அவர்களின் மனதுக்குள் என்ன விதமான எண்ணங்கள் ஓடும். அந்தக் கணத்தை அவர் எப்படி எதிர்கொள்வார்?

இவாஞ்சலின், டி.ஜி.எஸ் தினகரன் கல்லறை


கல்லறையை சுற்றி வந்த போது வலப்பக்கமாக அடக்கம் செய்யப்பட்டிருந்த சி.எஸ்.ஐ கல்லறை பகுதியில் போதகர் டி.ஜி.எஸ் தினகரன் கல்லறை இருந்தது. அவருக்கு முன்பே இங்கு வந்து சேர்ந்து விட்ட அவரது மகள் இவாஞ்சலின் தினகரனோடு அவர் புதைக்கப்பட்டிருக்கிறார். இருவருக்குமாக சேர்த்து ஒரு கல்லறையை கட்டியிருக்கிறார்கள். இவாஞ்சலின் ஒரு வாகன விபத்தில் சிறுமியாக மரித்துப் போனார். அந்த மரணம் தினகரன் குடும்பத்தை வெகுவாக பாதித்திருந்தாலும் கூட அதன் பிறகு அவர்களால் இயேசு அழைக்கிறார் என்னும் பிரசங்க சபையை பிரமாண்டமாக கட்டி எழுப்ப முடிந்தது.

கித்தேரியம்மாள் கல்லறை


வடக்கன் குளத்தைச் சார்ந்த கித்தேரியம்மாள் கல்லறை இருந்தது. கித்தேரியம்மாள் என்ற பெயர் மீனவ மக்களிடம் அதிக அளவு புழக்கத்தில் உள்ளது. கீழ்த்திசை திருச்சபை மரபில் வந்த புனித குவித்தேரியா ( Quiteria) பற்றி பெஸ்கி என்ற பெயரைக் கொண்ட வீரமாமுனிவர் கித்தேரியம்மாள் அம்மானையை இயற்றினார்.அடித்தட்டு மக்களிடையே போர்ச்சுக்கீசியர் பெண் தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்த போது கித்தேரியம்மாள் வழிபாடு தென் தமிழகத்தில் பரவ பலரும் தங்கள் பெயரை கித்தேரியம்மாள் என வைத்துக் கொண்டனர். அந்த மரபில் 20 ம் நூற்றாண்டில் வந்தவராக இந்த வடக்கன்குளம் கித்தேரியம்மாள் இருந்திருக்க வேண்டும்.

அனிதா ஜோன்ஸி என்பவரின் கல்லறையில் கல்குறும் பொத்தை, குமரி மாவட்டம் என எழுதியிருந்தார்கள். பெரும்பலான கல்லறைகள் சாதி அடையாளம் இல்லாமல் இருக்க கல்லறையிலும் சாதியோடு உறங்குகிறவர்களும் இருக்கிறார்கள். இந்திய சாதி அமைப்பிற்கு கத்தோலிக்கம் பலியானதன் அடையாளமாக இதைக் கொள்ளலாம். கல்லறையை முழுவதுமாக சுற்றிப் பார்க்க ஒரு நாள் வேண்டும். ஒரு கல்லறையை கடக்கும் போது எவர் எத்தனை வயதில் மரித்திருக்கிறார் என பார்க்கத் தோன்ற நேரம் ஆகி விட்டது திரும்பினேன். ஒரு மெழுவர்த்தியை கொளுத்தி வைத்தால் மழைத்தூரலில், காற்றில் அணைந்து விடும் என்று ஒரு பாக்கெட் மெழுகுவர்த்தியை யாரோ கொளுத்தி வைத்திருக்கிறார்கள். அது அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

பிரமாண்ட கல்லறைகள், போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், சீனர்கள், ஜப்பானியர்களோடு நம்மவர்களுமாக ஒரு சர்வதேசமே அங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கல்லறை என்பது வரலாற்றுப் பொக்கிஷம். தனிமனிதனின் வரலாறு மட்டுமல்ல சமூகத்தின் வரலாறுகளும் அதனுள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

குழந்தைக்காக கட்டிய கார் கல்லறை

நான் திரும்பி நடக்கத் துவங்கினேன். ஒரு குட்டி கார் வடிவத்தில் ஒரு கல்லறையை அமைத்திருந்தார்கள். அதை போட்டோ எடுத்து விட்டு அருகில் போய் பார்த்த போதுதான் தெரிந்தது பிறந்து இரண்டாவது நாளே இறந்த குழந்தையை அடக்கம் செய்திருந்தார்கள். INFANT CHRISTY DAFNY என்ற பெயரைக் கொண்ட அந்த பெண் குழந்தை 1990 நவம்பர் 8 -ம் தேதி பிறந்து , 10 -ம் தேதி மரித்து போக அதை கார் வடிவ கல்லறையில் புதைத்திருக்கிறார்கள். அருகில் இருக்கும் கல்லறையைப் பார்த்தேன்.ஒரே நாளில் இறந்த ஜோசப் வாஸ் என்ற குழந்தையின் கல்லறை அந்த பகுதி முழுக்க சிசுக்களின் கல்லறைகளே மிகுதியாக இருந்தது. அதிகமும் சில நாட்களில் இறந்தவைகள்… மனசு என்னமோ போலாகி விட்டது. ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே இறந்து விட்டதால் இவர்களாக ஒரு பெயரை வைத்து புதைத்திருக்கிறார்கள். நான் அந்த பெரிய கல்லறையை விட்டு வெளியில் வந்தேன். ஒருவரை அடக்கம் செய்ய ஆட்கள் உள்ளே நுழைகிறார்கள். வெளியில் தூரலில் நடந்து கொண்டிருந்த என்னோடு ஒரு பொம்மை கார் வந்து கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு…

Tags: , , , , ,

Category: அனுபவம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

2 Comments

Leave a Reply