விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு! -யார் இந்த கோவன்?

Oleh: Arulezhilan
November 3, 2015

‘காளையார் கோயிலு காட்டுக்குள்ளே
ரெண்டு கன்னி கழியாத மாமரங்க
அது பூக்கவுமில்லே காய்க்கவுமில்லே
மருதிருவர் இன்னும் சாகவில்ல…’

-காட்டுச் சுனையாக, புரட்சிக் கனலாகப் பொங்கிப்பரவு கிறது அந்தக் கலகக்காரன் குரல்!

‘‘இது நான் பாடினதில்லை. வெள்ளையனை எதிர்த்து வீரமரணம் அடைந்த மருது சகோதரர்கள் பற்றி சிவகங்கை பக்கம் சின்ன மருதங்குடியில் இன்னும் இதைக் கும்மிப் பாடலாகப் பாடிட்டிருக்காங்க, மானமுள்ள சனங்க. எந்த இசைப் பள்ளியும் கத்துக் கொடுக்காத ராகங்களை எனக்குக் கத்துத் தந்த வாத்தியாருங்க அந்த மக்கள்தான். இன்னும் சாதியம், பொருளாதாரம், அரசியல் அதிகாரம்னு அத்தனை தளத்திலும் அடிமைப்பட்டுக் கிடக்கிற அந்த மக்களோட விடியலுக்கு விளக்கேத்த அவங்க பாட்டுகளையே ஆயுதமா தூக்குறேன் நான்!’’

-கையிலிருக்கும் பறையைக் காதலுடன் வருடியபடி பேசுகிறார் கோவன்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவின் தெருப் பாடகன். சுண்டு விரலில் செங்கொடியை இறுக்கக் கட்டிக்கொண்டு, சக தோழர்களோடு இவர் பாடும்போது மொத்தக் கூட்டமும், ரத்த ஓட்டம் திசைமாற ரசித்துச் சிலிர்க்கிறது. குழுவோடு கோவன் சேர்ந்து ஆடுகிற ஆட்டத்தின் அத்தனை அடவுகளிலும் அடங்காத ஆவேச தாண்டவம்.தஞ்சாவூர், திருவள்ளுவர் திடலில் ஒவ்வொரு வருடமும் ம.க.இ.க நடத்தும் ‘தமிழ் மக்கள் இசைவிழா’வில் உயிரும் உணர்வுமாக ஒலிக்கும் கோவனின் குரல் ரொம்பவே பிரபலம். கடந்த வாரம் களைகட்டிய விழாவிலும் அதிர்ந்தது கோவனின் பாட்டுப்பறை.

‘‘நான் பார்த்த முதல் பாடகி என் அம்மா. அவங்கதான் என் முதல் குரு. இங்கே கீழத் தஞ்சை பக்கம் ஒரு சின்ன கூலி விவசாயக் குடும்பத்தில் தான் நான் பிறந்தேன். அந்தா இந்தானு ஆட்டங் காட்டி அலைக்கழிக்கிற வெவசாய மண்ணு இது. ஆனா, பாட்டுக்குப் பஞ்சம் இல்லாத பூமி! நெல்லைக் கொட்டிவைக்கிறதுக்குப் பேரு பத்தாயம்னு சொல்வாங்க. தஞ்சாவூரு மண்ணே பாட்டுங்க கொட்டிவெச்ச பத்தாயந்தான். நடவுப்பாட்டு, கும்மி, அம்மானை, ஒப்பாரினு விவசாயக் கூலியா இருந்த அம்மாவுக்கு அத்தனையும் தெரியும். அவங்ககிட்ட இருந்துதான் எனக்குள்ள பாய்ஞ்சுது இந்தப் பாட்டு ரத்தம். ‘ஏ..தண்ணி வந்தது தஞ்சாவூரு, மடை தெறந்தது மாயவரம்…’னு காவிரியில திறக்கப் போற தண்ணியை எதிர் பார்த்து ஏங்கிப் பாடுவாங்க. இங்க வயக்காடுதான் வாழ்க்கை. வெத வெதச்சதுலேருந்து அறுத்துக் களம் பார்க்குற வரைக்கும் ஒழைப்பு, நெனைப் புனு எல்லாத்தையும் கதிருக்குள்ளதான் ஒளிச்சுவெப்பான் உழவன். ‘சாமக் கோழி கூவும் நேரத்துல நாங்க சம்பா அறுவடை செய்யப் போனோம்… வெளக்கு வெக்கிற நேரம் வரை ரத்த வேர்வையும் காயாமப் பாடுபட்டோம்’னு சுகம், சோகம்னு எல்லாச் சுமைகளையும் பாட்டுல இறக்கிவைக்கிற பாட்டாளிங்க நாங்க. இதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளர்ந்தேனே தவிர, ஒவ்வொரு பாட்டுக் குள்ளேயும் ஒளிஞ்சுகிடக்குற அரசியலோ, அந்த ராகத்தோட உசுரோ எனக்குத் தெரியாது.

வளர்ந்து பொழைப்புக்கு நின்னப்ப திருச்சி பெல் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேதான் என் தோள் பிடிச்சு அணைச்சு இழுத்தது கம்யூ னிஸ தோழமை. அங்கே பழக்கமான தோழர்களுக்குச் சாப்பாட்டு நேரத்துல இந்தக் கிராமத்துப் பாட்டெல்லாம் பாடிக் காட்டுவேன். அதையெல்லாம் கேட்டுட்டு அந்தத் தோழர்கள்தான் என் புத்திக்குள்ளே பொசுக்குனு விளக்கேத்தி வெச்சாங்க. ‘தோழர்! உங்களோட இந்தக் குரல் வளம், பாடல்கள் இதெல்லாம் மக்களோட விடுதலைக்குப் பயன்படணும். யாருக் கும் பிரோயஜனப்படாத ஒரு கலை எதுக்கு..? நமக்கு எவ்வளவோ தந்த இந்த மண்ணுக்கும் சனத்துக்கும் நாம என்ன தரப்போறோம்?’னு அவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்னைச் செதுக்கிச் செதுக்கி சிவப்புச் சிந்தனையை ஊட்டிச்சு. ‘நம்ம தாத்தனும் அப்பனும் ஆத்தாவும் கால காலமா வயக்காட்டுல கிடையாக் கிடந்து உழைச்சாங்க. ஆனா, நமக்குனு கால்காணி நிலம்கூட இல்லாம போச்சே, ஏன்?’னு நானே யோசிச்சேன். ‘நமக்கு மட்டுமா, நாட்டுல ஒரு பெரிய சனக் கூட்டத்துக்கே இதானே நிலைமை!’ சிந்தனை விசாலமானப்ப தான் அந்தத் தோழர்களோட போய் அரசியல் பிரசாரத்துக்கு என் பாடல்களையே ஆயுதமாக்குறதுனு முடிவு பண்ணினேன். பார்த்துட்டிருந்த வேலையை உடனே உதறினேன். மக்களுக்காக மக்களோட பாடல்களைப் பாடுறதையே முழு நேரப் பணியா எடுத்துக்கிட்டேன். அப்பதான் ‘மக்கள் கலை இலக்கியக் கழக’த்துல சேர்ந்தேன். இருபது வருஷமாச்சு… இன்னும் என் பாட்டுகளும் தீரலை; என் கோபமும் மாறலை’’ என்கிற கோவன், ம.க.இ.க-வின் பணிகள் பற்றிப் பேசுகிறார்…

‘‘ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்தத் தமிழ் மக்கள் இசைவிழா உழைக்கும் பாட்டாளி மக்கள் விடுத லைக்கு உணர்வுகளைப் பெற்றுச் செல்லும் விழாவாக நடைபெறுகிறது. திரைப்படம், தொலைக்காட்சி என அத்தனை ஊடகங்களிலும் நம் மக்க ளுக்கான அடையாளங்கள் தொலைந்து வரும் சூழலில் தப்பாட்டம், கும்மி, நாடகம், ஒயிலாட்டம், ஜிப்ளா மேளம், தமுரு மேளம், உடுக்கடி, வில்லுப் பாட்டு என்று மக்களின் கலை வடிவங்களை மேடை ஏற்றி, அதில் புதிய புதிய விஷயங்களையும் சொல் கிறோம். இது தவிர, வருஷம் முழுக்க ஊர் ஊராகப் போய் கலை நிகழ்ச்சி நடத்துறோம். மதவெறிப் பாசிசம், ரௌடி அரசியல், அந்நிய அடிமை மோகம், தண்ணீர் பிரச்னைனு ஒவ்வொன்றையும் பாட லாக்கி மக்கள் மன்றத்தில் வைப்பதுதான் எங்கள் வேலை. எப்போதும் பாடலும் இசையும் தமிழ் மக்களின் உயிரிலும் உணர்விலும் கலந்தது. கூட்டம் போட்டு மைக் பிடிச்சுப் பேசுவதை விட பாட்டாகச் சொன்னால் உடனே அவர்களைப் போய்ச் சேர்ந்துவிடும்.

மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட திப்புசுல்தான், கட்டபொம்மன்- மருது சகோதரர்கள் போன்ற பாளையக்காரர்களை ஒருங்கிணைத்து வெள்ளையருக்கு எதிரான புரட்சியினைத் தெற்கில் நடத்தினான். அது நடந்து முடிந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. வெள்ளைக்காரன் வெளியேறி 60 ஆண்டுகள் ஆகிவிட் டன. ஆனால், இன்று எத்தனை இளைஞர்களுக்கு திப்புவையும் மருதுவையும் கட்ட பொம்மனையும் தெரியும்? இரண்டு நூற்றாண்டுகளுக் குப் பிறகும் நமது கல்வித் திட்டத்தில் திப்புவுக்கும் மருது சகோதரர்களுக் கும் சரியான இடம் இல்லையே! தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளே அவர்களின் உண்மை வரலாற்றை மறைத்துவிட்டன. தேசியக் கொள்கையில் ஊறிய மதவாத பி.ஜே.பி-யும் இந்த வீரப் போராளிகளைப் புறந்தள்ளியே வந்திருக்கிறது. திப்புசுல்தானின் கதையைத் தொடராக ஒளிபரப்பிய அரசுத் தொலைக்காட்சி அந்த உண்மைக் கதையை கற்பனைக் கதை என்றுதான் டைட்டில் போட்டு ஒளி பரப்பினார்கள். ஏன் இதையெல்லாம் சொல்கி றோம்..? ஒவ்வொரு தலை முறையும் வரலாற்றிலிருந்து பாடம் படிக்க வேண்டும். அப்போதுதான் இன்றைய அரசியலை, வாழ்க்கையை, போராட்டத்தை வடிவ மைத்துக்கொள்ள முடியும்’’ என்பவர் சட்டென்று,

‘‘பாப்பாபட்டி, கீரிப்பட்டி சாதி அடக்குமுறையில் ஆரம்பித்து அயோத்தி, குஜராத் கலவரம், திராவிடக் கட்சிகளின் சுரண்டல், அமெரிக்க ஏகாதிபத்திய திமிர் வரை எல்லாவற்றை யும் பாடலாக்கி மக்களிடம் சொல்கிறோம். சந்தடி மிகுந்த தெருக்களிலோ, ரயில் நிலையத்திலோ, நடைபாதை களிலோ எங்களை நீங்கள் சந்திக்கலாம். நீங்கள் எங்களது உண்டியலில் இடுகிற சொற்பக் காசுகளில்தான் இன்னும் நாங்கள் கட்சி வளர்க்கிறோம்… கலை வளர்க்கிறோம். மற்றபடி அரசிட மிருந்து சிறு உதவியும் எதிர் பார்ப்பதில்லை. சமூகப் பொறுப்பு உணர்வில்லாத எந்தவொரு கலையும், அறிவும் அடிமை மோகத்தை தான் வளர்த் தெடுக்கும். அறிவு முகமூடியோடு மக்களை அடிமையாக்க அலையும் கலையைத் தான் இங்கே பலர் செய்கிறார்கள். நாங்கள் எங்கு போய் கலைநிகழ்ச்சி நடத்துகிறோமோ, அங்குள்ள மக்களிடம் என்ன கிடைக்கிறதோ, அதை வாங்கிச் சாப்பிடுகிறோம். மக்களை மயக்குவதும், பிரமிக்கவைப்பதுமல்ல எங்கள் பணி. பறையாலும் பாடலாலும் அவர்களை விழிக்க வைப்பதே எங்கள் வேலை!’’ என்றபடி கோவன் குரலெடுக்க, தோழர்கள் பறையெடுக்க, விடியலுக்கு விழா எடுக்கிறது அந்தப் பாடல்…

‘‘ஏய்… ஓடையில தண்ணி வந்தா
நாணல் தலையாட்டும்
ஓடிவரும் நீரைக் கண்டா
நாத்தும் சிலுசிலுக்கும்

வாய்க்கா வரப்புல பாட்டுச் சத்தம்
வானத்து மேகமும் கேட்டு நிக்கும்…
பாலுக்கு அழுவும் எங்க புள்ளயும்
பாட்டுச் சத்தத்த கேட்டுறங்கும்..! ’’

Category: அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

One Comments

Leave a Reply