கட்டிடம் தான் பிரச்சனை – விஷால்

Oleh: Arulezhilan
October 19, 2015

நடிகர் சங்கத் தேர்தல் நெருங்க நெருங்க, விஷால் அலுவலகத்திலும் பரபரப்பு திமிறுகிறது. ’தேர்தல் வியூகம்’ வகுத்துக் கொண்டிருக்கிறார் விஷால்.

’’நீங்க நடிக்க ஆரம்பிச்சு பத்து வருஷமாச்சு. இப்போ சினிமாவில் உங்க இடம் என்ன?”

’’ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு ஹீரோ வர ஆரம்பிச்சுட்டாங்க. திறமை இருக்கிறவங்க, தங்களை நிரூபிச்சு ஜெயிக்கிறாங்க. இந்தப் பத்து வருஷத்துல நான் சாதிச்சது என்னன்னு கேட்டா, இத்தனை வருஷமும் நிலைச்சு நின்னதுதான். இந்த ரேஸ்ல நானும் இருக்கேன்கிறதே எனக்குப் பெரிய சந்தோஷம்.”

‘’நடுவுல ’பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’னு வேற ட்ராக்ல போனீங்க. இப்போ மறுபடியும் ’பூஜை’. ‘ஆம்பள’னு கமர்ஷியல் ரூட்டுக்கே வந்துட்டீங்களே?”

’’ ‘அவன்இவன்’ மாதிரியான பெர்ஃபார்மன்ஸ் படங்களில் மட்டுமே நடிச்சுட்டு இருக்கிறது ஒரு ஹீரோவின் கேரியருக்கு ஆரோக்கியம் இல்லை. ‘பூஜை’ வசூல்ரீதியா ரொம்பத் திருப்தி கொடுத்த படம். தியேட்டருக்கு வந்தவங்களை கலகலனு சிரிக்கவெச்சு அனுப்பின படம் ஆம்பள’. இதுவும் ஒருவிதமான வெரைட்டிதான். அடுத்து சுசீந்திரனுடன் ‘பாயும் புலி’ பண்றேன். எனக்கே எனக்குனு ஒரு போலீஸ் கதை ரெடி பண்ணியிருக்கார் சுசீந்திரன். அப்புறம் சண்டக்கோழி2’ படத்துக்காக லிங்குசாமி சார்கூட சேர்றேன். முதல் பாகத்தைவிட செம சூப்பரா பண்ணணும்னு பேசிட்டே இருக்கோம். சினிமாவில் பத்து வருஷத்தை நல்லபடியா திருப்தியாகவே கடந்திருக்கேன்.”

’’மகாபாரத யுத்தம் மாதிரி நடிகர் சங்கப் பஞ்சாயத்து நீண்டுட்டே இருக்கே… எப்போதான் முடியும்?”

’’அட… நானும் அதைத்தாங்க கேட்கிறேன். அரை மணி நேரப் பேச்சுவார்த்தையில முடிய வேண்டிய விஷயத்தை, ரெண்டரை வருஷமா இழுத்துட்டே இருக்காங்க. அதுக்கு சத்தியமா நாங்க காரணம் இல்லை. கட்டடத்தை நீங்களே கட்டுங்க… இல்லைன்னா எங்ககிட்ட பொறுப்பை ஒப்படைங்கனுதான் கேட்கிறோம். சரத்குமார் சார், ராதாரவி சார் சேர்ந்து பண்றாங்களோ அல்லது நாங்க பண்றோமோ… கட்டடம் வரணும். அதுதான் வேணும். அதுவரை நாங்க கேள்வி கேட்டுட்டேதான் இருப்போம்.”

’’அரசியல் பின்னணி கொண்ட சரத்குமார், ராதாரவியை எதிர்த்து நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயிக்க முடியும்னு நம்புறீங்களா?”

’’தேர்தலில் நின்னு பதவியைக் கைப்பற்றணும்கிறது என் ஆசை கிடையாது. எப்போ விஷயம் கை மீறிப் போயிடுமோனு தோணுச்சோ, அப்பதான் தேர்தல்ல நிக்கலாம்னு முடிவெடுத்தோம். இப்போகூட சொல்றேன். ராதாரவி சாரோ, சரத்குமார் சாரோ… ’வாங்க… எல்லோரும் ஒற்றுமையா நின்னு கட்டடம் கட்டலாம்’னு சொன்னா, நாங்க தேர்தல்ல போட்டியிடவே மாட்டோம். கட்டடம்தான் இங்கே பிரச்னையே தவிர, அவங்க என்ன கட்சி… நாங்க என்ன கட்சிங்கிறது இல்லை. அதனால வெற்றிதோல்வியைப் பற்றி கவலைப்படாம தேர்தலில் போட்டியிடப்போறோம். என்ன நடக்குதுனு பார்த்துரலாம்.”

’’நடிகர் சிவகுமாரை உங்கள் தரப்பு வேட்பாளராக நிறுத்தப்போறீங்களாமே?”

’’சிவகுமார் சாருக்கு நடக்கிற எல்லா விஷயங்களும் தெரியும். கார்த்திகிட்ட இது பற்றி நிறையப் பேசிட்டே இருக்கோம். எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியா இருக்க வேண்டிய பொறுப்பு சிவகுமார் சாருக்கு இருக்கு. அதனால தேர்தல்ல அவரோட பங்கும் இருக்கணும்னு விரும்புறோம்.”

’’திடீர்னு திருட்டு டி.வி.டிக்கு எதிரா ரெய்டு அடிச்சு பரபரப்பு கிளப்புறீங்க. அது பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா… உண்மையான அக்கறையா?”

’’திருட்டு டி.வி.டி தொடர்பா அவ்வளவு அநியாயம் நடக்குது. அதைத் தட்டிக்கேட்கிறதை நீங்க விளம்பரம்னு சொன்னா… பரவாயில்லை! பல வருஷமா வெளிநாடுகளில் இருந்துதான் திருட்டு டி.வி.டி தயாராகி இங்கே வருதுனு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா, அது பொய். திருட்டு டி.வி.டி இங்கேதான் தயாராகுது. ஸ்கூல்ல படிக்கும்போதுகூட நான் இவ்வளவு ஹோம்வொர்க் பண்ணினது இல்லை. அவ்வளவு வேலை மெனக்கெட்டு ஒரு டீம் அமைச்சு திருட்டு டி.வி.டி கும்பலைக் கண்டுபிடிச்சோம். ஆனா, இப்போ ‘திருட்டுவிசிடி.காம்’னு தைரியமாவே திருட ஆரம்பிச்சுட்டாங்க. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் வருஷத்துக்கு என்ன சம்பாதிக்கிறாங்களோ, அதைவிட மூணு மடங்கு அதிகமா திருட்டு டி.வி.டிக்காரன் சம்பாதிக்கிறான். வெள்ளிக்கிழமை காலையில 10 மணிக்கு படம் வெளியானா, மதியம் 2 மணி ஷோவில் ஆபரேட்டருக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து கேமரா வெச்சு, படத்தைத் திருடுறாங்க. முதல்ல நெட்ல போடுறாங்க. அப்புறம் பஸ், கேபிள் டி.வினு எல்லா இடங்கள்லயும் ஒளிபரப்புறாங்க. ஆபரேட்டர் ரூம்ல இருந்து படத்தைத் திருடினாங்கனு கரூர், புதுக்கோட்டையில ரெண்டு தியேட்டர்கள் மேல நடவடிக்கை எடுத்திருக்காங்க. அது இந்த விஷயத்தில் முதல் வெற்றி.”

’’இயக்குநர் ஆர்வத்தோடு வந்து நடிகர் ஆனீங்க. ஆனா, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி, வி மியூசிக்னு படத் தயாரிப்பு சம்பந்தமான எல்லா விஷயங்களையும் கையில எடுத்துக்கிட்டீங்களே… ஏன்?”

’’எனக்கு நிறையக் கோபம் வரும். அது என் பலமா, பலவீனமானு இன்னும் தெரியலை. ஆனா, நான் யார்கிட்டயும் பத்து பைசா ஏமாத்தினது இல்லை. அதே மாதிரி யாரும் என்னை ஏமாத்தினாலும் தாங்கிக்க முடியாது. அதான் நானே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சேன். ஏன்னா, 2012ம் வருஷம் எனக்கு மிக மோசமான வருஷமா இருந்தது. என் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாப்போன வருஷம். அந்தக் கோபத்தில் ஆரம்பிச்சதுதான் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி. நியாயமா சொன்னா, அதை ‘வென்ஜென்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி’னுதான் சொல்லணும். அந்த அளவுக்கு ஒரு வன்மத்தில் இருந்தப்போ உருவானது அந்த நிறுவனம்.

அடுத்து வி மியூசிக். படத்தோட மியூசிக் ஆல்பங்கள்ல இருந்து எந்த வருமானமும் வரலைனு பல வருஷமா சொல்லிட்டே இருக்காங்க. அது உண்மையா? ஒரு மியூசிக் ஆல்பம் என்னதான் வருமானம் கொடுக்குது. நஷ்டம் வந்தாலும் எவ்வளவு வரும்னு தெரிஞ்சுக்கலாமேனு ஆரம்பிச்சதுதான்

வி மியூசிக். இப்போ அந்தத் தொழிலும் புரிய ஆரம்பிச்சிருக்கு. சினிமாதான் வாழ்க்கைனு முடிவுபண்ணிட்டோம். அது பத்தி ஏ டு இஸட் தெரிஞ்சுக்குவோமே!”

’’வரலட்சுமி பத்தி கேட்கலைன்னா, பேட்டியில ஏதோ மிஸ்ஸிங்னு தோணுமே… உங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஏதோ வருத்தம்னு தகவல்… உண்மையா?”

’’நாங்க காதலிக்கிறோம்னு நான் எப்போ சொன்னேன். அதனால பிரிஞ்சுட்டோம்னு எப்படிச் சொல்ல முடியும்? வரலட்சுமி என்னோட பெஸ்ட் தோழி. அவ்வளவுதான்.”

’’சரி… எப்ப கல்யாணம்?”

’’தெரியலை. ஆனா, என் கல்யாணம் நடிகர் சங்கக் கட்டடம் வந்த பிறகுதான் நடக்கும். ஏன், அது அந்தக் கட்டடத்திலேயேகூட நடக்கலாம்!”

Tags: , , ,

Category: சினிமா, முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply