மனோரமா- வாழ்வும் பயணமும்…

Oleh: Arulezhilan
October 11, 2015

ஆச்சி மனோரமாவை கடந்த மார்ச் மாதம் சந்தித்தேன் . நீண்ட நாட்களாகவே அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைத்தவர் நண்பர் திருவாரூர் குணா. மனோரமா யாரையும் சந்திக்கும் நிலையில் இல்லை என்னும் நிலையில் குணா ஏற்பாடு செய்திருந்த அந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்டிருந்தது.

நைட்டி அணிந்திருந்தார், சற்றே நீளமான கைக்குட்டையை கழுத்தைச் சுற்றி தோள்பட்டை வரை போட்டிருந்தார்… ஷோபாவில் அமர்ந்தவரிடம் பேட்டி என்றால்…

’’என்ன பேட்டி என்ன பேசுறது எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லியே….. என்று தலையைக் குனிந்து கைகளைப் பிசைந்தார் ஒரு குழந்தையைப் போல…..
அந்த உரையாடலை நான் இப்படி துவங்கினேன்….

’’என்ன சாப்டீங்க?

‘’என்ன சாப்ட்டேன் ஓட்ஸ் குடிச்சேன்…. இப்படியே பேசினேன் சில பல நிமிடங்களில் அவர் எவை எல்லாம் மறந்து போனது என்றாரோ அதெல்லாம் நினைவுக்கு வர உற்சாகமாக பேசினார்…

அதுதான் இந்த தொகுப்பு….


தலைமுறைகளின் சாட்சியமாக வாழ்கிறார் ஆச்சி மனோரமா. சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலம் குன்றிய ஆச்சி இப்போது வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை ஒரு சில பொது நிகழ்ச்சிகளைத் தவிற, அவ்வப்போது மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக கழிந்து கொண்டிருக்கும் வாழ்வில் அவ்வப்போது அவர் பற்றிய வதந்திகளும் வந்து போகிறது. ‘’நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்” என்று அவரே சொல்லும் அளவுக்குச் சென்றது. எப்படி இருக்கிறார் ஆச்சி என்று பார்த்து வரப் போனோம்.

ஒவ்வொரு நாளும்.

ஷூட்டிங்க் இருந்தா அதிகாலையே எழுந்திரிச்சு, குளிச்சு முருகனை கும்பிட்டு கிளம்பிடுவேன், காலைல போய் விடிய விடிய எல்லாம் நடிச்சிருக்கேன், களைச்சுப் போய் வந்தா வீட்ல அவ்வளவு வேலை இருக்கும். இப்போ காலையில எந்திரிச்சா, கொஞ்சம் ஓட்ஸ் குடிக்கிறேன். அப்புறம் மதியம் வரை பொழுது போக்கணும். பல்லைக் கடிச்சுட்டே உக்கார்ந்திருந்தா, ராத்திரி டிபன் வந்துரும். நடு நடுவுல மருந்து மாத்திரை. எதையோ பிடிக்கப்போறதா நினைச்சு ஓடிட்டே இருந்த என்னோட வாழ்க்கை, இப்போ பத்து பதினைஞ்சு மாத்திரையில சுருங்கிருச்சு.நான் பெருசா கோவிலுக்கு போறதில்லை. சாமியை மனசுல நினைச்சுப்பேன். எங்களோட ஊர்ல சோலையாண்டவர் கோவில் இருக்கு அங்க வயசுக்கு வந்த பெண்கள் உள்ளே போக முடியாது. அதுவும், பக்கத்துலையே பூமாத்தம்மன் கோவில் இருக்கு அது எனக்கு ஸ்பெஷல் எனக்கு மகன் பிறந்த போது அந்த தெய்வத்தோட பெயரைத்தான் இவனுக்கு பூபதிணு வைச்சேன். பள்ளத்தூர் பக்கம் போய் நாளாச்சு போகணும் ஒரு தடவையாவது கோவில் பக்கம் போய் விட்டு வரணும்.

நாடகம்தான் உலகம்

எனக்கு நல்லா பாட வரும். நான் இசை கத்துக்கல்ல, கேள்வி ஞானம்தான் ஆனாலும் நன்றாக பாடுவேன். செட்டிநாடு பகுதில கோவில் பண்டிகையப்போ நாடகம் போடுவாங்க. அப்பவெல்லாம் ஆண்கள்தான் பெண் வேடம் கட்டி ஆடுவாங்க. நடிப்பாங்க, மேடையில் பெண்கள் ஏறும் வழக்கம் அந்தக் காலத்தில் இல்லை, மேடைக்கு பின்னால் இருந்து குரல் கொடுக்கவும் பாடவும் பெண்கள் தேவைப்படும் போது அதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்போ எனக்கு பதினைந்து வயதிருக்கும் ‘அந்தமான் கைதி’ அப்படீணு ஒரு நாடகம் போட்டப்போ மேடைக்குப் பின்னால் இருந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது.அப்போ தியாகராஜன்ணு ஒரு அண்ணன் ஆர்மோனியம் வாசிப்பார் அவர் நான் பாடுவதை கேட்டு விட்டு ‘’நல்லா பாடுற பொண்ணே”ணு பாராட்டி மேலும் பாட வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார். மேடைக்கு பின்னால் பாடிப் பாடி சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து மேடைக்கு முன்னால் வந்தேன். பெண்கள் மேடைக்கு வந்து பாடுவது அருகி இருந்த அந்தக் காலத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்று என்னை புக் பண்ணி நாடகம் போட்ட திருவிழாக்கள் அநேகம். முதன் முதலாக ‘யார் மகன்” என்ற நாடகத்தில் ஹிரோயினாக அறிமுகம் ஆன போது அந்த நாடக அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கியவர் வீணை எஸ். பாலச்சந்தர்.அப்போவெல்லாம் நல்லா நடிச்சா எதாச்சும் ஒரு பரிசு கொடுப்பாங்க. அந்த நாடகத்தில் என் கூட நடிச்ச ஒரு நடிகைக்கு ஒருவர் வீனை பாலச்சந்தர் கையால் பரிசு கொடுக்கச் சொன்ன போது அவர் சொன்னார். ‘’நான் இந்தப் பரிசைக் கொடுப்பதாக இருந்தால் இதில் ஹிரோயினாக நடித்த பொண்ணுக்குத்தான் பரிசு கொடுப்பேன். நீங்கள் கேட்டுக் கொண்டதால் இந்த பொண்ணுக்கு கொடுக்கிறேன் “ என்று என்னை பாராட்டி விட்டு பரிசை என்னுடம் நடித்த நடிகைக்குக் கொடுத்தார். அதுதான் முதல் பாராட்டு.அதுல தொடங்குன பயணம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டைணு போகாத ஊர் இல்லை, ஏறாத மேடையில்லை. மைக் செட்டே இல்லாமல் உச்சக் குரலில் கத்தி நடிச்ச அந்த அனுபவங்கள்தான் எனக்கு பிடித்தமானவை. ஏனென்றால் மேடைக்கும் பார்வையாளர்களுக்கும் நேரடியான நெருக்கத்தை நாடகத்தில்தான் நான் உணர்ந்தேன்.

முதல் புகைப்படம் 15 வயதில்…

முதல் புகைப்படம்

நாடகங்களில் நடித்து கொஞ்சம் புகழ் பெற்றிருந்தேன். ஆரம்பத்தில் ஒரு நாடகத்திற்கு பத்து ரூபாய் ஊதியம் வாங்கிய நான் 30, 40 ரூபாய் ஊதியம் வாங்கத் துவங்கிய காலத்தில் புதுக்கோட்டையில் குமார் என்றொரு தயாரிப்பாளர் படம் எடுக்க முன் வந்தார். அவரே இயக்கி திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டு என்னையும் புதுக்கோட்டைக்கு அழைத்தார். நான் தேவிகா. எஸ். எஸ். ராஜேந்திரன் அண்ணன், என எல்லோரும் அவரது வீட்டில் தங்கியிருந்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு மேக்கப் போட்டு அவர் எடுத்ததுதான் இந்த முதல் புகைப்படம். என் பதினைந்தாவது வயதில் எடுத்த இந்த புகைப்படத்தை புதுக்கோட்டை ரம்பா ஸ்டுடியோவில் பார்த்த போது எனக்கே பொறாமையாக இருந்தது. அவர்களிடம் கேட்டு வாங்கி எடுத்து வந்தேன். அப்புறம் குமார் எடுக்க விரும்பிய அந்த சினிமா என்ன ஆச்சுண்ணா, அவர் வீட்டு மொட்டை மாடியில் ஒரு ஓலை குடிசை மாதிரி போட்டிருந்தாங்க. அந்த வீட்டுக்காரம்மா காடா விளக்கை மாடில வைச்சவங்க அதை அணைக்காமல் விட காற்றில் ஆடி அந்த ஓலைக் குடிசை தீப்பிடித்து எரிந்து போக அவர் ‘’நான் சினிமாவே எடுக்கவில்லை நீங்கள் எல்லாம் கிளம்புங்க” என்று எங்களை எல்லாம் அனுப்பி விட்டார்.

முதல் கைதட்டல்

நல்லா பாடுவேன் முறையாக சங்கீதம் கத்துக்கிட்டது இல்லை என்றாலும் எப்படியோ பாடக் கற்றுக் கொண்டேன். அப்போவெல்லாம் மீரா படத்தில் வரும் ‘காற்றினிலே வரும் கீதம்” பாட்டுதான் எப்பவும் பாடுவேன். அது என்னை ரொம்ப வசீகரிச்ச பாடலாக இருந்துச்சு. அப்போ நான் பள்ளத்தூர் ஸ்கூல்ல நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளியில் பாரதியார் விழா நடந்தது. அதில் ‘’பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற பாட்டை பாடுமாறு மேடை ஏற்றி விட்டார்கள்.பாட்டைச் சொன்னவர்கள் எப்படிப் பாட வேண்டும் என்று சொல்லவில்லை. நான் எனக்குத் தெரிந்த மாதிரி ‘காற்றினிலே வரும் கீதம்’ மெட்டில் பாருக்குள்ளே நல்லா நாடு என்ற பாரதியார் பாடலை முழுமையாக பாடி முடித்த போது மொத்த பள்ளியும் ஆசியர்களும் எழுந்து நின்று கைதட்டினார்கள். எவ்வளவோ பட்டங்களும் பாராட்டுகளும் கைதட்டல்களும் பின்னர் கிடைத்தாலும் கூட முதன் முதலாக மேடை ஏறிப் பாடிய போது கிடைத்த அந்த கைதட்டல்தான் இன்னை வரைக்கும் பசுமையா இருக்கு. ஆனால் அந்தப் பள்ளியில் ஐந்தாம் வரை மட்டும்தான் என்னால் படிக்க முடிந்தது. அதன் பிறகு வாழ்க்கை திசை மாறி விட்டது. அம்மாவும் நானும் அங்கிருந்து இன்னொரு பயணத்தை துவங்கியிருந்தோம்.

நிழல் தந்த அண்ணன் எஸ். எஸ். ராஜேந்திரன்.

சென்னையில் இருந்த அண்ணன் எஸ், எஸ், ராஜேந்திரன் கலைஞர் எழுதிய மணிமகுடம் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அதில் எம்.என். ராஜம்தான் ஹிரோயின் அவங்க திரைப்படத்துக்கு போய் பிஸியானதால அந்த கேரக்டலில் நடிக்க ஆளில்லாமல் ராஜேந்திரன் இருந்த போது ஆர்மோனிஸ்ட் சுந்தர்ராஜன் ‘’மனோரமாணு ஒரு பொண்ணு இருக்கு” என்று சொல்ல அவரும் தெரியும் என்றிருக்கிறார். உடனே சென்னைக்கு வர அழைப்பு வந்தது நானும் குழந்தை பூபதியை தூக்கிக் கொண்டு சென்னைக்கு கிளம்பி வந்த போது அவரது வீட்டு மாடியில் தங்க வைத்தார். நான் அங்கிருந்து கொண்டே மணிமகுடத்தில் ஹிரோயினாக நடித்து வந்தேன். சேலம், வேலூர், குடியாத்தம்ணு மாசக் கணக்கில் நாடகம் போட்டோம். பின்னாடி நான் சினிமாவுக்கு வந்து கொஞ்ச வருடங்களிலேயே ஜானகிராம் தெருவில் 22,000 ரூபாய்க்கு மூன்று கிரவுண்ட் நிலத்தோடு ஒரு வீட்டை முதன் முதலாக வாங்கவும். சினிமாவில் சம்பாதித்து மனோரமாவும் ஒரு உச்ச நட்சத்திரம் என்று புகழ் அடையவும் காரணமாக இருந்தது அண்ணன் எஸ். எஸ். ராஜேந்திரன் அதனால்தான் அண்ணன் இறந்த போது என்னுடைய உண்மையான சகோதரன் இறந்து போல கதறி அழுதேன். அது பெரிய இழப்பு.

பவுன் 50 ரூபாய்

இந்தியவுக்கும் சீனாவுக்கும் போர் வந்தப்போ எல்லா நடிகர்களும் நிதி உதவி செஞ்சாங்க. மொதல்ல பவுன் 50 ரூபாய்க்கு வித்துச்சு. அதுக்கு பிறகு நூறு ரூபாய் ஆச்சு நான் ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு போய் பத்து பவுன் நகை வாங்கி எங்கிட்ட இருந்த நகைகளையும் சேர்த்து போட்டு ஒரு 30 பவுன் நகையை அந்த போருக்கு நிதியாக கொடுத்தேன். நம்மள வாழ வைச்ச நாடுல்ல எதுனாச்சும் செய்யணும்ல அதான் அப்படிச் செஞ்சேன். கடவுள் புண்ணியத்துல நல்லாத்தான் சம்பாதிச்சேன். ஆரம்பத்துல ஆயிரம் இரண்டாயிம்ணுதான் சம்பளம் கொடுத்தாங்க, தேவர் பிலிம்ஸ்காரங்க ‘வேட்டைக்காரன்’ படம் எடுத்தாங்க பாருங்க அதுலதான் முதன் முதலாக பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அப்போ அது பெரிய சம்பளம். ஒரு கட்டத்துல ஒரே நாள்ல இரண்டு மூணு படங்களுக்கு கூட நடிக்கவும், டப்பிங் பேசவும், போவேன். அவ்ளோ பிஸியா இருந்திருக்கேன். (தலையை கவிழ்ந்து கைகளைப் பிசைகிறார்)

ராதா அண்ணன்ணாலே ஒரு பயம்.

ராதா அண்ணன் நாடகம் போடுறாருண்ணாலே ஒரு பீதி. போலீஸ் வரும் பஞ்சாயத்து வரும். ஆனா அவருக்கு மக்கள் கிட்ட அவளவு செல்வாக்கும் மதிப்பும் இருந்துச்சு. எல்லோரையும் சினிமாவுல முரட்டுத் தனமா நடிப்பாரே தவிற ரொம்ப மென்மையான மனுஷன்.நான் நடிச்ச மணிமகுடம் நாடத்தைப் பார்த்துட்டு பள்ளதூருக்கே நேரடியாக வந்து ‘’நீ என் நாடகக் கம்பெனில சேர்ந்துடு என்ன சம்பளம் வேணுமோ வாங்கிக்க” ண்ணார். அவர் கூட சினிமாவில் நடிச்சிருக்கேனே தவிற கடைசி வரை அவர் மேல இருந்த பயம் போகல்ல.அதனாலதான் அவரோட நாடகக் கம்பெனிக்கு கடைசி வரை போக முடியாமப் போச்சு.

ஹிரோயினை நகைச்சுவை நடிகை ஆக்கி விட்டார்கள்

அண்ணாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன், கலைஞருக்கு உதயசூரியன் நாடகத்தில் ஹிரோயினாக நடித்தேன்.அப்போவெல்லாம் நாடக்தில் நாகேஷ் நகைச்சுவை நடிகராக இருந்தார்.நான் ஹிரோயினாக மட்டுமே நடித்தேன். நாடகத்தில் நான் ஹிரோயின் என்பதால் சினிமாவிலும் நான் ஹிரோயின் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மணிமகுடம் நாடகத்தைப் பார்த்து விட்டு கவிஞர் கண்ணதாசன் அழைத்து, ’மாலையிட்ட மங்கை’ படத்தில் நடிக்கச் சொன்னார். ஆனால் ஹிரோயினாக அல்ல காமெடி ரோலில், அதுலதான் நடிக்க ஆள் தேவைப்பட்டிருக்கு அதில் என்னை நடிக்கச் சொன்னார்கள். ‘’நான் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க மாட்டேன் எனக்கு காமெடி வராது” என்றேன். அப்போதுதான் கண்ணதாசன் சொன்னார் ‘’நீ ஹிரோயினாக நடித்தால் இரண்டு மூன்று வருடம்தான் நடிக்க முடியும். ஆனால் காமெடி நடிகையாக நடித்தால் ஆயுள் முழுக்க நடிக்கலாம்” என்றார். நான் சம்தித்தேன். அப்போவெல்லாம் நகைச்சுவை நடிகர்கள் என்றால் என்.எஸ்.கிருஷ்ணன், டி. எம் ,மதுரம், டி.பி. ,முத்துலெட்சுமி, எம். சரோஜா, தங்கவேலு. எம்.என் ராஜன். எம்.ஆர். ராதா. ராமபிரபா. என ஒரு பெரிய பட்டாளமே இருந்துச்சு. இந்த போட்டிக்குள் நானும் காமெடி நடிகையாக களமிரங்கி என்கென்று ஒரு இடத்தை பிடிச்சி வந்திருக்கிறேன். இப்போது யோசித்துப் பார்த்தால் ஆயிரம் படங்களுக்கு மேல் நடிக்க முடிந்திருக்கிறது என்றால் அது நான் ஒரு குணச்சித்திர., நடிகையாகவும் காமெடி நடிகையாகவும், நடித்ததால்தான் இதை சாதிக்க முடிந்தது. நடித்தால் ஹிரோயினாகத்தான் நடிப்பேன் என்று அன்று அடம் பிடித்திருந்தால் காணாமல் போயிருப்பேன்.

உடல் நலம்

என்னோட உடல் நலம் பற்றி வெளில என்னென்னமோ பேசுறாங்க, சமீபத்தில் ஒரு மனோரமாங்கிற மும்பை நடிகை ஒருத்தங்க இறந்திருக்காங்க. ஆனால் நடிகை மனோரமா இறந்து போனதாக தவறான செய்தியை பரப்பிட்டாங்க. அதன் பிறகு நானே ஊடகங்களை அழைத்து ‘’நான் உயிரோடுதான் இருக்கேன். நான் நல்லாத்தான் இருக்கேணு” சொல்ல வேண்டியதாப் போச்சு. (சிரிக்கிறார்) நான் உயிரோடதான் இருக்கேணு நாமளே சொல்றதுதான் கொடுமை இல்ல.. இடையில, கொஞ்சம் நாள் உடம்பு சரியில்லாமல் இருந்தது உண்மைதான். என்னோட பதினைஞ்சாவது வயசுல இருந்து ஓடத் தொடங்குன காலுப்பா இது. எத்தனை வருஷம் ஓட்டம். என்னா உழைப்பு. இப்போ என்னோட இரண்டு மூட்டுகளும் தேய்ஞ்சு போனதால செய்ற்கை மூட்டு பொருத்திருக்காங்க. மற்றபடி நான் நல்லா இருக்கேன், ’பேராண்டி’ அப்படீணு ஒரு படத்துல என்னை புக் பண்ணியிருக்காங்க. இன்னும் நான் நடிப்பேணு நம்புறேன்.

அம்மாவும் நானும்

. என்னோட அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட காசி கிளாக்குடையாருக்கு என்னோட அம்மாவோட தங்கையையும் கல்யாணம் பண்ணி வைச்சிருக்காங்க. அப்பாவும், சின்னம்மாவும் சேர்ந்து என்னோட அம்மாவை துரத்தி விட்டுட்டாங்க. எனக்கு கூடப்பிறந்த இரண்டு அண்ணனுங்க இருந்தாங்க. அவங்க இரண்டு பேருமே அம்மாவை விட்டுட்டு அப்பாவோட போயிட்டாங்க. இல்ல்…இல்ல…. அவங்க சின்னப்பசங்களா இருந்த என் அண்ணனுங்களை கூட்டிட்டுப் போயிட்டாங்க. அப்புறம் என்னையும் ஒரு தடவ தூக்கிட்டுப் போக வந்தப்போ நான் அம்மாவை விட்டுட்டு போக மாட்டேணு அழுதேனாம். பத்து மாசமா இருந்த என்னை அம்மா தூக்கிட்டி செட்டிநாடு பக்கம் இருந்த பள்ளத்தூருக்கு வந்துச்சு. பின்னாடி அதுவே எங்க ஊர்ணு ஆகிப் போச்சு.
அம்மா பள்ளத்தூர்ல இருந்த செட்டியாருங்க வீடுகள்ள வேலை செஞ்சு என்னை படிக்க வைச்சுச்சு. நானும் வேலைக்கு வர்றம்மாணு சொன்னா ‘’ படிக்கிற புள்ள படிக்கிற வேலையைப் பாருங்கும்” என்னை மாதிரி பாத்திரம் கழுவிட்டு அலையாதேணு கத்தும். ஆனா அதுக்கும் ஒரு கட்டத்துல உடம்பு முடியாமப் போச்சு. இன்னும் அவங்களுக்கு உடம்பு முடிஞ்சிருந்தா என்னை நல்லா படிக்க வைச்சிருப்பாங்க. அப்புறம் நானும் பாத்திரம் கழுவப் போவேன். பின்னாடி ரொம்ப முடியாமல் போனதால ராம்நாட்டில் இருக்கிற ஆஸ்பத்திரில் அவங்களுக்கு சிகிச்சை எடுக்க பள்ளத்தூர்ல இருந்து கிளம்பி ராமநாதபுரம் வந்தோம்.அம்மா சாகுற வரைக்கும் நான் எங்கயெல்லாம் போனேனோ அங்கே எல்லாம் என் கூடவே வந்தாங்க…. அம்மா இல்லியா…அம்மா கடைசி வரை என்னோடதான் இருந்தாங்க. அவங்களுக்கு உடம்பு முடியாமல் போன போது டாக்டர் ராதாகிருஷ்ணன் தான் வந்து அம்மாவை பார்ப்பார். அப்படியே சிவாஜி அண்ணன் வீட்டுக்கும் போவார். ஒரு நாள் அதிகாலையில் ஷூட்டிங் கிளம்பிட்டிருக்கும் போதுதான் அம்மா இறந்து போனாங்க. டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்து பார்த்து விட்டு அதை உறுதி செய்து விட்டு அப்படியே சிவாஜி அண்ணன் வீட்டுக்கு போய் மனோரமா அம்மா இறந்துட்டாங்கணு சொல்லிட்டு போய் விட்டார். உடனே சிவாஜி அண்ணன் கிளம்பி வந்துட்டார். அவருக்கு என்னோட குடும்ப வாழ்க்கை எல்லாம் தெரியும். ‘’ இங்கபாரு புள்ள, நீ எதுக்கும் கவலைப்படாதே. எப்போ எடுக்குறேணு சொல்லு எல்லாம் நான் பாத்துக்குறேன்ண்ணார்.” போனவர் ஒரு வெண் பட்டுப்புடவையும், துளசி மாலையும் வாங்கி வந்தார். தலைப்பாகையை கட்டிக் கொண்டு என் அம்மாவின் உடலை குளிப்பாட்டி அதற்கு பட்டுப்புடவை போர்த்தி ஒரு மகனாக எனக்கு அண்ணனாக நின்று என் தாயின் இறுதிச் சடங்கை செய்து முடித்தார் சிவாஜி. அந்த வகையில் எங்கம்மாவுக்கு நல்ல சாவு அது. இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞனின் கையால் இறுதி மரியாதை கிடைத்தது எங்கம்மா செய்த பாக்கியம்.

திருமண வாழ்வு – புயலும் – போராட்டமும்.

என் கூட நாடகங்களில் வில்லனாக நடித்தவருக்கு பெயர் எஸ். எம். ராமநாதன் நன்றாக நடிப்பார் என்றாலும் பாடத் தெரியாது. ஹிரோயினாக நடித்த எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதை காதல்ணு நான் நம்பினேன். திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைத்து எங்களுக்கு திருமணம் நடந்தது. என் பக்கம் அண்ணன் என்று சாட்சிக் கையெழுத்து போட்டது நடிகர் எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி. அப்புறம் நான் கர்ப்பமாகி ஒன்பது மாதம் வரைக்கும் நாடகத்தில் நடித்து விட்டு டெலிவரிக்காக பள்ளுத்தூர் வந்தேன். குழந்தை பிறந்து 16 -வது நாள் வந்து என்னை பார்த்தார். அன்று வந்தவர்தான் அதன் பிறகு நான் வரவே இல்லை. நான் சென்னை வந்து சினிமாவில் நடிக்கத் துவங்கிய பின்னர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். என்னோட திருமண வாழ்வு எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது எனக்கு சாட்சிக் கையெழுத்து போட்டார் இல்லையா எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி அவரோட தங்கையை, அவரே அவருடைய தங்கையை என் கணவருக்கு திருமணம் செய்து வைத்தார். நானும் விலகி வந்து அம்மாவுடன் வாழப் பழகி விட்டேன். அவர் இறந்து போன செய்தி கிடைத்த போது நானும் பூபதியும் கிளம்பினோம் அம்மா சொன்னாங்க ‘’என்ன பெருசா அந்த ஆளோட வாழ்ந்து கிழிச்சேணு கிளம்புற” ணு சொன்னாங்க. எனக்கு மனசு கேட்கவில்லை. நான் போனேன். ஏனென்றால் அவருக்கு குழந்தை இல்லாததால் என் மகன் பூபதிதான் அவருக்கு கொள்ளி போட வேண்டும். பூபதியை அவர் வளர்க்கவும் , இல்லை படிக்கவும் வைக்கவில்லை. ஆனால் அவருக்கு கொள்ளி போட ஒரு மகனைப் பெற்றும் கொடுத்தேன். எனக்கும் அவருக்குமான பந்தமாக இருந்தது அது ஒன்றுதான்.

Tags: , , , , , , , ,

Category: முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

6 Comments

 • ARUMUGAM 9444069888 chennai

  முழுவதும் படித்தேன்

 • GREAT TO KNOW HER HISTORY FULLY! GREAT ACTRESS,GREAT MOTHER! GREAT HUMAN!GREAT TAMIL!

 • கே.எஸ்.சுரேஷ்குமார்

  இது பேட்டி இல்லீங்க,ஒரு அபிமானமான தூரத்து சொந்தக்காரங்க கிட்ட பகிர்ந்துட்ட மாதிரி இருக்கு. குறிப்பா அவங்களோட இல்லற வாழ்க்கையைப்பத்தி அவங்க வாயாலயே சொல்லவச்சி அதை நாகரீகமான முறையில் பதிவு பன்னியிருக்கிங்க.

 • இந்தக்கட்டுரையிலிருந்து ஆச்சியின் சரிதையை தொடங்குமளவுக்கு அவரின் தகவல் நிறைந்திருக்கிறது

 • Jawaharji

  அம்மா ‘’என்ன பெருசா அந்த ஆளோட வாழ்ந்து கிழிச்சேணு கிளம்புற” ணு சொன்னாங்க. எனக்கு மனசு கேட்கவில்லை. நான் போனேன். ஏனென்றால் அவருக்கு குழந்தை இல்லாததால் என் மகன் பூபதிதான் அவருக்கு கொள்ளி போட வேண்டும்.

  சராசரி பெண்ணாகவே ஆச்சி வாழ்ந்திருக்கிறார்கள்.

  அருமையான பதிவு

 • ganesan.k

  ஆச்சியின் அருமையான வாழ்க்கைப் பதிவு…

Leave a Reply