யுவராஜ் – அவுட் ஆப்ஃ சிலபஸ் அல்ல!

Oleh: Arulezhilan
September 29, 2015

யுவராஜ் தயாரிப்பில் ஒரு மணி நேர ஆடியோ கேட்டேன். அந்த ஆடியோவின் நோக்கம் விஷ்ணு ப்ரியா தற்கொலைக்கு கோகுல்ராஜ் கொலை தொடர்பாக உயரதிகாரிகளின் பணி ரீதியான தொல்லைகளே காரணம். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், இந்த வழக்கின் போக்கை பார்த்த பின்னர் அடுத்தடுத்த ஆடியோக்களை வெளியிடப் போவதாகவும் கூறுகிறார்.

#

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தன்னை பிடிக்க முடியாத போலீஸ் பல அப்பாவிகளையும், தனக்குத் தெரிந்தவர்களையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறது. தான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.அது சாதாரண ஓட்டம் அல்ல என்கிறார்.

#

கோகுல்ராஜ் கொலையான போது அந்த சட்டையை தன் மனைவிதான் துவைத்துக் கொடுத்தார் என்ற வழக்கில் தன் மனைவியையும் கைது செய்ய வேண்டும் என போலீசார் கொடுத்த டார்ச்சரை ஏற்றுக் கொள்ளாத விஷ்ணு ப்ரியா யுவராஜின் மனைவியை சந்தித்து பேசியதாகச் சொல்கிறார்.

யுவராஜ் வெளியிட்ட ஆடியோவின் சாராம்சமும் இதுதான். இடையில் இந்த ஆடியோ ஒரு இடத்தில் நுட்பமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு இடத்தில் கட்டாகும் ஆடியோ, பல விஷயங்களைக் கடந்து இந்த கைதுகளில் உள்ள நியாயமற்ற தன்மையை விஷ்ணு ப்ரியாவே பேசுவதை மட்டும் எடுத்துக் காட்டுகிறது.பதிலுக்கு இவர் என்ன பேசினார் என்பதோ, தொடர்ந்து விஷ்ணு ப்ரியா என்ன பேசினார் என்பதே அந்த ஆடியோவில் இல்லை. விஷ்ணு ப்ரியாவிடம் யுவராஜ் பேசிய தொலைபேசி உரையாடல் யுவராஜின் ஒரு வாகனப் பயணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அவரது தனி பேச்சுக்கள் பக்காவான ஒரு ரிக்கார்டிங் தியேட்டர் குவாலிட்டியோடு இருக்கிறது.

நிற்க,

யுவராஜ் தலமையிலான தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவைக்கும் கொங்கு பகுதியில் உள்ள ஏனைய கவுண்டர் அமைப்புகளுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி கோகுல்ராஜ் கொலையிலும், இப்போது விஷ்ணு ப்ரியா தற்கொலையிலும் உள்ளது. யுவராஜின் மொத்த உரையாடலும் நமக்கு உணர்த்தும் உண்மை அதுதான். தன்னை ஒழித்துக் கட்ட ஒரு அரசியல் பிரமுகர் செயல்படுவதாகச் சொல்கிறார் யுவராஜ். கோகுல்ராஜ் கொலையே ஒட்டு மொத்த கவுணடர் சமூகத்திற்கு உண்மையான தலைமை தானே எனக் கோருவதற்காக நடந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஆனால் அது இப்போது எதிர்மறையாக அவரை வீழ்த்துகிறது.
ஆக, இந்த நிகழ்வுகளின் பின்னார் கொங்கு பகுதி அரசியல் பிரமுகர்கள் இருக்கின்றனர். அவர்கள் காவல்துறையை கட்டுப்படுத்தும் போக்கும் இருக்கிறது.

வீரப்பனை பிடிக்க முடியாத காவல்துறை வாச்சாத்தியில் புகுந்து மக்களை கூட்டு வன்முறைக்கு உள்ளாக்கியது போல , சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் புகுந்து வழக்கறிஞரை கைது செய்ய முடியாத காவல்துறை வழக்கறிஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது போல, கிராமத்தினுள் சில மோதல் வழக்குகளுக்காகச் செல்லும் காவல்துறை வீட்டின் கண்ணாடி ஜன்னல்களை எல்லாம் உடைத்துச் செல்வார்கள் இல்லையா அப்படியே கோகுல்ராஜ் கொலையிலும் யுவராஜ் கிடைக்காத நிலையில் அவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அவரைச் சார்ந்தவர்களை தூக்கி வந்து கைது செய்திருக்கிறார்கள்.

இந்த ஆட்டங்களுக்கு மத்தியில்தான் ஒரு நேர்மையான அதிகாரி பலி கொடுக்கப்பட்டிருக்கிறார்.ஒரு பக்கம் அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கிற்கு ஆடும் கவல்துறை.. இன்னொரு பக்கம் கிரிமினல்கள், அரசியல்வாதிகள், போலீஸ் கூட்டு. போலீசாருக்கும், அரசியல் ரவுடிகளுக்கும் இடையிலான கூட்டு பற்றி உச்சநீதிமன்றமே பல கமிட்டிகளை அமைத்தது எல்லாம் கடந்த காலங்களில் நடந்த சுவராஸ்யங்கள். தேடப்படும் சந்தேக நபர், அல்லது குற்றவாளியுடன் தொலைபேசியில் பேசும் போது கூடமீண்டும் மீண்டும் யுவராஜை சரணடர் ஆகக் கோருகிறார் விஷ்ணு ப்ரியா. ‘’ கோகுல்ராஜ் கொலையில் ஏ-1 சந்தேக நபரான நீங்கள் சரணடையுங்கள் ”என்கிறார். நேர்மையான அந்த அதிகாரியிடம் ‘’வழக்கு சட்டப்படி நேர்மையாக நடக்குமா உத்தரவாதம் கொடுங்கள். நான் சரணடைகிறேன்” என்று பதிலுக்கு செக் வைக்கிறார் யுவராஜ்.

விஷ்ணு ப்ரியாவோ ‘’நீங்கள் சரணடையாததால்தான் இத்தனை பிரச்சனைகளும், நீங்கள் சரணடைவதில் என்ன பிரச்சனை. நீங்கள் சரணடையுங்கள் போடப்பட்டிருக்கும் எல்லா குண்டர் சட்டங்களையும் உடைத்து விடுகிறேன்” எனச் சொல்லி மீண்டும் மீண்டும் யுவராஜை சரணடையக் கோருகிறார்”

இப்போது விஷ்ணு ப்ரியா இல்லை, யுவராஜும் சரணடையவில்லை. ப்ரியாவின் தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கும் என்ற செய்தியை பரப்பி விஷ்ணு ப்ரியாவின் நடத்தையின் மீது சந்தேகம் எழச் செய்கிறார்கள்.சென்னையைச் சேர்ந்த அர்ச்சகருடன் தொடர்பு, பின்னர் சேலம் அருகே உள்ள இன்னொரு அர்ச்சகருடன் தொடர்பு, என்றவர்கள் இப்போது ஒரு வழக்கறிஞரோடு தொடர்பு என்று கொண்டு செல்கிறார்கள்.உண்மையில் விஷ்ணு ப்ரியாவின் தற்கொலைக்கு காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல யுவராஜும் ஒரு காரணம்தான்.

யுவராஜின் நிலைப்பாடுகள்?

தன் ஆட்கள் மீதான பொய் வழக்குகள் பற்றி பேசுகிறார். தன் மனைவிக்கு போலீசார் கொடுக்கும் மன உழைச்சல் பற்றி பேசுகிறார். தன் சமூகத்தவர்கள் பற்றி பேசுகிறார். போலீஸ் துறையில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் தனக்குத் தெரியும் என்று தன் அதிகாரத் தொடர்புகளை நிறுவ முயல்கிறார். கோகுல்ராஜ் கொலையில் தான் மரணதண்டனையை ஏற்கவும் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் கோகுல்ராஜ் கொலை பற்றி பேச மறுக்கிறார். அவரது உரையாடலே நுட்பமாக கோகுல்ராஜ் கொலையை தவிர்த்து விடுகிறது. அதை அவுட் ஆப்ஃ சிலபஸ் (Out Of Syllabus) என்கிறார்.

அவருக்கு விஷ்ணு ப்ரியா மரணம் பற்றி பெரிய கவலைகள் இல்லை. ஒரு நேர்மையான அதிகாரி என்ற சொல் யுவரஜை பொருத்தவரை மனச்சாட்சிக்கு பயந்த பலவீனமான அதிகாரி அவருடைய பணி தொடர்பான நேர்மையை தன் விளையாட்டுக்கு பயன்படுத்துகிறார். இப்போது இந்த வழக்கில் நிலவும் குழப்பங்களை பயன்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தான் ஜாமீன் பெற்று விட முடியும் என நினைக்கிறார்.அவருக்கு எது பற்றியும் கவலை இல்லை. சூழலை பயன்படுத்தி தான் முன் ஜாமீன் பெறுவது ஒன்றே அவரது நோக்கம்.
உண்மையில் அவர் தன்னை அறிந்தோ அறியாமலோ கோகுல்ராஜ் கொலையில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார். அவர் முறையாக அப்போதே சரணடைந்திருந்தால் விஷ்ணு ப்ரியா தற்கொலையே நடந்திருக்காது. அவரிடம் இது போல பல குரல்பதிவுகள் இருக்கலாம். அதை அவ்வப்போது வெளியிட்டு இந்த வழக்கின் போக்கை தன் ஜாமீனுக்காக பயன்படுத்த முயலலாம். ஆனால் அவருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ளும் கடமை நமக்கு இருக்கிறது. அவருக்கு எதிராக ஒரு அரசியல் பீடம் செயல்படுவது உண்மையாக இருந்தால். யுவராஜை போலீசார் என்கவுண்டர் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். முறையாக அவர் நீதிமன்றத்தில் சரணடைவது அவருக்கு நல்லது.ஏனென்றால் இந்த வழக்கில் அவருக்கு முன் ஜாமீன் கிடைக்காது.

தமிழ் சமூகத்தின் கிராம உற்பத்தியோடு சாதிக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்திய நிலபிரபுத்துவ சாதி அமைப்பு பல்வேறு நவீன வடிவங்களை எடுக்கிறதே தவிற அது பலவீனமாகி விட வில்லை. சமூகம் மாறிக் கொண்டே இருக்கிறது, நிலம் கை விட்டுச் செல்கிறது, உற்பத்தியின் வடிவங்கள் மாறுகின்றன, ஆனால் எல்லா வடிவத்திற்கும் உகந்த ஒன்றாக தன்னை மாற்றிக் கொண்டு நம் தோழில் அமர்ந்து கொண்டிருக்கிறது சாதி. அதன் கொங்கு பகுதி அடையாளம்தான் யுவராஜ். தமிழகம் முழுக்க இதுவேதான் நடந்து கொண்டிருக்கிறது.

Tags: , ,

Category: அனுபவம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

One Comments

  • Mary J

    Innun yethanai Uyir pali vendiyirukiratho intha sathikku..
    Saathi oru naal Yuvarajaiyum pali kondu thannai niruvi kollum.
    athai Yuvaraj arinthu kollum tharunamey avarukkana meetpu.

Leave a Reply