விஷ்ணு ப்ரியா – சமூகத் தன்மை – கொலை!

Oleh: Arulezhilan
September 25, 2015

டி.எஸ்.பி. விஷ்ணு ப்ரியா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலும் இம்மாதிரிச் செய்திகள் ஊடகங்களின் புறவாசல் வழியேதான் பரப்பட்டுகின்றன.சரி காதல் தோல்வியில் ப்ரியா தற்கொலை செய்து கொண்டார் என்றே வைத்துக் கொள்வோம் அந்தச் செய்தியை ஊடகங்களுக்குச் சொன்னது யார்? தமிழக காவல்துறை தலைவரா, அல்லது காவல்துறையை தன் பொருப்பில் வைத்திருக்கும் முதல்வரா ,அல்லது அந்த வழக்கை விசாரிக்கும் விசாரணைக் குழு தலைவர் நாகஜோதியா… யார் இந்தச் செய்தியை ஊடகங்களுக்குச் சொன்னார்கள் என்றே தெரியாது சிலர் பரப்பும் தகவல்களை எந்த ஆய்வுகளும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு ஊடகவிலாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இன்று ஊடகங்களில் இருக்கும் 99% ஊடக வியலாலளர்களிடம் அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை, மதம், சாதி, குடும்ப மதிப்பீடுகள், அவர்களது பழக்கவழங்கள் போன்றவை இதழியல் பணியில் செல்வாக்குச் செலுத்துகின்றன, ஊடகப் பணி வேறு, நமது நம்பிக்கைகள், விருப்பங்கள் வேறு என்ற நிலை இங்கு வளரவில்லை. பாதிக்கப்படும் மக்கள் விஷயங்களில் கூட உண்மைகளைக் கண் கொண்டு பார்ப்பதற்கு பதிலாக தங்களின் சுய விருப்பங்கள், ஆசை அளகோல்களின் படி செய்திகளை அணுகும் ஒரு கூட்டம் ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்துகிறார்கள். அவர்கள்தான் இளவரசன் இரயில் மோதி மரணம் என்று செய்தி எழுதுகிறவர்கள்.

சரி,

விஷ்ணு ப்ரியா யாரையும் காதலிக்கக் கூடாது என்று நினைப்பது எத்தனை பெரிய அபத்தம்! ஒரு வேளை அந்த காதலில் பிரச்சனை இருந்திருந்தாலும் கூட அதற்காகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற முடிவுக்கு எப்படி வர முடியும்… அவர் தற்கொலை செய்து கொண்ட அன்றே தன் அழகிய குரலில் அவர் பாடியதாகச் சொல்லப்பட்ட ஆடியோக்கள் வாட்ஸ் அப்பில் வந்தது. நான் அதை பலமுறைக் கேட்டேன் அத்தனை இனிமையான குரல். அந்தப் பாடல்களைக் கேட்ட போது இந்த குரலுக்கு உரிமையான அந்த பெண் இப்போது இல்லையே என்ற நினைவு வந்து போனது. அந்தக் குரல் அவருடையதுதான் என்றால் நாம் ஒரு கலைஞரை இழந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்த பாடல்களைக் கேட்ட இன்னொருவன் தன் டெஸ்கில் போய் அமர்ந்து எழுதினான் இப்படி ‘’காதல் பாடல்களை உருகி பாடியுள்ள விஷ்ணு ப்ரியா காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம்” என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுதான் நமது ஊடகவியாலாளர்கள் செய்தி எழுதுகிற மன நிலை அல்லது அவர்கள் நம்பும் ரியல் ஜர்ணலிஷம் இதுதான்.

விஷ்ணு ப்ரியாவின் தற்கொலை நாமக்கல் மாவட்ட எஸ்.பி யின் எல்லைக்குள் நடந்த விவாகாரம். ஆனால் அவரை நாமக்கல்லை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிட்டு விட்டு விசாரணையைத் தொடங்கினார்களாம். நியாயமாக அவரையும் அந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளையும் நாமக்கல்லை விட்டு வெளியேற்றி விட்டு அல்லவா விசாரணையைத் துவங்கியிருக்க வேண்டும்.கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த ஒரு அதிகாரியின் மரணத்தில் பேச வேண்டிய பொருள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உணர்வுகள் தொடர்பாக அல்ல தமிழக மக்கள் எதிர்பார்ப்பது கோகுல்ராஜ் கொலை வழக்கின் தன்மை என்ன? அந்த வழக்கில் தேடப்படும் யுவராஜை காவல்துறையால் ஏன் நெருங்க இயலவில்லை. இந்தக் கேள்விகள்தான் குடைகிறதே தவிற அவர் யாரைக் காதலித்தார் என்பதல்ல!

இப்போது அரசு அமைத்திருக்கும் சி.பி.சி.ஐ.டி விசாரணை விசித்திரமாக நடைபெறுகிறது. கோகுல்ராஜின் சகோதரர், அம்மாவை விசாரித்திருக்கிறார்கள். அதில் கோகுல்ராஜின் நடவடிக்கைகள் பற்றி அவருடைய பழக்கவழக்கங்கள் நோக்கில் விசாரணை நடந்திருக்கிறது ஒரு கட்டத்தில் அவர்கள் உடல் நிலையைக் காரணம் காட்டி விசாரணைக்கு வர முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். என்றால் விசாரணையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது.

யுவராஜை உங்களால் பிடிக்க முடியுமா முடியாதா?

தமிழக காவல்துறையில் பல நேர்மையான அதிகாரிகள் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை இருக்கிறார்கள். அவர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட வேலை நேரமோ, விடுமுறைகளோ கிடையாது. மன அழுத்தங்களும் அதிகம். பெரும்பாலும் காவல்துறையின் கீழ் மட்ட காவல் பணிகளுக்கு வருகிறவர்கள் நமது அண்டை வீட்டுக்காரர்கள்தான். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருந்து வருகிற அவர்களின் வாழ்க்கைப்பாடுகள் கொடிய அத்தியாயம். அதிலும் பெண் காவலர்களின் கதைகள் தமிழ் சூழலில் பேசப்படாதவை. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலின நிகர் நிலை பயிலரங்கங்கள் காவல்துறையினருக்கு நடத்தப்பட்டது, எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் காவலர் பயிற்சி பள்ளி என நினைக்கிறேன் அங்கு நடந்த அப்பபடியொரு வகுப்பில் நானே கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். அதில் காவல்துறையின் பெண் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட கதைகள் மனதை நெகிழச் செய்யும். உயரதிகாரிகளின் வீடுகளில் ஏவலர்களாகப் பணி செய்யும் காவல் துறையினர் தொடங்கி காவல் நிலையங்களின் உள்கட்டுமானப் பணிகளுக்கு போதிய நிதி இல்லாமல் வசூலித்து பணிகளைச் செய்யும் காவலர்களை நான் அறிவேன். ஒரு ஏ-4 சைஸ் பேப்பர் கூட சில காவல் நிலையங்களின் பிரச்சனைகள்தான்.

நமது நிர்வாக அமைப்பே தேர்தல் அரசியலோடு நெருங்கிய ஒன்றாக இருக்கிறது. அதிமுக, திமுக எதுவாக இருந்தாலும் யார் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்களோ அவர்களுடைய நிர்வாகமாகவே உள்ளது. அரசியல் தலைமைகள் வேறு, அரசு இயந்திரம் வேறு என்ற பண்பு நிலை இங்கு உருவாக வில்லை. புரையோடிப் போயுள்ள இந்த ஊழலுக்கும் இதுதான் காரணம். ஊழல் கரைபடிந்த இந்த சமுக அமைப்பிற்குள் ஒரு நேர்மையான அதிகாரி தன்னை தற்காத்துக் கொள்வதே பெரிய சவால்தான். இப்படி எண்ணற்ற நேர்மையாளர்களில் ஒருவர்தான் விஷ்ணு ப்ரியா.அவர் காதலித்தாரா என்பது தெரியாது ஆனால் காதலிப்பது அவரது தனி உரிமை அதில் எவரும் தலையிடவும் முடியாது காரணங்களும் கற்பிக்க முடியாது.

இதை விஷ்ணு ப்ரியாவின் தற்கொலையாக மட்டும் சுருக்கி கதைக்க வேண்டிய விஷயம் அல்ல காவல் சீர்திருத்தம், அரசியல்வாதிகள், சாதி வெறியர்களிடம் இருந்து அரசு நிர்வாகத்தை மீட்டெடுத்தல் என பல தளங்களில் விவாதிக்க வேண்டிய விஷயம் இது. இந்த வழக்கை வைத்து போலீசை விமர்சிப்பவர்களை சிறையில் தள்ளு என்கிறார் என்கவுண்டர் புகள் வெள்ளைதுரை, ஆனால் பகிரங்மாக போலீசுக்கு சவால் விட்டு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்புகிறார் யுவராஜ். உண்மையில் இதுதான் போலீசுக்கு நேர்ந்த அவமானமே தவிற சமூக வலைத்தளங்களில் வைக்கும் விமர்சனங்கள் அல்ல. இதே நிலை நீடித்தால் நாளை கொள்ளையடிப்பவன் கூட வேறு சாதி ஆட்களின் வீடுகளில் சாதி பேனரோடு கொள்ளையடித்து விட்டு.. என் சாதிக்காரனை கைவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா என்று படை திரட்டும் சூழல் உருவாகும். காவல்துறையை அரசியல் கட்சிகள், தேர்தல் லாபங்களுக்கு கட்டுப்பட்ட அமைப்பாக நடத்துவதில் இருந்து விடுவிக்க வேண்டும். பெரும்பான்மை சாதிகளை நம்பி நடக்கும் அரசியல் கட்சிகளைப் பொல அரசு இயந்திரத்தையும் மாற்றுவதால் உருவான புற்று நோய் இது.

Tags: , , , , , , , ,

Category: அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

One Comments

  • jb raj

    உண்மையை பளிச்சென பகிர்ந்துள்ளீர்கள்

Leave a Reply