அய்லான் குர்தியும் வெள்ளை நிறத்தில் பல கண்ணீர்களும்….

Oleh: Arulezhilan
September 10, 2015


‘’கனவுகள் நிரம்பிய இந்த பயணம், இனிய பயணமாக இருக்கும் என்று என் குழந்தை அய்லனிடம் சொன்னேன். அவனோ ‘’அப்பா நாம் எங்கே போகிறோம்’ என்று கேட்டான். ‘’அய்ரோப்பாவிற்கு” என்றேன் .இருபது நிமிடங்கள் கழித்து ஒரு பெரிய அலை எங்கள் படகை கவிழ்த்து புரட்டியது. நான் குழந்தைகள் இருவரையும் இறுக்கப் பிடித்துக் கொண்டேன். நான் அவர்களை அழுத்தமாக சுவாசிக்கச் சொன்னேன். ஆனால் இடது கையில் இருந்த காலிப் உயிரிழந்திருந்தான் அவனை அப்படியே கடலில் விட்டேன். வலது கையில் இருந்த அய்லனின் கண்கள் ரத்தச் சிகப்பாக மாறியது. என் கடைசி குழந்தையையும் கடலில் விட்டேன். இன்று உலகம் முழுக்க என் கதையை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் என் குழந்தைகளும் மனைவியும் பசித்திருந்த போது நான் உதவி வேண்டி நின்ற போது இந்த உலகமும், உங்கள் கருணையும் எங்கே போனது?” என்று கண்ணீர் வழிய கேட்கிறார் அப்துல்லா குர்தி.

சிரியாவின் கொபனில் ஆலிவ் மரத் தோட்டங்களைக் கொண்ட விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அப்துல்லா ஒரு கோடை விடுமுறையில் ரெஹேனாவைப் பார்த்ததும் பிடித்துப் போக அவரை திருமணம் செய்து கொண்டார். முதலாவது மகன் காலிப்பும், இரண்டாவது குழந்தை அய்லனும் பிறந்து சந்தோசமாக கழிந்த வாழ்வு ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்) பயங்கரவாதப் படைகளால் நாசமானது. தனது பாரம்பரீய வீட்டையும், வளமான ஆலிவ் தோட்டங்களையும் விட்டு விட்டு சிரியாவில் இருந்து குடும்பத்தோடு அகதியாக வெளியேறி துருக்கியில் இருந்த படி கனடாவில் அகதித் தஞ்சம் கேட்டார் அப்துல்லா. கனடா அவருக்கு அகதி அந்தஸ்தை நிராகரித்தது. அகதியாக தன் குடும்பத்தை பதிய வேண்டும் என்ற கோரிக்கையை அகதிகளுக்கான ஐநா பிரிவுவும் நிராகரிக்க தன் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கோடு ஒரு சட்ட விரோத குடியேறியாக துருக்கியில் இருந்து கிரீஸ் நோக்கி சிறிய படகொன்றில் பயணம் போனார் அப்துல்லா. இப்போது தன் குடும்பத்தோடு தன் மனைவி குழந்தைகளை பறி கொடுத்து சிரியாவுக்கே திரும்பி வந்து மனைவி, குழந்தைகளை புதைத்து விட்டு நிற்கிறார். நாடற்றவரான அப்துல்லாவின் பயணம் முடிந்து விட்டது. துருக்கியின் போட்ரம் கடற்கரையில் ஒதுங்கிய அப்துல்லாவின் குழந்தை ஐலனின் சடலம் ஐய்ரோப்பாவின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. 2015 – மார்ச்சில் அபதுல்லாவின் அகதிக் கோரிக்கையை நிராகரித்த அதே கனடா குடும்பத்தை இழந்து நிராதரவாக நிற்கும் அப்துல்லாவை குடியுரிமை தருகிறோம் வா என வருந்தி அழைக்கிறது.அகதி அந்தஸ்தை அப்துல்லாவுக்கு வழங்க மறுத்த ஐநாவோ ஐய்ரோப்பிய நாடுகள் அகதிகளை ஏற்க வேண்டும் என பசாங்கு செய்கிறது.

இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரியாவில் அநாதரவாக நின்ற கண்டெயினர் லாறியை திறந்து பார்த்த போது அதில் 71 அகதிகளின் சடலங்கள் இருந்தன. பெரும்பாலானவர்கள் சிரிய அகதிகள். 59 ஆண்களும், 8 பெண்களும், நான்கு குழந்தைகளும் ஆக்சிஜன் இல்லாமல் உறைந்து பிணமானதில் பயணவழியில் பிறந்த பிஞ்சு சிசுவும் அடக்கம். இப்போதல்ல எத்தனையோ ஈழத் தமிழர்கள் எல்லைகளைக் கடக்க கண்டெயினர்களில் ஏறி மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள்.ஏதோ ஒரு ஐய்ரோப்பியன் அந்த இடத்தில் ஒரு பூவையோ, மெழுவர்த்தியையோ கொளுத்தி விட்டு போவான். அப்போதெல்லாம் மனம் இறங்காத மேற்குலகத்தையும் ஐநாவையும் உலுக்கி யிருக்கிறது அயலன் கவிழ்ந்து கிடந்த படம். நிலூஃபர் டெமிரின் இந்த படத்தை வியட்நாமிய சிறுமியின் படத்தோடு ஒப்பிடுகிறார்கள். இந்த படம் வியட்நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல சிரிய யுத்தம் (மத்திய கிழக்கு யுத்தம்) முடிவுக்கு வரவேண்டும் என்கிறார்கள் ஐய்ரோப்பியர்கள். புகைப்படங்கள் உருவாக்கும் வலியும் வேதனைகளும் ஒன்றுதான் என்றாலும் இந்த இரு புகைப்படங்களின் பின் உள்ள அரசியல் வேறு.அமெரிக்கா மீள முடியாத தோல்வியும், பெரும் நட்டமும் அடைந்து வியட்நாமை விட்டு வெளியேறியது. வியட்நாம் போரை பொருத்தவரை அது லாபம் தராத நட்டப் போர். அதற்கு மேலும் வியட்நாம் போரை அமெரிக்கா நடத்தியிருந்தால் அமெரிக்கர்களே சுதந்திர தேவியை மின்சார நாற்காலியில் அமர்த்தியிருப்பார்கள். ஆனால் மத்திய கிழக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்காவும் மேற்குலகமும் நடத்தும் போரில் பல லாபங்கள். எண்ணைய் வளங்கள், ஆயுத விற்பனை என பல விதமான லாபங்களை அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகள் பாத்துக் கொண்டிருக்கின்றன.லாபம் தரும் அந்த யுத்தத்தை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.இன்னொரு பக்கம் ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க மிகப்பெரிய போருக்கு மேற்குலகம் தயாராகி வருகிறது.மேலும் மேலும் இந்த போர் இறுகிச் செல்லுமே தவிற முடிவுக்கு வராது. மத்திய கிழக்கின் எண்ணெய் வயல்கள் வற்றும் வரை அய்லனின் புகைப்படம் நமது கண்ணீராக மாறுமே தவிற மத்தியகிழக்கில் அமைதியைக் கொண்டு வராது. ஏனென்றால் ஐநா விரும்பும் அமைதி என்பது அய்லனின் புகைப்படத்தில் இல்லை. அது எண்ணெய் கிணறுகளில் உள்ளது.அதே நேரம் ஐய்ரோப்பிய மக்கள் தங்கள் அரசுகள் நடத்தும் போருக்கு எதிரான மன நிலை கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் போருக்கு எதிராக தங்களின் சொந்த அரசுகளுக்கு எதிராக போராடியே வந்துள்ளார்கள். போருக்கு எதிரான உணர்வை உசுப்பி விட்டிக்கிறது அய்லனின் புகைப்படம். இந்த உணர்வு போருக்கு எதிரான பெருந்திரள் போராட்டங்களை உருவாக்கி மக்களை தங்களின் சொந்த அரசுகளுக்கு எதிராக வீதிக்கு கொண்டு வந்து விடக் கூடாது என்பதே இப்போது ஐநா மற்றும் ஐய்ரோப்பிய நாடுகளின் கவலை. அதனால்தான் அகதிகளை சிறிய அளவில் ஏற்றுக் கொண்டு அகதிகள் மீது கரிசனம் உள்ளது போல பாவனை செய்கிறார்கள்.

இப்போது ஐய்ரோப்பாவின் ஒரு வாசலான துருக்கி அகதிகளால் நிரம்பி வழிகிறது.இது இரண்டாம் உலகப்போரின் ஒரு விளைவான ’பால்கன்’ போருக்குப் பிந்தைய அகதி அவலம் என்கிறார்கள். ஹங்கேரியின் பழமைவாத வலது சாரி அரசோ இஸ்லாமியர்கள் ஐய்ரோப்பாவுக்குள் நுழைவதை விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே சொல்கிறது.அய்லனின் படம் ஹங்கேரியின் ஆன்மாவை எதுவுமே செய்ய வில்லை. அது கிட்டத்தட்ட தன் நாட்டை தஞ்சம் தேடி வருகிறவர்கள் நுழைந்து விடாத படி பூட்டி வைத்திருக்கிறது. ஜெர்மனி மட்டும் அகதிகளை வரவேற்கிறோம் என்கிறது. அகதிகளை கட்டாயமாக திருப்பி அனுப்பிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா தான் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் ஆண்டுக்கு இவ்வளவுதான் முடியும் என ஒரு கணக்குச் சொல்கிறது. அகதிகள் என்ற பொதுப் பார்வையை விட சிரிய முஸ்லீம் அகதிகள் என்ற எண்ணமே ஐய்ரோப்பிய கிறிஸ்தவ மனச்சாட்சியை உலுக்கிறது. ‘’ஒவ்வொரு அகதிகளையும் கத்தோலிக்கர்கள் தத்தெடுக்க வேண்டும்” என்று போப் பிரான்சிஸ் சொல்வதற்கு முன்பே ஐய்ரோப்பிய மக்கள் அகதிகளை வரவேற்றார்கள்.ஆனால் அரசுகள் சமாளிக்கின்றன.

சிரியாவுக்கு ஏழு பில்லியன் டாலருக்கு மேல் ஆயுதங்களை விற்று லாபம் பார்த்த அமெரிக்கா 1,434 அகதிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. 718 மில்லியன் அளவுக்கு ஆயுதம் விற்ற கனடாதான் அப்துல்லாவின் குடும்பத்துக்கு அகதித் தஞ்சம் கொடுக்க மறுத்தது. பெருமளவு ஆயுதங்களை விற்று லாபம் ஈட்டும் நாடுகள் மிகக் குறைந்த அளவில் சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இந்த யுத்தத்தில் பங்கேற்காத லாபம் பார்க்காத அர்ஜெண்டீனா அகதிகளை அரவணைக்கிறோம் வாருங்கள் என்கிறது. ஹங்கேரி தன் எல்லையை இறுக்க மூடி அகதிகளை வேலிகளுக்குள் முடக்கி துரத்துகிறார்கள். எல்லைகளை வலுவாக்குகிறார்கள். இன்னொரு பக்கம் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அகதிகள் சிரியாவில் இருந்து வெளியேறுவதை விரும்பாமல் அங்கும் கண்காணிப்பை இறுக்கியிருக்கிறார்கள். ஆனால் சொந்த நாட்டில் வாழ முடியாத ஒரு அகதிக்கு எல்லைகள் ஏது ? எல்லைகளே இல்லாத ஒரு உலகம் சமைத்து அதன் ஒரு மூலையின் அவனும் அவனது மூன்று வயது அய்லானும் அமைதியாக நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் தேசங்களின் எல்லைகளில் இறுகிச் செல்லும் காலத்தில் வாழ்கிறோம் என்பது யதார்த்தம் அல்லவா?

Tags: , , , , , , , , , ,

Category: அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

6 Comments

Leave a Reply