கனவின் யாசகன் – பாலுமகேந்திரா – ஒரு அஞ்சலிக் குறிப்பு.

Oleh: Arulezhilan
February 14, 2014

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய போது பாலுமகேந்திராவையும், பாரதிராஜாவையும் நாம் போய் தான் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதிலும் நான் பொறாமைப்படத் தக்க காட்சி மொழியை பாலுமகேந்திரா மட்டுமே கொண்டிருந்தார் அதுதான் உண்மை.

சினிமா வேட்கை கொளுந்து விட்டு எரிந்த அந்த வயதில், சென்னைக்கான அந்த முதல் பேருந்து பயணத்தில் முகத்தில் அறைந்த காற்று எந்த யதார்த்தத்தையும் எனக்கு சொல்லித் தரவில்லை.
எனக்கான திரைப்பட மொழி உருவானது மலையாள சினிமாக்களில் இருந்து மட்டுமே. ராமுகாரியத்தின் ‘ செம்மீனும்’, வாசுதேவன் நாயரின் ‘கடவும்’,சேதுமாதவனின் ‘ஓப்போல்” அது போல எலிப்பத்தாயம், சதயம், மதிலுகள், தெய்வத்திண்ட விகுருதிகள், தூரே தூரே ஒரு கூடு கூட்டாம் என்று ஏகப்பட்ட மலையாளப்படங்கள்தான் எனக்கான திரை மொழியை உருவாக்கின. இவைகள் எல்லாம் நான் தேடித் தேடி 92 -களுக்குப் பிறகு பார்த்த படங்கள். தமிழில் அப்போது பார்த்த படங்கள் ஜல்லிக்கட்டு, மிஸ்டர் பாரத்,மனிதன், அல்லது சகலகலாவல்லவன், தீச்சட்டி கோவிந்தன். இப்படியே காணக்கிடைத்தன. மலையாள சினிமாக்கள் உருவாக்கிய வேட்கையை தமிழில் யார் ஆற்றுப்படுத்துவார்கள் என்றால் பாலுமகேந்திரா சார் மட்டும்தான். பாரதிராஜாவின் படங்கள் ஈர்த்தன ஆனால் அது என்னை மிரட்டியது. பாலுசார் என்னை மிரட்டவில்லை. ஆன்மாவுக்கு மிக அருகில் பயணித்தார். ஆக அவரை வெல்ல வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது.

ஊடகத்திற்கு வந்த போது முதன் முதலாக ஆசை ஆசையாய் பேட்டி எடுத்தது மலையாள இயக்குநர் சிபிமலையிலை. என் ப்ரியத்திற்குரிய சிபியை எடுத்தேனே தவிற இதுதான் என் மொழி என்று நம்பிய பாலுசாரை நான் பேட்டி எடுத்ததில்லை. தனுஷ்சோடு ஒரு படம் அவர் பண்ணிய போது அதை ஒரு சினிமா பேட்டியாக மட்டுமே எடுத்து விட்டு வந்தேன்.ஒரு புகைப்படம் கூட அவரோடு நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
அவர் இன்று இல்லை இறந்து விட்டார். அவரது படைப்புகள் இன்று பெரிய அளவில் கொண்டாடபடுகின்றன. வீடு வெளிவந்த காலத்தில் சீந்துவார் இல்லை. உண்மையில் திரையரங்கில் வந்ததா என்றும் தெரியவில்லை. வர்த்தகச் சூதாடிகளிடம் தன்னை விற்றுக் கொள்ளாத ஒரு கலைஞனாக வாழ்ந்தார் அவர். என்னால் அவரை இறுதிவரை நெருங்கவே இயலவில்லை. அந்தப்பள்ளியில் இருந்து வந்தவர்கள் தமிழ் சினிமாவின் முகத்தையே அடியோடு மாற்றி விட்டார்கள்.அதன் வளர்ச்சியில் ஆடிக் கொண்டிருக்கும் நிழல் பாலுசாருடையது.

அவர் தேர்ந்தெடுக்கும் முகங்கள் எல்லாம் சாதாரண தமிழ் முகங்கள், கருப்பர்கள், வண்டி வண்டியாய் மேக்கப்கிட்களை காலி செய்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒப்பனைகளைற்றவர்களை அவர் அதன் இயல்போடு படமாக்கினார். ஒளிப்பதிவு பற்றியும், கேமிரா பற்றியும் பல மூட நம்பிக்கைகள் நிலவிய காலத்தில் ஒளியை அதன் இயல்பில் படமாக்கிக்கொடுத்தார். இப்படி நிறைய எழுதலாம் .

இறுதியாக,

தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு என்ற மெகா திட்டத்திற்காக ஜெயலலிதா ஒரு குழுவை நியமித்தார் அதில் எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.என். ராஜம், ராஜஸ்ரீ (பழம் பெரும் நடிகை,முக்கியமாக தமிழே தெரியாது) இவர்களோடு சுமாராக 22 பேர் வரை ஏசி அரங்கில் குளிதாங்க முடியாமல் கம்பளிப்போர்வைகளை போர்த்தியபடி படம் பார்ப்பார்கள். இவர்கள்தான் தமிழ் சினிமாவின் தலையெழுத்தை தீர்மானிப்பவர்கள். இதுதான் சூழல்………
ஐந்து தேசிய விருதுகளைப் பெற்று தமிழ் சினிமாவுக்கு கவுரவம் தேடித் தந்த அந்த மகா கலைஞனுக்கு ஒரு நாள் துக்க தினம் கூட அறிவிக்காத இவர்கள் திரையரங்கில் இருந்து முதல்வர் ஆனவர்கள்.

இதுவே கேரளாவாக இருந்தால் ஒருவாரம் அரசு முறை துக்க தினம் அறிவித்திருப்பார்கள் என் பாலுவுக்காக. அந்த என் போட்டியாளனுக்காக……..

Tags: , , ,

Category: அனுபவம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

2 Comments

  • Tharcius S.Fernando

    Please read my letters published in ‘The New Indian Express’ and ‘Deccan Chronicle’ today. If same vindicate your thinking on Balu Mahendra, You may also flash them here as a tribute to this Pithamagan.
    Tharcius S.Fernando

  • GREAT AND CREATIVE FILM DIRECTOR FROM EELAM! LIKE VIPULANANDAR, HE WAS A GOODWILL AMBASSADOR IN TAMILNAADU!

Leave a Reply