வரலாறுகளைப் புறக்கணிப்போம். ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாற்றை கட்டி எழுப்புவோம்

Oleh: Arulezhilan
February 1, 2011

//மதுரை உத்தப்புரத்தில் பல்வேறு சமுதாய மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இரு பிரிவினரிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டாலும், உடனே இரு சமுதாய பெரியவர்களும் பேசி தீர்த்துக்கொள்வர். முத்தாலம்மன் கோவில் பிள்ளைமார்களுக்கு சொந்தமான நிலத்தில் அவர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. இப்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆலயப்பிரவேசம் என்று அறிவித்து பதட்டத்தை உருவாக்கியுள்ளனர்.அவர்கள் இப்போராட்டத்தை கைவிட்டு, உத்தப்புரம் மக்கள் அமைதியாக வாழ வழிவிட வேண்டும்.//

ஏ.சி சண்முகத்தின் சமூக நீதியின் யோக்கியதை இதுதான். நீ கட்டும் சுவரை ஏற்றுக் கொண்டு. அதற்குள் நான் வாழப்பழகினால் அதற்குப் பெயர் அமைதி….. சுவரை இடித்து விட்டு. கோவில் நிலத்தை பொதுப் புழக்கத்திற்கு திறந்து விடு என்றால் அதற்குப் பெயர் கலகம்……

ஹலோ சண்முகம் சார்! பெருசுங்க பஞ்சாயத்து பண்ணி ஒடுக்கப்பட்ட மக்கள் தலையில் சட்டியைக் கவிழ்த்த காலம் முடிந்து விட்டது. இந்தக் கலத்தை தமிழகம் முழுக்க கொண்டு செல்லும் மக்களின் உரிமைக்குரல் எல்லா இடங்களிலும் முணு முணுப்பாக கேட்பது உங்கள் சமூக நீதிக் காதில் விழவில்லையா? ஆமா சமூக நீதிண்ணா என்னங்க? ஒரு மனிதன் வாயில் மலத்தை திணிக்கிறதா?

………………………………………………………..

“இவனெல்லாம் சட்டம் படிக்க வந்தா இப்படித்தாண்டா நடக்கும்”

“என்ன கொடூர வெறி”

“இவனுங்க சட்டம் படிச்சா நீதிமன்றம் என்னவாகும்”

இதெல்லாம் சட்டக்கல்லூரி சம்பவம் தொடர்பாக ஆதிக்க சாதி மத்யமர் மனோபாவக் கருத்துக்கள். சரி இவெனெல்லாம் சட்டம் படிக்க வராமல் இருந்திருந்தால், நகரச் சூழலில் சாத்தியப்படும் ஒன்றை ஈடேற்றாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தாமரைகுளம் தலித்துகள் மீதான தாக்குதல் ஒரு உதாரணம்.

இன்றைய தேதியில் தலித்துகளுக்கு மிகவும் வசதியான ஒரு இடமாகவும் பாதுகாப்பான இடமாகவும் நகரம் மாறியிருக்கும் நிலையில் கிராமங்களில் கொடூர சாதி வெறியாட்டம் எவளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு நண்பர் ஆதவன் தீட்சண்யாவின் இக்கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு.

திருமா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழர் தலைவர் ஆக முடியாது அப்படியான ஒரு சாதியில் அவர் பிறக்கவும் இல்லை. நண்பர்களே உடனே நீங்க என்ன கூட்டணி மாறி விட்டீர்களா? என்று கேட்காதீர்கள்.

//ஈழத்தில் படுகொலைகளை நடத்திய காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திருமா இனப்படுகொலைகளுக்கு எதிராக தீக்குளித்து தன் உயிர் நீந்த முத்துக்குமாருக்கு சிலை திறப்பது எப்படிச் சரி?//

இது மட்டும்தான் இது ஒன்றுதான் நியாயமான கேள்வி. அதை நான் ஆதரிக்கவும் செய்கிறேன். போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதாவுக்குக் கொடி பிடிப்பவர்களோ, போரே நின்று விட்டது என்று எழுந்து போன கருணாவுக்குக் கொடி பிடிப்பவர்களோ கூட முத்துக்குமாருக்கு சிலை திறக்கும் யோக்கியதை அற்றவர்கள் (சிலை திறக்க கருணா மட்டும் அனுமதித்து விடுவாரா?) அதுதான் உண்மை.

தங்களின் சுயலாப தேர்தல் கோஷங்களுள் ஒன்றாக ஈழத்தை மாற்றியவர்கள் இப்போது கிடைப்பதை எல்லாம் மாற்றுகிறார்கள். ஆனால் அந்த உரிமை திருமாவுக்கு மட்டும் கிடையாது என்பதுதான் நாம் கண்டு கொள்ள வேண்டிய உண்மை. அது போல முத்துக்குமார், இன்று ஒரு பிராண்ட் – சே, பிரபாகரன், பெரியார், அண்ணாதுரை, மாதிரி முத்துக்குமாரும் ஒரு பிராண்டட் ஆக்கப்பட்டு விட்டார்.

திருமா அந்த பிராண்டை கைப்பற்ற நினைக்கும் போது ஆதிக்க சாதி தமிழ் மனம் அதை அனுமதிக்க மறுக்கிறது. கடையடைப்புச் செய்கிறது. திருமாவின் தம்பிகள் உஷ்ணமாகி தகறாரு செய்தால் அதை வன்முறை என்று திரிக்கிறது ஆதிக்கசாதி மனம்.

மீனாட்சிபுரத்திலும், திண்ணியத்திலும், உத்தபுரத்திலும், கொடியங்குளத்திலும், வடக்கன்குளத்திலும், விழுப்புரத்திலும் என தமிழகமே சாதிச் சுவர்களால் பிளவுண்டு கிடக்கும் சூழலில், பௌத்தம், திராவிடம், என்று முற்போக்கான தத்துவங்கள் எல்லாமே அனுபவத்தில் வேறாக இருக்கிறது. இன்று அதிராகமற்ற தமிழ் தேசியத்தை கண்டிக்கும் நாம் பார்ப்பனரல்லாத முற்போக்கு சாதி அதிகாரமாய், பிற்படுத்தப்பட்ட சாதி அதிகாரமாய் உரைந்து போயுள்ள திராவிட அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கவில்லை. சந்தேகம் வேண்டாம் நாளை இந்த இடத்தில் தமிழ் தேசியவாதிகளும் வருவார்கள். அது எனக்கு தெரியும். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லையோரப் பழங்குடிகள், சிறுபான்மை மக்களினங்கள், நாயினும் கீழாய் வாழும் மக்களின் நோக்கில் புதிய வரலாறுகளை நாம் எழுப்ப வேண்டும். அடித்தட்டு மக்களின் விடுதலையே உண்மையான சமூக விடுதலை. இக்கட்டுரையில் பொதிந்துள்ள உண்மையும் அதுதான்.

—————-

எகிப்து இந்தியருக்கு தனி விமானம், தாமரைக்குளம் தலித்துக்கு எம வாகனம் – ஆதவன் தீட்சண்யா


காந்திஜியின் நினைவுநாளான இன்று (ஜனவரி 31) தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் சடங்கை மத்திய மாநில அரசுகள் வெகுஜோராக நடத்தி முடித்திருக்கின்றன. இந்தச் சடங்கை நிகழ்த்துகிற நாளிலாவது ஒரு ஒப்புக்காகவேனும் தீண்டாமைக்கொடுமைகள் நிகழாத வண்ணம் ஜோடித்துக் காட்டுவதற்கும்கூட துப்புக்கெட்டு கிடக்கின்ற அரசுகள் இந்த நாட்டுக்கு வாய்த்திருக்கின்றன.


உத்தபுரத்தில் ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எதைப் பாதுகாக்க? அங்குள்ள முத்தாலம்மன் கோவிலுக்குள் தலித்துகளுக்குள்ள வழிபாட்டுரிமையைப் பாதுகாக்கவா? அப்படியொரு சுக்குமில்லை. அந்த கிராமத்தில் உள்ள ஆதிக்கசாதியினரின் தீண்டாமை வெறியை அரசு செலவில் பாதுகாக்க அங்கு போலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள், வழிபாட்டுரிமையை நிலைநாட்டச் சென்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் தொண்டர்களையும் உத்தபுரம் தலித்துகளையும் தடுத்து நிறுத்தி ஆதிக்கசாதியினரின் குற்றச்செயலுக்கு காவல் காத்து நின்றுள்ளனர். வாழும் சமத்துவப் பெரியாரது ஆட்சியின் வண்டவாளம் இப்படியாக தண்டவாளம் ஏறுவது உத்தபுரத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட இதே கொடுநிலைதான் என்பதற்கு இதோ இன்றைய புத்தம்புது உதாரணம் தாமரைக்குளம் வன்கொடுமை.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமம் தாமரைக்குளம். அங்குள்ள தலித்துகளின் 33 வீடுகளும் நேற்று (30.1.11) மாலை ஆறரை மணியளவில் தாமரைக்குளம் கள்ளர்களாலும் தச்சனேந்தல் தேவர்களாலும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த கடையும் கூரைவீடுகளும் அறுவடை செய்து களத்திலிருந்த நெற்கதிர்களும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆண்கள் வேலைநிமித்தமாக வெளியூர்களுக்கு சென்றுவிட்டிருந்த நிலையில் கைக்கு சிக்கிய பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் யாவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அய்யாக்கண்ணு என்ற முதியவர் மிகக்கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். இடிக்கப்பட்ட வீடுகளில் கேட்பாரற்றுக் கிடந்த பீரோக்களை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணிந்திருந்த நகைகளை அறுத்தெடுக்கவும் தவறவில்லை. பறையர் வீட்டுப் பீயை கிளைத்துத் தின்று கொழுத்திருந்த கோழிகளையும் களவாண்டுப் போயுள்ளனர்.

இத்தனைக் கொடூரங்களையும் அவர்கள் நிகழ்த்துவதற்கு என்னதான் காரணம்? கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்று திருமாவளவன் நடத்திய தமிழர் இறையாண்மை மாநாட்டு சுவரொட்டியை தாமரைக்குளம் தலித் இளைஞர்கள் கிராமத்திற்குள் ஒட்டிவைத்துள்ளனர். தலித் உரிமை பற்றி பேசுவதை நிறுத்திக்கொண்டு தமிழர் உரிமை பேசுகிற பொத்தாம்பொதுவான பெரியமனுசன் பாத்திரத்தை திருமாவளவனுக்கோ தலித்துகளுக்கோ வழங்க ஆதிக்கசாதி மனம் இடம் கொடுத்துவிடுமா என்ன? இறையாண்மை மாநாட்டு சுவரொட்டிகள் மீது சாணியடித்து தன் ஒவ்வாமையை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து முக்குளம் காவல்நிலையத்தில் தலித்துகள் புகாரிட்டதை முன்னிட்டு இந்த சாணியடிப்பு சண்டியர்களை விசாரணைக்கு அழைத்துப்போயுள்ளது போலிஸ். அப்போதைக்கு தப்பிக்க காவல்துறையினர் முன்னிலையில் தலித்துகளை சமாதானம் செய்த கள்ளர்கள் குற்றவாளிகளை அழைத்துவந்துவிட்டனர். ஆனாலும், தங்களை மீறி போலிசுக்குப் போய்விட்ட தலித்துகளின் தைரியத்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அவர்களின் வன்மம் அடங்கவில்லை. பொங்கல் சமயத்தில் தாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் 30.1.11 அன்று மாலை வன்கொடுமை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர்.

தாமரைக்குளம் கள்ளர்களுடன் தச்சனேந்தல் தேவர்களும் இந்த வெறியாட்டத்தில் இணைந்துள்ளனர். சுற்றுப்பக்க கிராமங்களிலும் இவர்கள் தமது சாதியினரை திரட்டும் கெடுநோக்கில் இறங்கியுள்ளனர். இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் திரு.ஆற்றலரசு மற்றும் பொன்திருமா ஆகியோர் தாமரைக்குளத்திற்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து தைரியப்படுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் உடனடி தலையீட்டைக் கோரியுள்ளனர். தாமரைக்குளம் தலித்துகளுக்கு உறவினரான தோழர் காசிநாத துரை ( எழுவணி கிராமம் ) தான் இந்த வன்முறை குறித்தத் தகவலை நமக்கு தெரிவித்தார். புதக்கோட்டையிலிருந்து மருத்துவர் ஜெயராமனின் அலைபேசி வழியாக இந்தச் செய்தியை சொல்லிவிட்டுக் கிளம்பிய அவர் இப்போது தாமரைக்குளத்தில் தன் சொந்தங்களோடு துணையாக இருக்கிறார்.

செய்திகளை முந்தித்தருகிற புடலங்கா புண்ணாக்கு டிவி பத்திரிகை எதுவும் இதுவரை இந்தச் செய்தியை வெளியிடவில்லை. மருத்துவர் ஜெயராமன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இப்போது சில செய்தியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். உத்தபுரம் கோவில் நுழைவுப்போராட்டத்தால் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொறுப்பாளர்களுக்கு தாமரைக்குளம் வன்முறை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களும் விடுதலையாகி அங்கு விரைகின்றனர்.

எகிப்தில் கலவரம் என்றதும் இந்தியர்களை பத்திரமாக அழைத்துவர தனிவிமானம் அனுப்புகிற ஆட்சியாளர்கள், இன்றிரவு எவ்வகையான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற அச்சத்தில் வெட்டவெளியில் நின்று தவிக்கும் தலித்துகளைக் காப்பாற்ற இதுவரை ஒன்றையும் புடுங்கவில்லை என்பது மட்டும் உண்மை.

நன்றி:- ஆதவன் தீட்சண்யா

Category: கட்டுரைகள் | RSS 2.0 | Give a Comment | trackback

One Comments

Leave a Reply