ரிஸானா

Oleh: Arulezhilan
January 11, 2013

30-01-2007

அல் த்வாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி, சவுதி அரேபியா.


எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள். கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.

அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை”g>

ரிஸானா நபீக்.

அல் த்வாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி, சவுதி அரேபியா.


இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மூதூர் பகுதி கிராமமொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை ரிஸானாவை 17 -வயதில் வீட்டு வேலைக்காக அனுப்புகிறார்கள். தங்களுடைய வறுமையைப் போக இக்குழந்தையை வீட்டு வேலைக்கு அனுப்ப சட்ட ரீதியான சாத்தியங்கள் இல்லாத போது 1998-ல் பிறந்த ரிஸானாவில் பிறந்த நாளை 1982 என மாற்றி வயதை அதிகமாக்கி பாஸ்போர்ட் எடுத்து அனுப்புகிறார்கள். இது இலங்கையில் மட்டுமல்ல அரபு நாடுகளுக்கு இப்படியாக பல ஏழைக் குழந்தைகள் ஏஜெண்டுகள் மூலம் அனுப்பப்படுகிறார்கள். ஏழ்மையைத் தவிற வேறு எந்த காராணங்களையும் சொல்ல முடியாது. ஆனால் தேயிலைப் பயிற் செய்கைக்கு கங்காணிகள் என்ற பெயரில் ஏஜெண்டுகள் எப்படி ஏழைகளை 19-ஆம் நூற்றாண்டில் கடத்திச் சென்று மலைக்காடுகளில் விட்டார்களோ, அப்படியே ஏஜெண்டுகள் இந்த ஏழைகளை கடவுச்சீடுகள் மூலம் அரபு நாடுகளுக்குக் கடத்துகிறார்கள்.

10 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 16 வயது ரிஸானா நபீக் சமைக்கிறாள், துணி துவைக்கிறாள், வீட்டைச் சுத்தம் செய்கிறாள், தன் எஜமானியின் நன்கு மாத குழந்தைக்கு ஊட்டுகிறார். கடைசியில் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றதாக 17 வயதில் கைது செய்யப்பட்டு இப்போது 24 வயதில் தலை வெட்டப்பட்டு சவூதி மன்னராட்சி அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்.

தமிழைத் தவிற வேறு மொழியறியாத ஒரு குழந்தை தன்னை விட 17 வயது குறைவான நான்கு மாதக் குழந்தையை கவனித்துக் கொள்கிறது. இடம் புதிது, மொழி தெரியாது. சம்பவம் நடந்த போது வீட்டிலும் எவரும் இல்லை. ஒரு சின்னக் குழந்தையிடம் ஒரு பெரிய குழந்தை துரதிருஷ்டமான ஒரு நேரத்தில் எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் ரிஸானாவும் நடந்தாள். ஏனெனில் ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் குழந்தைக்கு நடக்கிறது, அதற்கு புரை ஏறி மூச்சுக்குழாய்க்குள் பால் அடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பிராயமோ, புரையேறிய குழந்தையை சரிந்த வாக்கில் படுக்க வைத்து முதுகைத் தட்டிக் கொடுத்தால் ஒரு வேளை சரியாகும் வாய்ப்பு உள்ளது என்பதோ இந்தப் பெரிய குழந்தைக்கு எப்படித் தெரியும் என எதிர்ப்பார்க்க முடியும்?

ஆக மொத்தம் ரிஸானா வறுமையின் நிமித்தம் சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சிறைக்குச் சென்று விடுகிறார். சிறையில் கழிந்த இந்த ஏழு ஆண்டுகளில் அவருக்காக ஒரு வழக்கறிஞர் கூட நியமிக்கப்பட்டு வாதாடியதாகத் தெரியவில்லை. நிலப்பிரவுத்துவம் வீழ்ந்து முதலாளித்தும் நமக்கு இந்த நவீன உலகையும் சிந்தனைப் போக்கையும் கொடுத்த பின்னரும் இன்னமும் மன்னராட்சி முறையை சவுதி அரேபியா வைத்திருக்கிறது. வஹாபிசம் எனப்படும் படு பிற்போக்கான சிறிதும் ஜனநாயகமற்ற கடும் ஒழுக்க தேசியவாதப் போக்கைக் கொண்ட சவுதி, அரபுத் தேசியத்தின் அடையாளமாக தன்னை நிறுத்திக் கொள்கிறது.

இம்மாதிரியான தண்டனை முறைகளால் மக்களை நிரந்தரமான அச்சத்துள் வாழ வைப்பதே அதன் ஆன்மா. இஸ்லாத்தின் மேன்மை மிக்கவனாக தன்னை காட்டிக் கொள்ளும் மன்னராட்சி சவுதியில் மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த தொழிலாளார்களில் நிலை மிக பரிதாபம், வறுமையாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சுதந்திரமானவைதான் இங்கிருந்து செல்லும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படும் நிலையில் இதிலிருந்து முஸ்லீம் தொழிலாளர்களும் விதிவிலக்கில்லை. பணக்காரன் தன் சாதிக்காரனாக இருந்தாலுமே அவனை ஒரு வர்க்க அடிமையாக மட்டுமே எப்படி நடத்துவானோ அப்படித்தான் இந்த ஏழை முஸ்லீம்கள் மீது கூட வாஹாபிசம் எவ்வித கருணையும் காட்டுவதில்லை. அது சவுதிக்குள் ஏழை பணக்காரன் என்ற வேறு பாடில்லாமல் இந்த தண்டனை முறையைக் கொண்டிருப்பதாக நான் வாசித்தேன். ஆனால் இதே வஹாபிசம் அமெரிக்க , ஐய்ரோப்பிய தேசியத்திடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.


நீதிமன்றங்களோ, அவர்களின் போலீசாரும், அவர்களின் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களும் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தீர்ப்பு எழுதும். இவர்தான் குற்றவாளி என்பதை எளிதில் தீர்மானித்து விடுகிற நீதிமன்றம். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதில்லை. சவுதியின் பணக்கார முஸ்லீம்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்ய, கார் ஓட்ட ஏழை முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் முஸ்லீம் அல்லாதவர்களை தங்களின் வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்திக் கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது. ரிஸானா என்னும் சிறுமியைப் பொறுத்தவரை அவருக்கு மொழி பெயர்ப்பாளாராக இருந்தவர்கள் குறித்து அரிய முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்ட போதும் ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போதும் தலை துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்னரும் அந்தக் குழந்தையின் நினைவில் என்ன ஓடியிருக்கும் எனத் தெரியவில்லை. புரையேறி இறந்து போன நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளித்திருந்தால் ரிஸானா விடுவிக்கப்பட்டிருப்பார் என்னும் நிலையில் அவர்கள் அந்த மன்னிப்பை இன்னொரு குழந்தைக்கு வழங்க முன் வரவில்லை.

2004-ம் ஆண்டில் இயக்குநர் கமலின் ‘பெருமழக்காலம் ’படம் மலையாளத்தில் வந்தது. ரஸியா வின் கணவன் ஒரு விபத்தாக ரகுநாத அய்யர் என்பரைக் கொன்ற கொலைக்குற்றத்தின் பேரில் தலைவெட்டும் தண்டனைகுள்ளாகி வளைகுடா நாட்டில் இருக்க, கொல்லப்பட்ட ரகுநாத அய்யரின் மனைவியிடம் ரஸியா குற்றத்தை மன்னிக் கோருவதுதான் கதை. ரகுவின் மனைவி மன்னித்தால் தன் கணவன் விடுவிக்கப்படுவான் என்பதாகச் செல்லும் கதையில் நுட்பமாக ஒரு உயிரை இழந்த, இன்னொரு உயிரைக் காப்பற்றப் போராடும் இரண்டு பெண்களின் மன உணர்வுகளை மிக நுட்பமாகச் சொல்லியிருப்பார் கமல். இப்படியான வாய்ப்புகள் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம் என்னும் நிலையில் மன்னிக்கும் தேவையிருந்தும் கூட அந்த வாய்ப்பில்லாமல் வாளால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் இந்த சிறுமி.கொடூரமான இந்த வாள் வெட்டைத்தான் இந்துப் பாசிஸ்டுகள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தக் கோருவதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


அளவற்ற கருணையையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் பேசும் குரானோ அல்லாவோ இந்த ரிஸான் பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ள 17 வயதில் கடைசியாக தங்கள் மகளை வழியனுப்பியவர்கள் பிணமாகவேனும் ரிஸானாவைக் காண்பார்களா என்பது தெரியவில்லை. அவர்களின் வறிய வாழ்வும் மாறவில்லை பிள்ளையும் இல்லாமல் போய் விட்டது. எல்லையற்ற அல்லாவின் கருணையில் ரிஸானாவின் இடம் எதுவெனத் தெரியவில்லை. ஏழாண்டுகள் சிறையில் கழிந்த போது அவள் என்ன நினைவுகளோடு வாழ்ந்திருப்பாள். மூதூரை, தன் உறவுகளை, கொஞ்சம் முந்தைய தன் பால்யத்தை, விளையாடிய விளையாட்டை, தன் சகாக்களோடு இட்ட சண்டையை, சிரிப்பின் துளிர்ப்பை, தன் தாய் பட்ட கஷ்டத்தை, தந்தையின் துயரத்தை, ஒரு காதல் கனவை, நடனத்தை, நாடு திரும்புவதை, மூதூரின் வீதிகளின் புதிய மனுஷியாக நடப்பதை, அரபு தேசத்திலிருந்து வாங்கி வந்த மிட்டாய்களை உறவுகளுக்கு கொடுப்பதை, புதுத்துணி எடுத்துக் கொடுப்பதை, குடிசை வீட்டை ஒரு சுவராக மாற்றுவதை, முற்றத்தில் சின்னதாய் ஒரு செம்பருத்தி வளருவதை….. ரிஸானா எதையெல்லாம் கனவு கண்டிருப்பாய்…. ஒரு தனித்த கனவு அல்ல அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின் கனவல்லவா?

அத்தனையும் ஒரு வெட்டில் சிதறிப்போனக் கனவோ…. என் அன்பே

(புகைப்படங்கள் பானுபாரதி விமலின் முகநூல் பக்கத்திலிருந்தும், சில தளங்களிலிருந்தும் எடுத்தாளப்பட்டது)

Tags: , , , , , , , ,

Category: கட்டுரைகள், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

15 Comments

 • KaniMozhi

  இறுதி வரிகள் அந்தப்பெண்ணாகவே உணர வைத்தது… கண்ணீரில் வரிகள் தெரியவில்லை..ஆனால் புரிந்தது…
  மிகுந்த வலியாகிப்போனது மனது…

 • நம்பிக்கையாளன்

  இந்த விடயம் பற்றி ஒரு தெளிவான இஸ்லாமியப் பார்வை.
  http://niduri.com/?p=4430

  • Thulip

   இது தெளிவான இஸ்லாமிய பார்வை அல்ல. மதவெறி பிடித்த காட்டுமிராண்டிகளின் பார்வை. ஸரி ஆ என்பதே காட்டுமிராண்டிகளின் சட்டம்

 • மு.முஹம்மது கனி

  என்ன சொல்வது எதை எழுதுவது என்மனத்துடிப்பை வார்த்தைகளில் வடித்தால் என்னை இஸ்லாத்தின் எதிரி என்பர் அன்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் வாழ்வியலையும் சக மனித நேசத்தையும் கொள்ளாத மனிதன் மனிதனே இல்லை இந்த கொடும் நினைவுகள் இன்னும் எத்தனை நாள் என்னை வாட்டுமோ தெரியவில்லை கவலை படவும் கண்ணீர் சிந்தவும் மட்டுமே என்னால் முடியும் மது போதையை விட மத போதை கொடுமையானதாக படுகிறது ’’’ மகளே ஷரியத் சட்டங்களை கேள்விக்குறியாக்கி சென்றிறுக்கிறாய்….,

 • ‎”””சகோதரி ரிசானாவுக்கு பதில்
  என்ன சொல்லப்போகிறோம் “?
  அப்பாவியை கொன்று குற்றவாளியாக
  நாம் வாழ்கிறோம் இமண்ணில் …..
  ——————————————–
  கொடுமை தண்டனையென
  கடுமையாக விமர்சித்தோம்
  சட்டமொரு இருட்டறையெனவும்
  சிந்தனையில் வாய்ந்தது யாவையும்
  உண்மை உணராது பழித்திட்டோம் !

  தற்போது தவறையெண்ணி வருந்துகிறோம்
  அரசின் முயற்சியையும் …நீதிமன்றத்தின்
  அறநெறியையும் மதிக்கிறோம் ….இருப்பின்
  நபிகள் நாயகம்{ஸல்} பிறந்த மண்ணுக்கு இரக்கமற்று
  போனதுவே நினைக்க..கனக்கிறது இருதயம் இருகிப்
  போனதோர் மனதெண்ணி கவலையிலாழ்கிறது !

  குற்றமிழைத்தது யாரென்று சில ……நிமிட
  நொடிகளை சிந்தனையை எழுப்பிட்டால் சட்டத்திற்கு
  முன் குற்றமானவர்களாய் யாமாகத்தானேயிருக்கிறோம்
  சொகுசு பங்களா ,,,,அலங்கார ஆடைகள் ஆர்பரிக்கும்
  கொழுந்த செல்வ வளங்களோடு வாடி தவிக்கும் குடிசை
  வீட்டிற்கு கனவோடு வாழ்ந்திட எத்தினிக்கிறது !

  கள்ள கடவுட்சீட்டு …பருவத்தை மறைத்தது
  மனுசியாய் நிமிர வித்த பருவ வயது பெரும்
  வறுமையோடு கவலை நினைவில் நித்த நித்த
  கற்பனையோடு எழுப்பியது பயணித்தவித்த பரிதவிப்பு
  பஞ்சம் நினைத்திருக்காது ஆசையோடு செல்லும் இப்பயணம்
  இறுதி மண்ணறைக்கு வழிவகுக்குமென்று …..!

  மூச்சுத் தினறி மரணித்த குழந்தை குற்றவாளியாக்கியது
  விபத்தாய் ,,,பிரிந்த உயிருக்காய் ஆபத்து இவளுக்கேனோ ?
  சட்டத்திற்கு முன்னேயிவள் தண்டனையேற்றிடும்
  குற்றவாளியானதேனோ ?கதறி கண்ணீர் பெருக்கி
  குற்றவாளி யாமல்ல குற்றத்தை சுமத்தப்பட்டால்
  நீதிமன்றம் அநீதியிழைக்கும் குற்றவாளியென கண்நீரோலம்
  கதறி விடுகையில் சற்று தளர்ந்துதான் போனதிந்த வழக்கு !

  செவியில் ஒலித்த நீதியின் குரல் உள்ளமுறைத்து
  கண்களுக்கெல்லாம் பலப்பலவென தாரைத்தாரையாய்
  சிதரியது கண்ணீர் வாய்த்திட ….பிஞ்சு பருவத்தின் மீதுப்பழி நஞ்சு
  விதைத்து வஞ்சிக்க முயற்சிக்கப்போது தலைகுனிந்த இந்த வார்த்தைகள் !
  கேட்ட செவியில் உறக்கத்தை நிறைவாக்கவில்லை
  அவளுக்காய் போராடிய அல்லும் பகலும் கற்பு வாதிகள் !

  பத்து மாதம் தாய் சுமந்த கரு இழந்ததால் எட்டாண்டு
  ஆயுளை சிறையில் கடத்தினால் அப் – பாவியாய் பாவை
  துயரத்தோடு உருகி உருக்குலைந்து நின்றது மெழுகுப்போல !
  இவளின் வழக்கில் சட்டத்தின் நீதியில் எழுதுகோல்
  மரணமென்று பேனா முனை உடைத்தப்போதும் பற்பலநேயத்தின்
  கதவுகள் இவளுக்காய் இரக்கத்தோடு திறந்துதான் இருந்தன !

  தண்டனை நிறைவேறும் மூன்று மாதத்தில் நிறைவடையும்
  வழக்கு அரபு நாட்டின் சட்டதிட்டமாகும் இதையறிந்த
  தாயகம் கடுமையான முனைப்போடு மீட்டிட முயற்சித்தும் ,,,,
  ஈன்ற கொஞ்சுக்காய் கெஞ்சி கேட்கும் வறுமை ரேகைகள்
  அவல கண்ணீராலான ஓலைகள் நீதியின் விழிகளை
  ஈரத்தோடு நனைத்தப்போதும் புரட்டிய இலகிய உள்ளத்தோடு
  பாதிப்பின் இதய கதவை தட்டிட விரைந்தது …….

  பூட்டிய நுழைவாயில் மனசாட்சிப்பூட்டியப்படி
  விரக்தியோடு திரும்பிய நாட்கள் எத்தனையோ ?
  எதிர்ப்பார்ப்போடு காத்துக்கொண்டுதான் இருந்தது
  என்றைக்காவது மனமிறங்குமென்றே வாழ்வின்
  நுழைவாயில் ஆர்வத்தோடு வாசல்கள் காத்திருக்க …
  கர்வத்தின் பிடியிலே முரட்டு மிருகமாய் சொல்.செயலில்
  அங்கீகாரத்தில் பிரகாசித்தது கொலையிட விழையும் விழிகள் !

  கால கெடு நெருங்கிட ,,,உலகமே இவளுக்காய் மறுகிட
  துடித்தது அரசன் அரண்மனை ஆசை பாழைகள் பேசி
  பணித்திட முயற்சித்தும் அடங்காத காளையர்களாய்
  முரட்டு பிடிவாத குணத்தையே விரக்தியோடு ..
  தண்டனை அரங்கேற்றிட வதைத்தது விதைத்தது …..!

  அரசாணையின் முயற்சியோடு மூன்று மாதங்கள்
  எட்டாண்டாக கால நீட்டடித்தது அப்பாவி பெண்ணென்று
  கருணையோடுதான் கண்டது இருப்பின் சட்டத்திற்கு
  இவளொரு குற்றவாளியை நிரூபணம் செய்யப்பட்டதால்
  அப்பழியோடு தலை துண்டானது …கொண்டது கொடூர துயரம்
  மிதந்திட உலகிற்கு வந்தடைந்ததுதான் நிதர்சனம் !

  அரபு மண்ணில் இறுதி மூச்சி விடுவித்தால் பெண்களுக்கும்
  சமுதாயத்திற்கும் நற்பாடத்தை புகிட்டிட்டு விரைந்திட்டால்
  இறுதியாசையாய் கேட்டுக்கொண்டது இரண்டு முறை
  எம்மை படைத்தவனுக்கு தொழ வேண்டும் இருப்பில்
  இருக்கும் சிறுத்தொகையை நன்கொடை வழங்கவும்
  மொழிந்திட பேதகமற்ற உள்ளம் …உண்மையின்
  உரைகள் பதற்றமளித்து இறுதிப்பயணம் மேற்கொண்டால் !

  இக்குற்றத்திற்கு ,,,,சட்டத்தில் குற்றவாளிகள்
  எவரென நினைக்கையில் சிந்தனையில் வந்தனைகளாய்
  வந்து உதிர்கிறது தவறிழைக்க பணித்ததது காரணி
  யாமாகத்தானிருப்போம் …மனசாட்சியை கேட்டால்
  ஆம் என்கின்றது கொலைகாரரென எடுத்துரைக்கிறது !
  இதோ அந்த காரணிகள் உங்களின் விழிகளில் முன்சமர்ப்பிக்கிறேன் !

  வறுமையோடு பிறந்தது குற்றம் ஏழைக்கல்ல …
  மக்கள் திட்டம் வகுத்து உதவாத எமது சமுதாயம்
  அழகு கடன் வசதிகளிருக்க உதவிட மனமுவலவில்லை
  நன் கொடையாய் ஏழை வரி முறையாய் வழங்கினோமோ ?
  அண்டை வீட்டார் பசித்திருக்க நெஞ்சு புரள புசித்திட்டோமே
  தவறில்லையா ?-ஏழை குடிசையென தள்ளி வைத்தோம் ,,,
  ஓலைக்குடிசை பெண்களக்கு எப்போது நாம் மண முடிக்க எத்தணித்தோம் !

  பஞ்சத்தின் பிடியில் வஞ்சகத்தின் கொடியில் வறுமை
  கோடுகள் அலிக்க முயலவில்லை எமது செல்வ கரங்கள்
  அவர்களை வளர்ச்சியடைய மறுத்ததும் குற்றங்கள் செய்திட
  வழி வகுத்ததும் யாமே ..மார்க்கத்தின் முன் குற்றாவாளிகளாக
  இருப்பதும் யாமே மறுமையில் ….என்பதை இந்த ரிசானா உணர்த்தி
  சிந்தனை விழுதுகளை கூர்ந்திட உயிரை துறந்திட்டால் !

  இனி எவ்ரிசானாவும் குற்றவாளியாக இறக்க
  அனுமதியோம் இரக்கத்தோடு ,,,விரப்பத்தொடு
  ஏழை வரிகளை அள்ளி வழங்கிடுவோம் ஏழைக்கு
  வறுமையிலிருந்து மீட்டெடுப்போம் ஒருங்கிணைந்து
  வாழ்வோம் குடிசைக்கு புன்னகை மலர்ந்திட செய்வோம் !

 • charles

  I am leaving your page with a heavy heart…. What else can I do or day?

 • Sakthi

  மதச்சட்டங்களை தூக்கிலே போடுவோம்!

  ஒரு சிறு பெண்ணை, வறுமையினால் வாழ வழி தேடி சின்ன வயதில் தாயைப் பிரிந்து பாலைவனத்திற்கு போனவளை கொலை செய்து, இஸ்லாமிய ஷரியா சட்டம் நீதியை நிலை நாட்டி கொண்டதாம் சொல்கிறார்கள் மதவாதிகள். எல்லாம் வல்ல அருளாளர்களின் சட்டங்கள், கருணை மிகுந்தவர்களின் திருமறைகள் ஒரு குழந்தையை கொலை செய்திருக்கின்றன. சாதாரண சட்டங்களின் படி பதினெட்டு வயது வராதவர்கள் தனியான இளம் வயதினருக்கான சட்ட விதிகளின் படி விசாரிக்கப்படுவார்கள். சிறுவயதினரின் பெயர்கள் கூட பெரும்பாலும் வெளிவிடப்படுவதில்லை. ஆனால் இறைவனாலும், இறைத்தூதுவர்களாலும் தரப்பட்டது என்று சொல்லப்படும் இந்த மதச்சட்டங்களினால் ஒரு சிறு குழந்தையைக் கொல்லலாம். கையை வெட்டலாம்.கல்லால் அடித்து கதையை முடிக்கலாம்.

  பதினேழு வயதான ஒரு சிறுபெண் தனது பராமரிப்பில் இருந்த நாலுமாத குழந்தையை ஏன் கொல்ல வேண்டும்? ரிசானா மனநிலை பாதிக்கப்பட்டவள் அல்ல. இதற்கு முதல் குழந்தையை துன்புறுத்தினாள், காயப்படுத்தினாள் என்ற எந்த விதமான குற்றச்சாட்டுக்களும் எழுந்ததில்லை. மொழி தெரியாத அன்னிய நாட்டில் ஆதரவு இன்றி, அனாதையாக வாழ்ந்தவள் தனக்கு இருக்கும் வேலை ஒன்றே தனக்கும், தன் குடும்பத்திற்கும் வயிற்றைக் கழுவ உதவும் என்ற நடைமுறை வாழ்வின் கொடூரமான யதார்த்தம் உணர்ந்தவள் ஏன் கொலை செய்ய வேண்டும்? தான் வாழும் நாட்டின் கொடுமையான, காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் அவளிற்குத் தெரியாதா? நெருப்பாலே சூடு வைப்பதும், ஊசியாலே உடம்பிலே குத்துவதும் வேலை தரும் எஜமானர்களின் சர்வசாதாரணமான தண்டனைகள் என்பதும் அவளிற்கு தெரிந்திருக்காதா?

  மருத்துவ ஆராய்ச்சிகள் வசதிகள், சுகாதார வசதிகள் மிகுந்த நாடுகளிலேயே குழந்தை மரணங்கள் சாதாரணமாக நடக்கின்றன. தொட்டில் மரணங்கள், மூச்சுத்திணறி மரணித்தல் போன்றவை எல்லா இடங்களிலும் உண்டு. என்ன நடந்தது என்பது குறித்து எந்த விதமான விசாரணையும் இன்றி அந்த நாட்டவர்களான வேலை கொடுத்தவர்களின் சாட்சியத்தை மட்டும் வைத்துக் கொண்டு, காவல்துறையினர் மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு ஒரு வெளிநாட்டு ஏழைப் பெண்ணை கொலை செய்திருக்கிறார்கள். இந்த நாடுகளில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் ஏழைத் தொழிலாளர்களே மதச்சட்டங்களின்படி இதுவரை கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க, அய்ரோப்பிய நாட்டவர்கள் எவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது கிடையாது. ஆம் மதங்கள் நிறம் பார்த்து, இனம் பார்த்து, சாதி பார்த்து தான் தண்டனை வழங்கும்.

  இது குறித்து மகிந்து கவலை தெரிவித்திருக்குதாம். நாட்டு மக்களினது உழைப்பையும், வரிகள் மூலம் சுரண்டும் பணத்தையும் ஊழல் செய்து நாட்டை வறுமையின் விளிம்பிற்கு தள்ளும் இந்த இரத்தம் குடிக்கும் பேய்களினால் தான் மக்கள் இலங்கையில் வாழ வழியின்றி வெளிநாடுகளிற்கு வேலைகளிற்கு செல்கிறார்கள். கொட்டும் பனியில் உடல் முழுதும் விறைத்தபடி அய்ரோபிய நாடுகளில் வேலை செய்கிறார்கள். அரபுநாட்டு பாலைவனங்களில் வெய்யிலில் கருகியபடி அற்ப சம்பளத்திற்கு உடல் வேக வேலை செய்கிறார்கள். கிழட்டு எஜமானர்களின் பாலியல் வன்முறைகளை மெளனமாக சகித்துக் கொண்டு வீட்டு வேலைகள் என்னும் சித்திரவதை கூடங்களில் உயிரைக் கரைக்கிறார்கள்.

  முஸ்லீம் மதம், முஸ்லீம் மக்கள் என்று கூச்சல் போட்டபடி வாக்கு வேட்டையாடி பதவி சுகம் அனுபவிக்கும் முஸ்லீம் தலைவர்கள், மதம் என்ற அபினை மக்கள் மனதில் விதைத்து மயக்கத்தில் வைத்திருக்கும் மதவாதிகள் எவரும் ரிசானா உயிரோடு இருந்த போதும் எதுவும் செய்யவில்லை. இறந்த போதும் கொலைத் தண்டனைக்காக கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்கள் மதச்சட்டங்களை மதிக்கிறார்களாம். அதற்கு எதிராக வாய் திறக்க மாட்டார்களாம். பணிப்பெண்ணாக வேலைக்கு செல்பவர்களை எத்தனையோ அரபிக்கள் சித்திரவதை செய்தார்களே அப்போது உங்களது மதச்சட்டங்கள் எதுவுமே செய்ததில்லையே.

  ஈராக்கிலும், அப்கானிஸ்தாலும், அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் கொல்கிறார்கள், பாலியல் வன்முறை செய்கிறார்கள். குழந்தைகள் குடிக்கும் பால்மாவிற்கு கூட பொருளாதாரதடை விரித்து குழந்தைகளை கொல்கிறார்கள். அவர்களுடன் தான் சவுதி அரச குடும்பம் முதல் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் வரை கூட்டுக்கலவி செய்கிறார்கள். முஸ்லீம் மக்களை கொலை செய்யும் கொலையாளிகளின் கூட்டாளிகளை தண்டிக்க உங்களது மதச்சட்டத்தில் இடமில்லையா? அரபு ஷேக்குகள் எண்ணெய் பணத்தை மேற்கு நாடுகளின் இரவு விடுதிகளின் களியாட்டத்தில் கொட்டும் போது மதச்சட்டங்கள் ஏன் மெளனமாகின்றன. ஏழைகள் காதலித்தால் தான் அவை கல்லெறிந்து கொல்லும். ஏழை மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டால் கூட பாய்ந்து விழுந்து விசாரணை இன்றி அவை கொலை செய்யும்.

  -11/01/2013

 • அன்பு அருள் எழில்,வணக்கம் தம்பி!

  நீங்கள் எழுதிய கட்டுரை இதுவரை தமிழில் எவருமே எழுதிவிட முடியாதவொரு உணர்வின் வெளிப்பாடு.

  உங்களைப்போன்றவர்களது எழுத்து ரிசானாவை எனது மகளாக ஏற்க வைக்கிறது.

  அவள், தனக்குத் தெரிந்த மொழியில்”தனது தந்தை சாகும்வரை தந்தையைக் காப்பாதாகவும்,தான் உழைத்து,தன் குடும்பத்தைக் காப்பதாகவும் விரும்பியிருக்கிறாள்.

  இதனால், அவள் எனது மகள்.

  இப்போது, அந்த என் மகள் இல்லை!

  அவளது கனவில் 1% வீதத்தையாவது நான் செய்வேன்.

  அவளது கனவும்,விருப்பும் நிறைவேற உனது எழுத்தும் உதவியிருக்கிறது அருள் எழிலன்.

  வேறு என்னத்தைக் கூறுவேன் நண்ப?

  நன்றி, என் அன்புத் தமிழா!

  ஸ்ரீரங்கன்
  12.01.2013

 • வேல்முருகன்.கு

  படிக்கும் போது மனம் படபடப்பாகிறது

 • றிசானாவின் தலைவெட்டப்படும் கொடூரக் காணொளி இணைப்பு: றிசானா விவகாரம் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு ஒரு பெரும் அவமானம்?

  றிசானா விவகாரம்
  இராஜதந்திரத் தோல்வியா?

  மரணதண்டனை காணொளி இணைப்பு

  தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் மும்முரமாக காய்களை நகர்த்திக் கொண்டிருந்த போது தான், றிசானா நபீக்கின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்ட முறைமை குறித்து எந்தளவுக்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் இருக்கின்றதோ, அதேயளவுக்கு றிசானா நபீக்கின் மரணதண்டனை குறித்தும் விமர்சனங்கள் உள்ளன. இந்த இரண்டுமே நீதியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதே, உலகெங்கும் வலுவான கருத்தாக எதிரொலிக்கிறது.

  உள்நாட்டில் நீதித்துறைக்கு எதிராக அரசாங்கம் உச்சக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போதே, றிசானாவின் மரணதண்டனை விவகாரத்தில் அரசாங்கம் சறுக்கி விழுந்துள்ளது. ஏற்கனவே பலமுனை அழுத்தங்களில் சிக்கியிருந்த அரசாங்கத்துக்கு றிசானாவின் மரணதண்டனை புதியதொரு அழுத்த முனையைத் திறந்து விட்டுள்ளது. அதாவது, றிசானாவைக் காப்பாற்ற அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டைச் சுமந்து கொள்ள வேண்டிய நிலைக்கு, அரசாங்கம் தள்ளி விடப்பட்டுள்ளது.

  முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் அனைத்துமே, அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதும், ஒரு வறிய அப்பாவி முஸ்லிம் பெண்ணை அவர்களால் காப்பாற்ற முடியாது போனது. மரணதண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி, ஒன்றுக்கு இரண்டு முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சவூதி அரேபிய மன்னருக்கு கடிதம் எழுதிய போதிலும், முஸ்லிம் அமைச்சர்களும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் சவூதிக்கு சென்று பேச்சுக்களை நடத்திய போதிலும், மரணதண்டனையில் இருந்து றிசானாவைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு பக்கத்தில் அரசாங்கம் இவரைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்படும் அதேவேளை, இன்னொரு பக்கத்தில் இதை இலங்கை அரசின் மிகப்பெரிய இராஜதந்திரத் தோல்வி என்றும் விமர்சிக்கப்படுகிறது.

  தலைமை நீதியரசர் மீதான குற்றப் பிரேரணை விவகாரத்தில், தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அரசாங்கம், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கணிசமான வெறுப்புணர்வை சம்பாதித்துக் கொண்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் றிசானா விடயத்தில் ஏற்பட்ட சறுக்கல், அரசாங்கத்தின் மீது இன்னும் அதிகமான வெறுப்பையே ஏற்படுத்தியுள்ளது. றிசானா விடயத்தில், ஏற்பட்ட தோல்விக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே முழுப் பொறுப்பு என்று ஆசிய மனிதஉரிமைகள் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. றிசானாவின் வழக்கை ஆசிய மனிதஉரிமைகள் ஆணையம் மூலம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால், மேல்முறையீடு செய்வதற்குத் தேவையான நிதியை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவில்லை என்று ஆசிய மனிதஉரிமைகள் ஆணையத்தின் பணிப்பாளர் பசில் பெர்னான்டோ கூறியுள்ளார்.

  றிசானாவுக்கு சவூதி அரேபியா குறுகிய காலத்தில் மரணதண்டனையை நிறைவேற்றவில்லை.

  கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்தார்.

  அதாவது, றிசானாவைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கத்துக்கு ஏழு ஆண்டுகளுக்கும் அதிகமான காலஅவகாசம் இருந்தது. ஆனாலும் அந்தக் காலஅவகாசத்தை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. றிசானாவை மீட்பதற்கு என்ற பெயரில், அரசாங்கச் செலவில் அமைச்சர்கள் சவூதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது தான் மிச்சம். அவர்கள் இந்த விவகாரத்தை அணுக வேண்டிய முறையில் அணுகியிருக்கவில்லை என்கிறது ஆசிய மனிதஉரிமைகள் ஆணையம்.

  மரணதண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி சவூதி அரேபிய மன்னருக்கு இரண்டு முறை கடிதம் எழுதிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்த விடயத்தை உரியவாறு அணுகத் தவறிவிட்டார் என்றே கருதப்படுகிறது. சவூதி அரேபியாவின் சட்டங்களின் படி, கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை மன்னரால் குறைக்க முடியாது. அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய சட்டங்களின் படியும், சவூதி அரேபியாவின் சட்டங்களின் படியும், மரணதண்டனைக்கு மன்னிப்பு வழங்கும் உரிமை, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கே இருந்தது. அவர்கள் மன்னிப்பு அளித்திருந்தால், றிசானாவைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் அரசாங்கம், றிசானாவுக்கு மன்னிப்பு வழங்கும் படி, குழந்தையின் பெற்றோரை அணுகவேயில்லை என்கிறது ஆசிய மனிதஉரிமைகள் ஆணையம். றிசானாவைக் காப்பாற்றப் போவதாக, பலமுறை சவூதிக்குப் போன முஸ்லிம் அமைச்சர்களுக்கு இந்த இஸ்லாமிய சட்ட வழிமுறைகள் தெரியாமல் போனது எப்படி? அவர்கள் ஏன் குழந்தையின் குடும்பத்தினரை அணுகத் தவறினர்?

  இராஜதந்திர வழிமுறையின் ஊடாக றிசானாவைக் காப்பாற்றி விடலாம் என்று அரசாங்கம் நம்பியதன் விளைவே இந்த நிலை. இந்த வழியில் பார்க்கப் போனால், இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத்துக்கு ஏற்பட்ட மற்றொரு தோல்வியாக இதைக் கருதலாம். அதுவும், நீதித்துறைக்கு எதிரான ஒரு போரை அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த போதே, நீதி சார்ந்த ஒரு இராஜதந்திரச் சறுக்கலை அரசாங்கம் சந்தித்துள்ளது.

  றிசானா விவகாரம் அரசாங்கத்தை மட்டுமன்றி, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குமே ஒரு பெரும் அவமானம். தலைமை நீதியரசருக்கு எதிரான நடவடிக்கைகளின் மூலமும், றிசானா விவகாரத்திலும் அரசாங்கத் தரப்புக்கு ஏற்பட்டுள்ள கறைகளை இலகுவாக கழுவிக் கொள்ள முடியாது. இந்தக் கறைகளின் தாக்கம் தேர்தல்களிலும் கட்டாயம் எதிராலிக்கவே செய்யும்.
  சவூதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான றிசானாவின் தலைவெட்டப்படும் கொடூரக் காணொலி – உலகம் அதிர்ச்சி

  தொல்காப்பியன்

 • suresh

  andava amathi kodu . anbu valra annai yudu.

 • Amudha

  So sad, no words to say!

 • gnanavettiyan

  இன்று தான் இந்த செய்தியைப் படித்தேன்…..கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்…ரிஷானா..உன் ஒற்றை கண்ணீர் துளி, மத கோட்பாட்டின் மீதும், மனிதத்தின் மீதும், நாட்டின் சட்டத்தின் மீதும் துப்பிய உமிழ்நீர்….. உன் மரணம் ஆயிரம் கேள்விகளையும்…..கோடி கண்ணீர் துளிகளையும் மனிதத்தின், மதத்தின் முன் வைக்கிறது…….விடை தேடுகிறது மனது…..
  இந்த உலகம்,எதை நோக்கி செல்கிறது?….ஈழ தமிழர்களுக்கு நடந்த கொடுமையும் உன்னை போன்றவர்களுக்கு நடக்கும் கொடுமையும் மனிதத்தை தொலைத்த மானுடத்தை காட்டுகிறது….தேவை ஒவ்வொரு மனதிலும் மனிதம்..மனிதன் தொலைத்த மனிதம் தேடுவோம்….

  இதை பகிர்ந்த திரு.அருள் எழிலன் அவர்களுக்கு நன்றி…உங்கள் வரிகள் அருமை…

Leave a Reply