நிராகரிப்பின் நதியில் – கடங்கநேரியானின் கவிதை குறித்து…..

Oleh: Arulezhilan
January 7, 2013

பொதுவாக கவிதைக் கூட்டங்களுக்கோ, கவிதை விழாக்களுக்கோ செல்லும் வழமை எனக்கில்லை. மதுரையில் கடந்த ஞாயிறன்று (06-01-2013) நடந்த கடங்கநேரியானின் நிராகரிப்பின் நதியில் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எல்லோருமே ஊடகம் மற்றும் திரைத்துறை, முகநூல் நண்பர்கள் தான் .

சென்னையிலிருந்து என்னையும், கார்டூனிஸ்ட் பலாவையும், சரவணன் குமரேசனையும், கவிதா சொர்ணவள்ளியையும் , இயக்குநர் தாமிராவையும் கவிஞர்கள் யாழி, தியாகு பன்னீர் , நாணல்காடன் , வைகறை , தாய் சுரேஷ் , மழைக்காதலன் , சதீஷ்குமார் , ஃபிராங்க்ளின் ,பரிமேலழகன் பரி , கார்திகேயன் , ஸ்ரீதர் பாரதி , கவிதாயினி கலைத்தாமரை போன்ற கவிஞர்களையும் மதுரைக்கு வெளியீட்டு விழாவுக்காக அழைத்திருந்தார்கள். கடங்கநேரியானும், எர்னஸ்டோ சேகுவேராவும், முத்துக்கிருஷ்ணன். சரவணன், பரமசிவம் சைக்கிள் சிவா உள்ளிட்ட பலரும் அந்த விழாவைச் சிறப்பித்தார்கள்.

நான் பொதுவாக கவிதைகள் பற்றி பேசாமல் எழுதுவது தொடர்பாகப் பேசினேன். ஏனெனில் எந்த ஒன்றையும் எழுதுவது என்பதே ஒரு வாய்ப்பு. அது சமூக நீதியாகவும் இருக்கலாம். ஆனால் இந்த சமூக நீதி நவீன தொழிநுட்பத்தால் சாத்தியமானது. ஒரு காலத்தில் இவர்கள்தான் கவிஞர்கள், இவர்கள்தான் எழுத்தாளர்கள்,இவர்கள்தான் பத்திரிகையாளர்கள், என்று சில ஜாம்பவான்களைச் சுட்டி பிறரை ஏற்றுக் கொள்ளாத போக்கு இருந்து வந்தது. பெரிய ஊடகங்களில் ஒரு கவிதை வரவோ, கட்டுரை வரவோ தவம் கிடந்த நிலையில்.

2000- காலத்தில் இணையம் நமக்குச் சாத்தியமானது. ஆனால் அது பயன்பாட்டில் மேட்டுக்குடிகளில் ஊடகமாய் இருந்தது. அமெரிக்காவின் நியுஜெர்சியில் இருந்து கொண்டு அல்லது மேலை நாடுகளில் இருந்து கொண்டு எழுதுவார்கள். அது வரை அச்சில் விவாதிக்கப்பட்ட இரு வேறு கருத்து நிலை மாறி, முழுக்க முழுக்க ஒரு பக்க கருத்துக்கள் மட்டுமே வந்து விழுந்தன, அப்படி எழுதியவர்களுக்குப் பெயர் இந்திய மேட்டுக்குடி NRI -கள். கடும் தேசியவாதப் போக்கும் அதற்கேயுரிய படு பிற்போக்குத் தனங்களையும் கொண்ட அந்த எழுத்தை எதிர்கொள்ள தமிழகத்தில் இணைய பாவனை பரவலாகியிருக்கவில்லை.
பின்னர்தான் படிப்படியாக அறிமுகமாகி பெரும்பாலான இன்றைய தலைமுறையினருக்கு பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது இணையம். பெரிய ஊடகங்கள் பேச மறுத்த விஷயங்களை, அல்லது கண்கொள்ளாமல் விட்ட விஷயங்களை இணையங்களில் பேசுவதன் மூலம் அது அதிக அழுத்தம் கொண்டதாக மாறி வருகிறது. ஈழப் போரின் போது உண்மைகளை உரைக்கும் ஊடகமாக இருந்தது இணையங்கள்தான் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாத கடந்த திமுக அரசு எத்தகைய ஒடுக்குமுறைகளைக் கையாண்டது என்பதெல்லாம் தனிக்கதை. இப்போது இந்திய அரசு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கும் அளவுக்கு அது ஆட்சியாளர்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் சவாலாக விளங்குகிறது. இதெல்லாம் ஒரு பக்கமிருக்க,

இதில் மிகச் சிறந்த விஷயமாக நான் பார்ப்பது இணையம் எல்லோருக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. எல்லோரும் அவரவர் கருத்தை, கவிதைகளை, கட்டுரைகளை எழுதுகிறார்கள்.இதில் சிறப்பாக நாம் சொல்ல வேண்டிய விஷயம். ஒரு பிரச்சனைக்கு பொதுப்பார்வை என்ற ஒன்றிற்கு அப்பால் உள்ளூர் பார்வை என்ற ஒன்று உண்டு. அந்த உள்ளூர் பார்வை இம்மாதிரி எழுதுகிறவர்களிடம் அதிகம். ஏனெனில் அது சிறந்த விஷயமாகவும் இருக்கிறது.
மதுரையிலும் நிறைய பேர் எழுதுகிறார்கள். ஏராளமான ஆண்களும், பெண்களும் கவிதை எழுதுகிறார்கள். கவிதை நூல்களை பெரிய பதிப்பகங்கள் இப்போது வெளியிடுவதில்லை ஏனென்றால் கடந்த திமுக ஆட்சியின் போதே கவிதை நூல்களை அரசு வாங்குவதில்லை. இப்போது எந்த நூலும் வங்காமல் ஜெயலலிதா சாதனை செய்திருக்கும் நிலையில் சென்னைக்கு வெளியில் எத்தனை எத்தனை பேர் இன்னமும் கவிதை நூல்கள் வெளியிடுகிறார்கள். கவிதைகளில் வாழ்கிறார்கள்.

கடங்கநேரியான்

அந்தளவில் கடங்கநேரியானின் கவிதைகள் அவரை உற்சாகத்திலாழ்த்துகிறது.உயிர்ப்போடு அலைய வைக்கிறது.அவரை ஒரு மனிதனாக இந்த பூமியில் வாழும்படி சபித்திருக்கிறது கவிதை. முழு நேரமாய் கவிதை எழுதாமல் தன் சமூக, குடும்பத் தேவைகளுக்காக ஒரு பணியைச் செய்து கொண்டு தனக்குப் ப்ரியமான கவிதைகளை எழுதுகிறார் கடங்கநேரியான்.பசி,காமம்,தனிமையுணர்வு,குற்றவுணர்ச்சி, தேம்பல், என் பலவறான மன உணர்வுகளை அவர் பிரதிபலிக்கிறார். உலகில் காதல் கவிஞன் என்று ஒருவன் வாழ முடியாது. காதலோடும், காமம் செப்பியும் வாழலாம். அதுவே வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் வெவ்வேறு வேட்கைகளை, ஓர்மைகளை தன் எளிமையான கவிதைகளால் கடங்கநேரியான் கடந்து செல்ல முனைகிறார்.

சில கவிதைகள்,

1,

மரண தண்டனை
உன் பெயராலும்
என் பெயராலும்
நம் பெயராலும்
நீதியின் பெயராலும்
சகல பாதுகாப்புடனும்
சட்டத்தின் துணையுடனும்
கொலை செய்வது
என்கிறார் கடங்கநேரியான்………

2,

காதல்
நம்மிருவருக்கிமிடையே
நிலவிய மவுனம்
நீதந்து
நான் பருகாத தேநீரில்
ஆடையாய் உறைந்திருந்தது.

3,

காமம்

நிலவைப் போல
வளர்ந்து தேயும்
தேய்ந்து வளரும்

4,
தொலைத்தல்

தோன்றிய உடனே
கவிதையைக்
கொட்டித் தீர்த்து விட வேண்டும்
அல்லது
அதிக பட்ச வார்த்தை
அலங்காரம் சேர்ப்பதில்
தொலைந்து விடுகிறது கவிதை!

5,

கனவென்ற
சிலந்தி வலையுடன்
யதார்த்தெமெனும்
மீனைப்
பிடிக்கச் செல்லும்
முட்டாள் நான்!

6,

நன்றிக்கடன்
கல்லை உருட்டி விளையாடி
அதட்டி அடக்கி
மணலாக மலரச் செய்த
ஆற்றை
கோடையில் தன்னுள்
பொதிந்து வைத்து
பாதுகாக்கிறது
ஆற்று மணல்,

7,

பேயையும்
முனியையும்
கொன்ற
நகரத்து வீதிகள்
நடு நிசி நாய்களை
வளர்த்து விட்டன
கட்டுக்கடங்காத
எண்ணிக்கையில்!

8,

வெய்யில் குடித்து
வளரும் பனையைப் போல
நிராகரிப்பைக்
குடித்து வளர்கிறேன்

இப்படிச் செல்கிறது கடங்கநேரியானின் கவிதைகள், அலங்காரமற்ற தன் சுய சொற்களால் அவர் தன் முதல் கவிதைகளை இப்படி படைத்திருப்பதும் அதை அவர் பகட்டிமல்லாமல் கூச்சத்தோடு வெளிப்படுத்திக் கொள்வதும் அவரை தமிழில் சிறந்த கவிஞராய் கொண்டு போய் சேர்க்கும். இக்கவிதைகளில் ஆயிரம் திருத்தங்களும், இரண்டாயிரம் அறிவுரைகளும் சொல்லலாம். ஆனால் அது எதுவும் கடங்கநேரியானுக்கு தேவையும் இல்லை, பயனும் தராது. தொடர்ச்சியாக எழுதுவதினூடாக அவர் தன்னை மிகச் சிறந்த ஒளியாக உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்கான எல்லா எளிமையும் அவருக்கிருக்கிறது.
அதனால்தான் பெரிய என்பதை விட்டு விலகி எளிமை என்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார் எழுதுகிற கவிதையில் மட்டுமல்ல நூல் வெளியிடும் விழா வரை அதுதான் அவர் மீதான நேசத்தை அதிகரித்திருக்கிறது.நிராகரிப்பின் நதியில் என்ற கவிதை நூல் மூலம் தன்னை ஒரு சமூகக் கவிஞனாக உயர்த்திருக்கும் கடங்க நேரியானை தொடர்ச்சியான தேடலும், எழுத்தும் அவரை மிகச்சிறந்த இடத்தில் கொண்டு போய் சேர்க்கும்.

எழுதுங்கள் கடங்கநேரியான் உங்களுக்கான உலகத்தை அதன் கசப்பை, தனிமையை, காதலை, கருப்பை.

நிராகரிப்பின் நதியில்

வெளியீடு –
தகிதா பதிப்பகம்
4/833, தீபம் பூங்கா,
கே.வடமதுரை
கோவை- 641017
dhakitha@gmail.com

நூல் கிடைக்குமிடம்: Discovery Book Palace, Chennai.

செம்மொழி புத்தக நிலையம் , புறவழிச் சாலை ,மதுரை

Tags: , ,

Category: கட்டுரைகள், முதன்மைப் பதிவுகள், விமர்சனம் | RSS 2.0 | Give a Comment | trackback

One Comments

  • KaniMozhi

    கவிஞரைப்பற்றி மட்டுமில்லாது கவிதைத் தொழிலை பற்றியே எளிமையாக சொல்வது போலவே சில அழுத்தங்களை பதிந்திருக்கிறீர்கள்… கவிதைகள் பற்றிய விமர்சனமும் நன்றாயிருக்கிறது…

Leave a Reply