வெள்ளை போர்ட் பேருந்துகளும்- நீதிபதி இக்பாலும்.

Oleh: Arulezhilan
December 14, 2012

மத்திய தர வர்க்கத்து மாணவர்கள் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் காலமிது. அதிகாலை ஹார்லிக்ஸ் குடித்து, உணவு தயாரித்து, பள்ளி யூனிபார்ம் மாற்றிவிட்டு, பள்ளியின் வாசலிலேயே கொண்டு போய் இறக்கி விட்டு மீண்டும் மாலையில் அழைத்து வந்து விடும் அளவுக்கு குடும்பப் பாதுகாப்பு பின்னணியில் வளரும் மாணவர்கள், அரசு பாலிடெக்னிக்குகளில் படிப்பதில்லை. பல லட்ச ரூபாய் செலவு செய்து பொறியியல் கல்லூரிகளில் படிக்கிறார்கள். அம்மா அப்பாவின் அரவணைப்பிலேயே வளரும் இந்த மாணவர்கள்தான் பள்ளி வளாகத்துள் ஜீப் ஓட்டி மாணவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இவர்களின் வளர்ப்பு இருக்கும் என்பதெல்லாம் தனிக்கதை.

ஆனால் வெள்ளை போர்ட் பேருந்துகளை நம்பியே பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று வரும் மாணவர்களை அரசு எப்படிக் கையாள்கிறது. கடந்த திங்கள்கிழமை பெருங்குடியில் நேரிட்ட விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது. அரசு சில நடவடிக்கைகள் எடுத்ததாக தாக்கல் செய்த பதில் மனுவில் திருப்தியடைந்த நீதிபதி இக்பால் ஜெயலலித அரசை வெகுவாக பாராட்டினார்.

ஆனால் அந்த நடவடிக்கை என்ன தெரியுமா?

பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவர்களுக்கு 100 ரூபாய் பைன். நேற்று ஒரே நாளில் 5,209 வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் தலா ரூ. 100 அபராதம் தொகையை போலீஸார் வசூல் செய்தனர். அந்த வகையில் பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவுக்கு ரூ.5,20,900 கிடைத்துள்ளது. எப்படி?

இதுதான் ஜெயலலிதா அரசு நீதிபதி இக்பாலை குளிர்வித்த கதை. கோடம்பாக்கம் லிபர்ட்டியில் இருந்து நுங்கம் பக்கம் கல்லூரிச் சாலை செல்ல ஏசிப் பேருந்தில் 30 ரூபாயும், சொகுசுப் பேருந்தில் 11 ரூபாயும் வெள்ளை போர்ட் பேருந்து ஐந்து ரூபாய் , லிபர்ட்டியில் ஏறி வள்ளுவர் கோட்டம், ஸ்டெர்லிங் ரோட், என இரண்டு நிறுத்தங்களைக் கடந்து கல்லூரிச்சாலையில் இறங்க இந்த விலை. அப்படியென்றால் நீங்கள் பேருந்து கட்டணங்களின் விலை எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.குறைந்த வருவாய் உள்ள ஏழைகளால் டீலக்ஸ் பேருந்தில் கூட ஏற முடியாத நிலையில், பெருங்குடியில் பேருந்து மோதி இறந்தவர்கள் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள். பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.

இன்னொரு பக்கம் அரசோ வெள்ளை போர்ட் பேருந்துகளைக் குறைந்த்து டீலக்ஸ் பேருந்துகளையும், ஏசி பேருந்துகளையும் அதிகளவில் இயக்குகிறது. இதனால் சாதாரணப் பேருந்துகளில் காலை நேரத்தில் நெருக்கியடித்து மாணவர்கள் பயணிக்கிறார்கள். மற்றபடி புட் போர்ட் அடிப்பது ஒரு பதின்ம பருவத்தின் கிளர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் அதை மட்டுமே காரணமாகச் சொல்லி விட முடியாது. முதலில் அதிக பேருந்துகளை இயக்கு பயணிகளுக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்காமல் தொங்கு வரும் மாணவர்களை காட்டு மிராண்டித் தனமாக அடித்து உதைத்து அவர்களிடமிருந்து பணத்தை அபராதம் என்ற பெயரில் திருடிக் கொள்வது மிக மோசமான மனித உரிமை மீறலாகும்.

பெருங்குடி மாணவர் மரணங்களைப் பொறுத்தவரையில் அது ஊடகங்களையோ, மத்யமர் மன நிலையையோ பெரிதாக அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை. இதுவே மேல் மத்திய தர வர்க்கத்து மாணவர்கள் என்றால் ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளித்திருக்கும், மேலும் இது பற்றி விவாதித்த ஊடகங்கள் எடுத்த எடுப்பில் நலிந்த மாணவர்களை கேரக்டர் அசாசினேஷன் பண்ணத் துவங்கி விட்டன. புட் அடிப்பது, டிக்கெட் எடுக்காமல் இருப்பது, பெண்களை சீண்டுவது என பிரச்சனையைப் பேசாமால் வழக்கம் போல பழியை ஏழை மாணவர்கள் மீதே போட்டன. இந்த வழக்கை தனாக முன் வந்து எடுத்த சென்னை நீதிபதி இக்பால் இந்த வழக்கை ஏன் எடுத்தார் என்றே தெரியவில்லை. அரசிடம் விளக்கம் கேட்டாராம் அரசு கொடுத்த விளக்கம் திருப்தியாக இருந்ததால் அரசை பாராட்டி விட்டு அமைதியாகி விட்டாரம். ஆக மொத்தம் இக்பால் திருப்தியடையும் படி நடந்த சம்பம் 5,209 மாணவர்கள் மீது வழக்குப் பதிந்து, ரூ.5,20,900 பணம் அபராதம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதுதானா?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் இக்பால் சில நொய்யல் ஆற்று நீர், சமச்சீர் கல்வி உள்ளிட்ட விவாகரங்களில் சிறந்த அணுகுமுறைகளைக் கடைபிடித்தவர். அவர் இந்த பேருந்து விபத்து வழக்கையும் தனாக முன் வந்து எடுத்துக் கொண்டார். நீதிபதி இக்பால் உண்மையிலேயே இது போன்ற பேருந்து விபத்துகள் இனியும் நிகழாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் காலை நேரத்தில் அரசுப் பேருந்துகளில் எவர் துணையுமின்றி இக்பால் பயணம் செய்து பார்க்க வேண்டும். பிரமாண்டமான அதிகாரத்தால் நிறுவப்பட்ட நிதிமன்ற இருக்கையில் கிடைக்கும் அனுபவத்தை விட அந்த பேருந்து பயணம் ஆயிரம் விஷயங்களை அவருக்குக் கற்றுக் கொடுக்கலாம். அந்த அனுபவமே இது தொடர்பான வழக்கில் தீர்ப்புச் சொல்ல சிறந்தவழியாக இருக்கும்.

Tags: , ,

Category: அனுபவம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

One Comments

  • அவரை நாம பேரூந்தில் ஏத்தி டெல்லிக்கு (உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனதா கேள்வி) அனுப்பலாம். அப்பதான் நம்ம கஷ்டம் தெரியும்.

Leave a Reply