டெங்கு – கொள்ளை நோய் அபாயம், காவிரி வறட்சி – செயலிழந்து கிடக்கும் தமிழக அரசு.

Oleh: Arulezhilan
November 26, 2012


தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பதாகச் செய்திகள் கசிகின்றன. இன்று மட்டும் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் பழக்கப்பட்டு விடும் நமது பொது மன நிலை டெங்கு நோயை ஒரு அங்கத நகைச்சுவை போல எதிர்கொண்டு கடந்து செல்கிறது. ஆனால் நிலமை படு மோசமாக இருப்பதாகத் தெரிகிறது.

அரசு மருத்துவமனைகள் பொதுக் கழிப்பிடங்கள் போல செயலற்றுக் கிடக்கும் நிலையும் டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சையின்றி அரசு மருத்துவமனைகள் அலட்சியம் செய்யும் நிலையிலிலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு மரணம் என்ற பொது விதி எப்போதோ முதலாளித்துவத்தால் எழுதப்பட்டு விட்டது. என்ற நிலையில் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குறிப்பாக குழந்தைகள் டெங்கு அறிகுறிகளோடு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இதை அரசு மர்மக் காய்ச்சல் என்கிறது.வித விதமான நாடகங்களை அரங்கேற்றி வரும் ஜெயலலிதா அரசின் சுகாதாரத்துறை சவக்குழியில் செயிலிழந்து கிடப்பது போலத் மௌனமாக பாசாங்கு செய்கிறது. டெங்கு மரணங்களை மூடி மறைக்கிறது. இது தொடர்பாக நாம் தமிழக அரசை வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரலாம் ஆனால் அரசுகளின் வரலாற்றில் அப்படியெல்லாம் விட்டு விடுவார்களா என்ன?

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகள் செயலிழந்து கிடக்கும் நிலையும், சுகாதாரத்துறை செயலிழந்துள்ள நிலையிலும், டெங்கு பேரபாத்தாக ஒரு கொள்ளை நோயைப் போல பரவும் ஆபத்து எழுந்துள்ளது.

காவிரி மீண்டும் எலிக்கறியை நோக்கி விவசாயிகள்?


காவிரியில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையில் கடன் வாங்கி விதைத்த பயிர் வாடியதால் நாகை அருகே உள்ள சூரத்தான்குடி கிராம விவசாயி ராஜாங்கல் பயிருக்குத் தெளிக்க வாங்கி வைத்திருந்த மருந்தை உண்டு தற்கொலை செய்து கொண்டார்.காவிரி பாசனப்பகுதியில் பல ஏக்கர் நிலங்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் மிக மிக முக்கியமாக உச்சநீதிமன்றம் தமிழக, கர்நாடக விவசாயிகள் உட்கார்ந்து பேச வேண்டுமென்ற கேடு கெட்ட அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது இப்படி // இருதரப்பும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும். இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, அவர்களுக்கு உள்ள பிரச்னைகளைப் பற்றி விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் உள்ளார்ந்த ரீதியில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். அதற்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் முதல்வர்கள் நேரடியாக சந்தித்து, ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும்.// இந்த அறிவுரையைச் சொல்ல நமது வரிப்பணத்தில் இவர்களுக்கு ஊதியம்.

கடந்த முப்பதாண்டுகளாக உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் ஆணையமும் போடாத உத்தரவில்லை, சொல்லாத தீர்ப்பில்லை, வழங்காத அறிவுரை இல்லை. ஆனால் இவை எதையும் கர்நாடகம் மதிக்கவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை. மத்திய அரசு, அல்லது அதன் ஆளும் வர்க்க நிறுவனங்கள் (நீதிமன்றம், காவிரி ஆணையம்) போன்றவைச் சொல்லி அதை ஒரு மாநில அரசு கேட்காத நிலையில் தான் பிறப்பிக்கும் உத்தரவை நிறைவேற்றும் உரிமை மத்திய அரசுக்குக் கிடையாதா?

இந்த உத்தரவுகளும், தமிழக அரசின் அறம் சார்ந்த போராட்ட பாவனைகளும் வேடிக்கையாக இருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் இது போன்று நடத்தப்படும் அபத்த நாடகங்கள் காவிரி பாசன விவசாயிகளைக் காப்பாற்றுமா? அல்லது மீண்டும் 2004 -ம் ஆண்டைப் போல எலிக்கறிக்கும், கஞ்சித் தொட்டிக்கும் அலைய வைக்குமா?

Tags: , , , ,

Category: அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply