கிழக்கும், மேற்கும், தெற்கும்,வடக்கும்- நாயக்கன் கொட்டாய்தான்.

Oleh: Arulezhilan
November 13, 2012

strong>/கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பெந்தேகோஸ்த் சபையில் நடந்த பிரார்த்தனையில் பங்கேற்கச் செல்கிறார் ஐ.ஏ. எஸ் அதிகாரியான உமாசங்கர். பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடிய இந்து அமைப்பினர் அவர் கிறிஸ்தவ மத வழிபாட்டில் கலந்து கொள்ளக் கூடாதென மறியலில் ஈடுபடுகிறார்கள். அவரைக் கைது செய்யுமாறு போலீசில் புகார் கொடுக்கிறார்கள். இயல்பாகவே துணிச்சல் மிக்கவரான உமசாங்கர் இறுதி வரை அஞ்சாமல் தன் ஆன்மீக உரிமையை அங்கே நிலை நாட்டினார்.//

//வெள்ளாளக் கவுண்டர் மாநாட்டில் கலப்பு மணத்தை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.//


//வன்னிய இளைஞர்களையோ, இளம் பெண்களையோ, வேறு சாதியினர் கலப்பு மணம் செய்தால் கொலை செய்வோம் // என சித்திரா பௌர்ணமி விழாவில் வெளிப்படையாகவே எச்சரிக்கிறார் காடு வெட்டி குரு.

// தலித் அல்லாதோர் இயக்கம் என்றொரு இயக்கத்தை சாதி இந்துக்கள் தென் தமிழகத்தில் துவங்குகிறார்கள்//

// தலித்துக்கள் சமைத்த உணவை பால்வாடியில் உண்ண மறுத்து நாயக்கர் சமூக குழந்தைகளை புறக்கணிக்க வைக்கிறார்கள் நாயக்கர்கள்//

//தலித்துக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுத்து அவர்கள் வழிபடுவதை தாங்க முடியாத ரெட்டிகள் காட்டில் குடியேறுகிறார்கள்//

//தலித் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தங்கள் குழந்தைகள் படிக்காது என பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள் நாடார் பெற்றோர்கள்//

// கோவில்களில் பஞ்சகச்சம் கட்டி குடுமி வைத்துதான் பூஜை செய்ய வேண்டும் என்கிறது தமிழக இந்து அற நிலயத்துறை//

// இப்போது கோவையில் இந்து முஸ்லீம் கலவர அபாயம் சூழ்ந்திருக்கிறது என்கிறார்கள்//

இன்னும் எவளவோ சொல்ல முடியும். ஒவ்வொரு இந்து சாதிகளுக்கும் இப்படி வீர வரலாறு இருக்கத்தான் செய்கிறது. தருமபுரி தலித் குடிசைகள் எரிப்பு காதல் கலப்பு மணத்திலிருந்து துவங்குகிறது. நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜனின் மகள் திவ்யாவும், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோன் மகன் இளவரசனும் காதல் திருமணம் புரிந்துள்ளார்கள். தங்களுக்கு பாதுகாப்புக் கோரி சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய் குமாரையும் , தருமபுரி எஸ்.பி அஸ்ரா கர்க்கையும் சந்தித்து முறையிடுகிறார்கள். அதை காவல்துறை கண்டு கொள்ளவில்லை என்பது தனிக் கதை.
நவம்பர் 5ம் தேதி பா.ம.க மதியழகன் முன்னிலையில் நடந்த கட்டைப்பஞ்சாயத்தில் பெண்ணை யும் பையனையும் ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளனர். தலித் தரப்பில் ஒரு தரப்பினர் காதல் ஜோடிகளை ஒப்படைக்க முடியாது என்றும், இன்னொரு தரப்பினர் பிரச்சனை வேண்டாம் ஒப்படைக்கலாம் என்றும் குழப்பமாக பேசியுள்ளனர்.

அச்சமடைந்த நிலையில் அக்டோபர் 14-ம் தேதி காதல் ஜோடிகள் ஊரை விட்டு தப்பியோடி விட வன்னியர்கள் ஒரு காலக்கெடுவை தலித் மக்களுக்கு விதிக்கின்றனர். ஆனால் திவயா திரும்பி வராததால் அவரது உறவினர்கள் கொடுத்த நெருக்கடியில் திவ்யாவின் தகப்பனரா நாகராஜன் தற்கொலை செய்து கொள்கிறார். அதையே வாய்ப்பாகக் கருதிய வன்னியர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர் தலைமை தாங்க அண்ணா நகர்,நத்தம் காலனி, கொண்டாம்பட்டி என மூன்று தலித் கிராமங்களையும் பல மணி நேரம் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். வன்னியர்கள் தாக்க வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் தலித் மக்கள் வெளியேறியதால் உயிர் சேதம் எதுவுமில்லை. ஆனால் ஒட்டு மொத்த வாழ்வாதாரங்களையும் தலித் மக்கள் இழந்து விட்டார்கள். மாலை நான்கு மணிக்குத் துவங்கிய இந்த நரவேட்டை நள்ளிரவைக் கடந்தும் நீடித்திருக்கிறது. ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் போலீசார் அந்தப் பக்கம் வந்து எட்டிக் கூடப்பார்க்கவில்லை.

இந்தத் தாக்குதலில் 100 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை கூறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக களமிரக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தாக்குதல் நடந்த இடங்களை ஆய்வு செய்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் புனியா கூறியிருக்கும் தகவல்கள் மிக முக்கியமானவை ‘’ இந்தத் தாக்குதல்கள் காதல் திருமணத்தால் நடந்ததல்ல என்பதும் ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்டதென்றும், இத்தாக்குதலில் 7-கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் தலித்துக்களின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்றும், தமிழக உளவுத்துறை முன் கூட்டியே திட்டமிட்டு இதைத் தடுக்கத் தவறியிருக்கிறது ‘’ என்றும் புன்னியா ஊடகங்களிடம் பேசினார்.

இது 1982-ன் நிகழ்வு.

நான் ஆரம்பக் கல்வி பயிலும் சிறுவனாக இருந்த போது, 1982- மார்ச் 15-ஆம் தேதி எனது ஊருக்குப் பக்கத்து ஊரான பள்ளந்துறை என்னும் மீனவர் கிராமம் நாடார் சாதி வெறியர்களாலும், ஆர்.எஸ். எஸ் குண்டர்களாலும் தீக்கிரையாக்கப்பட்டது. 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளந்துறை சூறையாடப்பட்டது, ஒரு வீடு விடாமல் பொருட்களை கொள்ளையிட்ட பின், தீயிட்டார்கள்.தேவாலயத்தில் புகுந்து கொள்ளையடித்து விட்டு பீடத்தில் சிறு நீர் கழித்த பின் தீயிட்டார்கள். கோவில் தேரை முழுமையாக எரித்தார்கள். சிறுமலர் கன்னியர்களுக்குச் சொந்தமான நவீன மருத்துவமனை ஒன்று அங்கே இருந்தது அதையும் முழுமையாக எரித்தார்கள். சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின்னர் சம்பவத்தை ஆய்வு செய்ய அதாவது 17-ஆம் தேதி போலீசார் ஊருக்குள் வந்தனர். ஆனால் அதற்குள் மண்டைக்காடு, கோவளம், மேல மணக்குடி என 10 மீனவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். இன்றளவும் கூட ஒரு முறையான விசாரணை கூட இன்றி முடிந்து போன வரலாற்றுத் துயரம் அது.

பொதுவாக தமிழகத்தில் இந்து மதவெறியர்கள் வெளிப்படையான அரசியல் எழுச்சி என எழுதுகிறவர்கள்.மீனாட்சிபுரம் மதமாற்றம்,மண்டைக்காடு கலவரம் இந்த இரண்டுமே இந்து வெறியில் வெளிப்படையான அரசியல் என்று எழுதுவார்கள்.இந்து மதவெறியின் வரலாறு இருண்ட மேகமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை பீடித்திருந்தாலும், தற்காலத்தில் அது தமிழகத்தில் வெளிப்படையாக உருவானது சேரன்மகாதேவியில் வவேசு அய்யர் துவங்கிய ஆஸ்ரமத்தில்தான், பின்னர் 1963-ல் ராமகிருஷ்ணாமடம், அன்னை சாரதா பீடம், போன்றவை விவேகானந்தர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் துவங்கினார்கள். கன்னியாகுமரியில் மீனவர்கள் பயன்படுத்திய திருவணப்பாறை என்னும் பாறையை விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்ட அனுமதி கோரி தமிழக அரசிடம் பெற்று மயிலாப்பூர் பொன்னுசாமி என்னும் ம.பொ.சிவஞானம் அவர்களால் நினைவுக் கல் நட்டு அந்த நினைவு இல்லம் துவங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரின் கனவான அந்த இல்லத்தை நிறுவ ஏக்நாத் ரானடே தமிழகம் வந்து மத வெறியைப் பரப்பியதெல்லாம் தனிக்கதை. எழுபதுகள் வரை குமரி முனை மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி காட்டிய எதிர்ப்பை அன்றைக்கு திராவிட இயக்கங்கள் கண்டு கொள்ளவில்லை, அண்ணாதுரை போன்றோர் விவேகானந்தர் நினைவில்லத்தை ஆதரித்தனர். திருச்சபையும் கண்டு கொள்ளவில்லை விளைவு, கோவளம், சின்னமுட்டம், கன்னியாகுமரி மீனவர் கிராமங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று துண்டாடப்பட்டு நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.இன்றுவரை இழந்து நிற்கின்றனர்.

ஆனால் 1970 பதுகளில் துவங்கிய விவேகானந்தர் பாறையில் இருந்துதான் இந்து மதவெறியர்கள் வெளிப்படையாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் துவங்கினார்கள். 70 -லிருந்து எண்பது வரையான பத்தாண்டுகாலம் தமிழக வரலாற்றில் மிக மிக முக்கியமான காலக்கட்டம் .அந்த பத்தாண்டு காலத்தில் ஆர்.எஸ். எஸ் இயக்கம் தென் தமிழகத்தில் உருவானது. முதன் முதலாக இந்து நாடார்களைத் திரட்டினார்கள். குமரி மாவட்டம் முழுக்க அந்த பத்தாண்டுகளில் தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இந்து நாடார்களுக்கும், கிறிஸ்தவ நாடார்களுக்கும் கூட மோதல்கள் நடந்தது. அதனுடைய தொடர்ச்சிதான் 1982- ல் நடந்த மண்டைக்காடு மீனவர் படுகொலைகள். அதே காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் தேசிய உணர்வு என்னும் பெயரில் சாதி ரீதியாக அணி திரண்டார்கள். வன்னியர் எழுச்சியும், தேவர்கள் எழுச்சியுமாக,உருவானது அப்போதுதான்.

தேர்தல் அரசியலில் மாவட்ட வாரியாக எது பெரும்பான்மை சாதியோ அதை தேர்தல் வெற்றிக்காக ஊட்டி வளர்த்தது திராவிட இயக்கம். அரசியலில் எது வெற்றி பெரும் சாதியோ அந்த சாதித் தலைவர்கள் நினைவு விழாக்கள் புதிது புதிதாக முளைத்தன.பெரியாரின் தம்பிகள் என்றும் பெரியாரின் வாரிசுகள் என்றும் சொல்லிக் கொண்டோர் பார்ப்பன எதிர்ப்பை பிற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளின் வளார்ச்சிக்கப்பால் எடுத்துச் செல்லவே இல்லை. பெரியார் பேசிய விஷயங்களுக்கு எதிராக அவரின் தம்பிகளே மாறிப்போன அவலம் நடந்தது இப்போதுதான்.இந்த நாற்பாதண்டுகளில் தமிழக அரசியலில் கோலோச்சுகிறவர்கள் இவர்கள்தான். தொகுதி ,தொகுதியை மையமிட்ட மாவட்ட நிர்வாகம் என அனைத்துமே இந்து மனதையும், சாதி வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் எல்லா சாதிக் கொடூரங்களையும் அரசு இயந்திரத்தின் வன்முறையோடு இணைத்துப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களிலும், பொது வெளியிலும் சுதந்திரமாக சாதி பற்றிப் பேசுகிறார்கள். இவர்களில் பெரும்பலானோர் இந்த தலைமுறையைச் சார்ந்தவர்கள்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் ஜனனி அய்யர் என்று நடிகை பெயருக்குப் பின்னால் பெயரைப் போட்டுக் கொண்டால் கொதிப்பார்கள். சின்மயிக்கு எதிராக சினந்து வெடிப்பார்கள். இவர்கள் வெங்காயத் தமிழன், மண்ணாங்கட்டித் தமிழன் என்ற பொதுப் பெயரில் உலவுவார்கள் . இவர்கள் நாம் மீனவர்கள் பற்றி பேசினால் அதை சாதி வெறி என்று திசை திருப்புவார்கள். சரி சாதி பற்றி பேசுவோம் வா… என்றால் சீ சீ அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்பது போல பேசுவார்கள். தங்கள் சாதியச் சார்ந்தவர்கள் தலைமை தாங்குகிறார்கள் என்பதால் மட்டுமே சில போராட்டங்களில் தங்களை இணைத்து உற்சாகக் கூத்தாடும் நபர்களையும் இதில் காண முடியும்.

அதற்கு பல் வேறு காரணங்களைச் சொல்ல முடியும். இவர்கள் சார்ந்த சாதியினர் எழுதும் விஷயங்களுக்கு எதிர்வினையாற்றும் நம்மை சாதி வெறியன் என்பார்கள். அவன் சாதிக்காரனை மயிலிறகு கொண்டு வருடுவார்கள். கடந்த தலைமுறைகளைக் காட்டிலும் கொடூரமான மனப்பாங்காக, ஒரு பண்பாடாக சாதி வன்மம் உருவாகி வருகிறது. சாதியை நிராகரிப்பவன் என்று சொல்கிறவன் கூட சாதியால் கிடைக்கும் அனுகூலங்களை சத்தமில்லாமல் அனுபவிப்பனாக இருக்கிறான் ஏனென்றால் பொது அடையாளம் என்ற அயோக்கியத் தனம் அதைத் தாங்கி நிற்கிறது.

வேறு சிலரோ , தமிழ் சாதிகளின் வன்முறைகளை சத்தமாகப் பேசி அதை ஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கு எதிராகவும், தமிழ் தேசியவாதிகளுக்கு எதிராகவும் திருப்புவார்கள். ஆனால் நாயக்கர் வன்முறை குறித்தோ ரெட்டிகளின் தலித் மக்கள் மீதான தாக்குதல் குறித்தோ இவர்கள் பேசுவதில்லை. தேவர்களும், நாடார்களும், வன்னியர்களும் தலித்துக்கள் மீது செய்யும் கொலை பாதகங்களை தமிழ் தேசியவதிகள் மிக எளிதாக கடந்து செல்கின்றனர். தலித் என்ற அடையாளத்தைக் கூட சொல்ல மறுக்கும் அவர்கள் பொதுவில் தமிழர் மீதான தாக்குதல் என்று மொக்கையாக எதையோ உளறி தங்களின் சாதிப் பண்பை பாதுகாக்கின்றனர்.இவைகளிலும் பார்க்க அறிவுலகினரின் சாதிச் சேர்க்கைதான் ஆபாசத்திலும் உச்சக்கட்ட ஆபசாமாக இருக்கிறது. முற்போக்கு பேசினால் கூட அவன் தன் சாதியைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது ஊடக, அறிவுலகினரின் அறம்.

ஒரு முறை பெரியார் தலித்தாகவோ, இஸ்லாமியராகவோ பிறந்திருந்தால் அவரை தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்குமா? என்று நான் கேட்ட போது நண்பர்கள் சூடாகி என்னை வைதார்கள். ஆனால் நிச்சயமாக அந்தக் கேள்வி என்னிடம் எஞ்சியிருக்கிறது. பெரியார் வெறும் பார்ப்பனர்களுக்கு எதிராக மட்டும் பேசவில்லை அவர் சூத்திரபார்ப்பனீயம் பற்றியும் பேசினார். ஆனால் பெரியாரைப் பின்பற்றுவோர் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் அவர் பேசியதிலிருந்து தங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். பிற மொழிச் சாதிகளின் வன்முறை பற்றி வாயே திறக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் தெரியும் தலித் இயக்கங்களோ தலித் மக்களோ திருப்பித் தாக்கும் அரசியலைப் பெற்றது அம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் பின்னர் திருமா, கிருஷ்ணசாமி, ஜாண்பாண்டியன் போன்றோர் தலித் மக்களின் தலைவர்களாக உருவான பின்னர்தான் என்பதை தங்கள் வசதிக்காக மறந்து விடுகிறார்கள்.

திராவிட இயக்கங்களில் தோழர் விடுதலை ராஜேந்திரன் போன்றோர் தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில அமைப்புகளே பிற்படுத்தப்பட்டோர் சாதி வெறிக்கு எதிராக போராடுகின்றனர். ஏனெனில் இதில் உள்ள பாதகமான பல அம்சங்கள் குறித்து நான் தோழருடன் பல மணி நேரம் உரையாடினேன். திராவிட, தமிழ் தேசிய இயக்கங்களில் இணைகிறவர்களில் பெரும்பலானோர் பிற்படுத்தப்பட்ட சாதியினர்தான். இவர்கள் முற்போக்கு என்னும் அளவில் பெரியார் படத்தைப் போட்டுக் கொள்வார்கள். பிரமாணாள் கபே போராட்டத்திற்கு உற்சாகம் காட்டுவார்கள். தேவர் ஹோட்டல், நாடார் மளிகைக்கடை,நாயக்கர் கோழிக்கடைக்கு எதிராக ஏன் போராட வில்லை என்று கேட்டால் இந்த இரண்டுக்குமிடையிலான ஆபத்துக்களின் எது முதன்மையானது எது நீண்ட இலக்கு என அரசியல் வகுப்புகளை நடத்துவார்கள். இதை நியாயப்படுத்த தவறாமல் பெரியார் பேசிய கொட்டேஷன்கள் சிலதை இதற்கென்றே எடுத்து வைத்திருக்கும் அளவுக்கு அறிவானவர்கள் இவர்கள். பெரியார் பேசிய கொள்கைகளை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்த்து பார்ப்பனீயத்தையும் நவீன கால புரிந்தலோடு வேரறுக்கவும், பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் வன்முறை அரசியலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பின் பேரிலேயே இதை எழுதுகிறேன்.

ஆனாலும் என்ன செய்ய தேசிய அரசியல் பாதையிலிருந்து விலகி தமிழகம் புதிய அரசியல் பாதைகளுக்குச் சென்றாக நம்ப்பப்பட்ட இந்தக் காலத்தில் பிரமாணாள் கபேயும் ஒன்றுதான் நாயக்கன் கொட்டாயும் ஒன்றுதான் உங்கள் நோக்கில் அல்ல தலித் மக்கள் நோக்கில். முடிந்தால் அனைத்து சாதிகளையும் எதிர்த்து நில்லுங்கள். தலித்துக்களுக்கு விடுதலை கொடுங்கள்.

தகவல் உதவி -http://www.vinavu.com/

Tags: , , , , , ,

Category: அரசியல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

2 Comments

  • Shahul M Kasim

    தோழருக்கு நன்றி.இதில் எல்லாமே என் உள்ளக்குமுறலும் கூட..என் சுவரில் பகிர்ந்து கொள்கிறேன்..

Leave a Reply