“its a simple ethics, people expect” -commissioner Tripathi

Oleh: Arulezhilan
February 24, 2012

தன் குழந்தை திருடனாகவோ, கொலைகாரராகவோ, ரௌடியாகவோ , அல்லது சமூகத்திற்கு பயனுள்ள மனிதனாகவோ உருவாவான் என்பதெல்லாம் குழந்தை பிறக்கும் போது தெரிவதில்லை. அழகாக பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் தாங்கள் விரும்பிய பெயர்களை இடுகிறார்கள். நாளை அவர்கள் கொலை வழக்கு ஒன்றிலோ, குற்றச் செயல்களிலோ ஈடுபட்டு போலீசாரால் கை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லும் போது கூட பெற்றவர்கள் பிள்ளைகளை மறுதலித்து விடுவதில்லை. திருடனே என்றாலும் அவன் குழந்தைதான்.

சென்னையில் இரண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசாரால் சொல்லப்பட்டு எவ்வித சாட்சியங்களுமின்றி சந்திரிகா ரே, ஹரீஸ் குமார், வினய் பிரசாத், வினோத்குமார், அபய் குமார் ஆகிய ஐந்து திருமணமாகாத இளைஞர்கள் அநியாயமான முறையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் அபய்குமார் ஒருவர் மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர் என்றும் ஏனைய நால்வரும் பீஹார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளைகளுக்கு வட மாநிலத்தவர்தான் காரணம் என்று சொல்கிறது ஊடகங்களும் போலீசும். ஒரு கொள்ளை நடந்தால் அதில் விசாரிக்கப்படுகிறவர்கள் வட மாநில ஏழைத் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். திருப்பூரில் ஜாய் அலுக்காஸ் நகைக்கடையில் 14 கோடி ரூபாய் பெருமான முள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறது போலீஸ். தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானப்பணிகளுக்கு மிகக் குறைந்த கூலி கொடுக்கப்பட்டு தமிழகத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இந்த நவீன கொத்தடிமைகள். இது போன்ற வட மாநில மாணவர்கள். நேபாளிகள், என எண்ணற்றவர்கள் தமிழகத்தில் வந்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக ஏழை மக்களின் ரத்தத்தைச் சுரண்டிப் பிழைத்து வரும் பனியா, மார்வாடிகளும் இவர்களும் ஒன்றல்ல அவர்கள் வேறு இவர்கள் வேறு.

ஆனால் இந்த என் கவுண்டர்களை ஆதரிக்கும் சில காட்சி ஊடகங்கள் வட மாநிலத் தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டும் என்று சொல்கிறது. இக்கொலைகள் பற்றி ஊடகங்களுக்குப் பேசிய சென்னை கமிஷனர் திரிபாதி // ஜன்னல் வழியாக அவர்கள் சுட்டார்கள் பாதுகாப்புக்காக நாங்கள் சுட்டோம்// என்றும் இன்னொரு கேள்விக்கு ‎”its a simple ethics, people expert” -commissioner Tripathi அதாவது மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்திருக்கிறோம் என்கிறார் கமிஷனர் திரிபாதி

பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சிக்காக இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறேன் என்றார். அந்த தீர்ப்பை வழங்கக் கோரி டில்லி மத்யமரும், பிஜேபி, இந்துத்துவ அமைப்புகளும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ஆனால் தமிழகத்தில் நடைபெறும் கொள்ளைகள் பெரும்பலான மக்களிடம் அச்சத்தைத் தோற்று வித்ததே தவிற குற்றவாளிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று எந்தமக்களும் உங்களிடம் கோரவில்லை. ஆனால் மின்வெட்டுக்கு எதிராக, விலைவாசி உயர்வுக்கு எதிராக, அணு உலைக்கு எதிராக, இழந்து விட்ட தங்களின் நிலங்களை மீட்க, நீர் உரிமைக்காக, உழைப்புக்காக, கூலி உயர்வுக்காக, உற்பத்தி செய்த உணவின் நல்ல விலைக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதிருப்தியை மறைக்க இந்த ஐந்து பேரின் ரத்தத்தையும் மக்களுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறது தமிழக போலீஸ்.

மிக நேர்மையாகச் சொன்னால் தொண்ணூறு சத வீத வழக்குகளில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவதில்லை. கண்டு பிடிக்கப்படுகிறவர்கள் சட்ட நடவடிக்கை மூலம் தண்டிக்கப்படுவதில்லை. காரணம் போலீஸ், ரௌடி, அரசியல்வாதிகளின் கூட்டுடனேயே பெரும்பலான குற்றங்கள் நடைபெறுகின்றன. அரசியல் கிரிமினல் மயமாகி விட்டது என்று வோரா கமிஷன் குற்றம் சுமத்தியது. கிட்டத்தட்ட எல்லா அரசியல் வாதிகள் மீதும் அதிகாரிகள் மீதும் ஊழல் புகார்கள் உள்ளன. பத்து ரூபாய் பெருமானம் உள்ள ஒரு அரசு காரியத்திற்கு ஐம்பது ரூபாய் வரை லஞ்சம் அழுதால் மட்டுமே சாத்தியமாகும் அரசு இயந்திரம்.
எந்த அரசியல்வாதி யோக்கியம் சொல்லுங்கள் போலீசின் துப்பாக்கிகள் இவர்களுக்கு எதிராகத் திரும்புமா? நவீன வசதிகள் பெருகிவிட்ட இந்த காலத்தில் இவர்கள் ஐந்து பேரையும் உயிரோடு போலீசாரால் பிடித்திருக்க முடியும். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் மனைவியின் தம்பி முருகன் என்பவர் வெளியில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சட்டைத் துணியை கண்டு சந்தேகமடைந்து கிண்டி போலீசில் தொலைபேசி மூலம் புகார் கொடுத்திருக்கிறார். அவர்தான் தன் அக்காளிடம் அவர்களுக்கு அட்வான்சை திருப்பிக் கொடுக்காதே என்றும் சொல்லியிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் பெயரில்தான் போலிசார் வந்து அண்டை வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல் சுட்டுக் கொன்று விட்டு கலர் கலராக கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது போலீசும் , ஊடகங்களும், முதலாளிகளும் மக்கள் மீது சேர்ந்து நடத்துகிற யுத்தம். இன்று இவர்களைக் கொன்று நமக்கு வேடிக்கை காட்டுகிறார்கள். நாளை நம்மைக் கொன்று இன்னொரு கூட்டத்திற்கு வேடிக்கை காட்டுவார்கள்.

இவர்கள்தான் அந்த கொள்ளையர்கள் என்பதர்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. ஐந்து பேரில் வினோத்குமார் என்பவர்தான் அந்த வீடியோவில் உள்ளவர் என்று போலீஸ் சொல்கிறது. அவர் போட்டிருந்த சட்டை ரத்தக் கரைகளோடு அங்கு கிடக்கிறது. ஆனால் ஏனைய நால்வரும் யார் அவர்களும் கொள்ளையர்கள் என்ற முடிவுக்கு போலீஸ் எப்படி வந்தது. உண்மையில் அவர்கள் நிராபராதிகளாக இருந்தால் போன உயிரை திரிபாதி திருப்பிக் கொடுப்பரா? அல்லது அந்த வீட்டு உரிமையாளர்தான் திருப்பிக் கொடுப்பாரா? கொல்லப்பட்டது உயிர்களப்பா…. ஒரு வேளை நாளை அதில் கொள்ளையடித்த அந்த இளைஞர் நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். கொள்ளையடித்தது தவறு என்று மனந்திருந்தி இனி என் வாழ்நாளில் மீதி காலங்களை நான் மக்களுக்காக வாழ்கிறேன் என்று மக்களுக்காக உழைக்கும் ஒரு மனிதனாக அந்த வினோத் குமார் மாற வாய்ப்பு இல்லையா? அந்த உரிமையை அவருக்கு வழங்க மறுத்து துப்பாக்கியைத் தூக்கி இப்படிச் சுட்டுக் கொன்றிருக்கீற்களே காவல்துறையினரே உங்கள் வாழ்வில் என்றாவது ஒரு நாள் மக்களுக்கு நீங்கள் நன்மை செய்ததுண்டா? வாழும் உரிமையை மறுக்கும் உரிமையை சென்னை கமிஷனர் திரிபாதிக்கு வழங்கியவர்கள் யார்.

இப்போது அந்த பிணங்கள் அநாதைப் பிணங்காளாக ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ளது. தன் பிள்ளைகளின் பிணங்களை வாங்கச் சென்றால் போலீசாரின் துன்புறுத்தலுக்கு ஆளாவோம் என்று பயந்து கூட அந்த பெற்றவர்கள் வராமல் இருக்கலாம்.

Category: மனித உரிமை | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply