கதிரியக்கம் நிறைந்த ஊரில் அஜய் வாழ்ந்தான்.

Oleh: Arulezhilan
October 5, 2012

ajay

அஜய் வாழ்ந்த போது.

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் அமைந்திருக்கும் மத்திய அரசின் அரிய மணல் ஆலை உருவாக்கும் கதிரியக்க அபாயம் தொடர்பாகவும், அந்தப் பகுதியில் நிலவும் கேன்சர் மரணங்கள் தொடர்பாகவும் ஒரு ஆவணப்படத்தை இயக்கலாம் என நானும் நண்பரும் புகைப்படக் கலைஞருமான ஜவஹரும் முடிவு செய்திருந்தோம்.
இதற்கு முன்னர் 2001-ல் அந்தப் பகுதி கடலோரக் கிராமங்களுக்குகுச் சென்றிருந்தேன். அப்பகுதிகளில் பரவி வரும் கேன்சர் ஆபத்து பற்றியும் அப்பகுதி மீனவ மக்களின் மரணம் பற்றியும் 07-10-2001 ஜூனியர் விகடனில் ‘ ஐயோ இது என்ன கொடுமை? என்ற கட்டுரையையும் எழுதியிருந்தேன். சுமார் பதினோரு வருடங்கள் கழிந்து விட்ட நிலையில் கேன்சர் பாதிப்பு அப்பகுதியில் எப்படி இருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்த நானும் ஜவஹரும் நாகர்கோவிலில் இருந்து கிளம்பினோம். குறும்பனை பெர்லின் எங்களுக்காக அங்கே காத்திருந்தார். ஒவ்வொரு கிராமமாக சென்று பார்த்த போது அதிர்ந்து விட்டேன். ஒவ்வொரு கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். குறும்பனை கிராமத்திற்குச் சென்ற போது ராபர்ட் எடிசன் என்ற 31 வயது இளைஞரை அப்போதுதான் அடக்கம் செய்து விட்டு வந்திருந்தார்கள். எடிசனின் இளம் மனைவி இருண்ட அறையில் அழுது புரண்டு கொண்டிருக்க கேன்சர் நோயில் மரித்துப் போன தன் அப்பாவின் படத்தை தடவியபடி ‘’ப்ப்ப…ப்ப்ப…” என்று சொல்லத் தெரியாமல் சொல்லிக் கொண்டிருந்தான் எடிசனின் ஒரு வயதுக் குழந்தை.

அஜய்யின் மரணம்

சின்னவிளை, பெரியவிளை, புதூர், கொட்டில்பாடு, குறும்பனை, மிடாலம் என எந்த ஒரு கிராமத்தையும் கதிர்வீச்சு விட்டு வைக்கவில்லை. முன்னர் சென்ற போது அந்தப் பகுதி மீனவர்கள் ஆலைக்கு மண் சுமந்து கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.வன்முறையில் ஆகப்பெரிய சமூக வன்முறையாக நான் கருதுவது பாரம்பரீய தொழில்களிருந்து மக்கட் சமூகத்தை தொடர்பில்லாத பிரிதொரு தொழிலுக்கு மாற்றி விடுவதுதான். பாரம்பரீய விவசாயிகள் நகரத்து அப்பார்ட்மெண்டுகளில் வாட்ச்மேன் வேலை பார்ப்பதைப் போல மீன் பிடிக்கும் தொழிலை விட்டு விட்டு அப்பகுதி மீனவர்கள் ஆலைக்கு மண் சுமந்து கொண்டிருந்தார்கள். இந்த அரிய மணல் ஆலையால் கதிரியக்கமும் அதனால் கேன்சரும் உருவாகிறது என்பதையறிந்த மக்கள் முதலில் எதிர்த்ததாகவும், அப்படி எதிர்த்த பாரம்பரீய மீனவர்களையே தங்களுக்கு மண் சுமக்க வைத்து அவர்களை தங்களின் கூலி அடிமைகளாக மாற்றியது அரிய மணல் நிறுவனம் என்றும். துவக்கத்தில் சின்னவிளை, பெரியவிளை, புதூர், கொட்டில்பாடு, குறும்பனை, மிடாலம், போன்ற கிராமங்களில் உள்ள மக்கள் மண் சுமந்து கொடுத்தார்கள் என்றும். பின்னர் குறும்பனை, கொட்டில்பாடு, மிடாலம் போன்ற கிராமத்து மீனவர்கள் இதன் ஆபத்தை உணர்ந்து மணல் அள்ளிக் கொடுக்கவும் மாட்டோம். எங்கள் பகுதியில் ஆலையை மணல் அள்ளவும் அனுமதிக்க மாட்டோம் என்று மறுத்து விட்டதாகவும், ஆனால் மணல் ஆலைக்கு அருகிலேயே உள்ள அதிக கேன்சர் ஆபத்தைச் சந்திக்கின்ற சின்னவிளை,பெரியவிளை, புதூர் கிராம மக்கள் அந்த ஆபத்தையறியாமல் இன்னமும் இந்த ஆலைக்கு மண் சுமக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இப்பகுதியில் கேன்சர் நோயால் அதிகமாக பதிக்கப்படும். சின்னவிளை, பெரியவிளை, புதூர் கொட்டில்பாடு, குறும்பனை ஆகிய கிராமங்களை அரிய மணல் ஆலை தத்தெடுத்திருக்கிறது. இந்த கிராமங்களைச் சேர்ந்த கேன்சர் நோயாளிகள் நெய்யூர் கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அந்த சிகிச்சைச் செலவை இந்த நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது” என்று நண்பர் குறும்பனை பெர்லின் சொன்னார்.

ராபர்ட் எடிசனின் ஒரு வயதுக் குழந்தை.


கேன்சர் ஆபத்து ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தங்களின் பாரம்ரீய தொழில் உரிமையை கைவிடுகிற ஆபத்தை நினைத்தபடி அந்தக் கடலோரக் கிராமங்கள் வழியே அச்சத்துடன் அரபிக் கடலில் உப்புக் காற்றை உதட்டால் சுவைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 5 பேராவது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று வயது வேறுபாடின்றி கொத்துக் கொத்தாய் கேன்சர் நோய்க்கு பலியாகிக் கொண்டிருந்தார்கள்.

இந்த பதினோறு ஆண்டுகளில் ஆலை தன் உற்பத்தியை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கேன்சரும் தன் வீர்யத்தை பல மடங்கு அதிகரித்து மீனவ மக்களின் உயிர்களைச் சூறையாடி வருகிறது. திருநெல்வேலிக் கடலோரத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் மீனவ மக்கள் மத்தியில் வலுவாக வெடித்திருக்கும் நிலையில், அரிய மணல் ஆலை நிர்வாகத்தை எதிர்க்கத் துணிந்த மனிதர்கள் எவரும் இப்போது இந்தப் பகுதியில் இல்லை. இந்த ஆலை எப்படி துவங்கப்பட்டது? கருப்பு நிற மண்ணில் அரிய வகைக் கனிமங்கள் இருப்பதை கண்டு பிடித்தவர் யார்? பல வண்ணங்களில் இறைந்து கிடக்கும் இந்த மண் எங்கிருந்து வருகிறது? என்கிற வரலாற்றை எல்லாம் என் ஆவணப்படத்தில் விவரித்திருக்கிறேன்.

ayay

ஜவஹரும்,. அஜய்யும்

வரிசையாக ஒவ்வொரு ஊராகச் சென்றோம். மணலுக்காக ஊர் கமிட்டிக்கு அவர்கள் எவ்வளவு தொகை வழங்குகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களின் ஊர்,வயது என எல்லா விபரங்களையும் திரட்டினோம். சுனாமிக் காலனியில் இன்றோ நாளையோ என்ற நிலையில் 40-க் கடந்த ஒரு பெண் மணி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். துணியால் போர்த்தப்பட்டிருந்த அவரிடமிருந்து சின்ன முனகல் மட்டுமே வெளிப்பட்டது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் சுமார் ஐந்து பேராவது கேன்சர் மரணத்தின் விளிம்பிலும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டோருமாக வாழ்கிறார்கள். இந்தப் பகுதியில் நிகழும் இளவயது மரணங்கள் பெரும்பாலும் கேன்சரால் நிகழ்கிறது. இளவய்து என்றால் ஒரு குழந்தையின் மரணத்தை என்னவென்று சொல்வது?

அப்படி ஒரு குழந்தையை நான் கொட்டில்பாட்டில் சந்தித்தேன்.புதூர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் அவன் சில மாதங்களுக்கு முன்பு பள்ளியில் மயங்கி விழுந்தான். பல கட்டச் சோதனைகளுக்குப் பின்னர் மூளைப் புற்றால் அவன் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னபோது பெற்றோர் அதிர்ந்து போனார்கள். சென்னை , திருவனந்தபுரம் உள்ளிட்ட பெரிய நகரங்களில் எல்லாம் சிகிச்சை செய்த பிறகு மரணத்தை உறுதி செய்திருந்தார்கள். ஆனால் தேதியை இறுதி செய்யவில்லை. நான் அவனைப் பார்க்கச் சென்ற போது அவனது அம்மா அவனுக்காக சித்த மருந்துகளை டப்பாவில் அடைத்துக் கொண்டிருந்தார்.அவனை வா.. என்று அழைத்த போது சுவரைப் பற்றிய படி நடந்து வந்தான். அதிக நேரம் நிற்க முடியவில்லையானாலும் அவனால் உற்சாகமாக சிரித்துப் பேச முடிந்தது.

ajay

அவன் வலுவிழந்து கொண்டிருந்தான்

என் கைகளை அவனுக்குப் பிடிக்கக் கொடுத்தேன். நீட்டிய என் விரல்களை அந்தப் பிஞ்சுக் கரங்களால் பிடிக்க இயலவில்லை. நரம்புகள் சோர்வடைந்து விட்டன. ஆனால் அவன் இன்னும் சில ஆண்டுகளுக்கு வாழத் தகுதியுள்ள குழந்தையாக இருந்தான்.தன் குழந்தையின் மரணத்தை எதிர்கொள்ளும் மன நிலைக்கு பெற்றோர்கள் தயாராக வேண்டும் என்பதை அவர்களுக்கு மறைமுகமாக எடுத்துச் சொன்னோம்.இந்த உலகில் அவனுக்கு ஆகச் சிறந்த சந்தோசம் எதுவுமோ அதை அவனுக்கு நீங்கள் பரிசளிக்க வேண்டும் என்றும் சொன்னேன். கை நிறைய சாக்லெட்டுகள் வாங்கிக் கொடுத்தோம். அவன் தன் தங்கையை கிண்டல் செய்தபடி அவளுக்கு அந்த இனிப்புகளை பரிசளித்தான்.விரிவாகப் பேசிய அஜய்யின் அம்மாவிடம் இந்த கேன்சர் எதனால் வருகிறது என்று இறுதியாகக் கேட்ட போது அவர் சொன்னார். ‘மணல் கம்பெனிலருந்து’.நாங்கள் அவரிடமிருந்து விடைபெற்றோம். அன்று மட்டுமல்ல சென்னை வந்த பின்னர் கூட நீண்ட நாட்களாக என் மனதை அலைக்களித்தபடி இருந்தான் அஜய்.

ajay with parents

அஜய் பெற்றோருடன்.

கடந்த மாதம்தான் பெர்லின் போன் பண்ணி அந்த சிறுவன் இறந்து விட்டான் என்றார். திருநெல்வேலியில் இருந்த ஜவஹர் உடனடியாக கோடிமுனைக்குச் சென்று அவனது இறுதிச் சடங்கு முழுவதையும் படம் பிடித்தார். அவனுக்கு வாங்கிக் கொடுத்த சைக்கிள் இன்னமும் ஓரமாக சாத்தி வைக்கப்பட்டிருந்ததாக ஜவஹர் சொன்னார். ‘’ரொம்ப அழுதாங்களோ? என்று கேட்டேன் அவர் பெத்த பிள்ளையில்லியா? என்றார். கதிரியக்கத்தால் என்ன நடக்குமோ அதுதான் அந்தக் குழந்தைக்கு நடந்தது. அஜய் இல்லாத வீட்டில் இப்போது அவனது தங்கையும், அப்பாவும் அம்மாவும் வாழ்வதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். உங்களுக்கு ஒன்றை நான் சொல்ல மறந்து விட்டேன் அவர்களின் பக்கத்து வீட்டில், பக்கத்து தெருவில், பக்கத்து ஊரில், என எங்கும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட அஜய்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது தா, பாண்டியனோ, அப்துல்கலாமோ, கருணாநிதியோ, ஜெயலலிதாவோ வாழும் ஊரல்ல அவர்கள் வாழும் ஊர் கதிரியக்கம் நிறைந்த ஊர்.

இதற்கு விளக்கம் தேவையில்லை.

Category: கட்டுரைகள், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

13 Comments

 • Reni flavia

  அஜித்தின் மரணம் மனதை வெகுவாக பாதித்து விட்டது…அணு உலை மக்களை படுகுழியில் தள்ளுவதற்கு முன் நாம் விழித்துக் கொள்வது நல்லது….அந்நிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை மட்டுமே பெரிதாக எண்ணும் இந்த ஆட்சியாளர்கள் ஒழிந்தால் தான் நாம் வாழ முடியும்..இல்லையேல் சொந்த ஊரிலேயே கொத்தடிமைகளாய் தான் இருக்க வேண்டும்.

 • Arulezhilan

  thank you Reni.

 • மரித்துக் கொண்டிருக்கிறது மனிதம்.. :((

  பொன்.வாசுதேவன்
  (அகநாழிகை)

  • Arulezhilan

   அகநாழிகை, ஆமாம் தங்களின் தேவைக்காக பிற மக்களை கொடுத்தேனும் வாழும் ஒரு ஒழுக்கம் எல்லா மக்களிடம் பரவி வருவது வேதனையளிக்கிறது.

 • shahul m kasim

  மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 🙁

 • எழிலன் , நான் கதிர்வீச்சுகள் பற்றி என் கட்டுரைகளில் எழுதி வந்தவன் என்ற முறையில் … நீங்கள் சொல்வது ரேர் எர்த் மினரல் பற்றியதா? அல்லது கடல் மணலில் இருக்கும் இயற்கைக்கதிர்வீச்சு பற்றியதா? என்று விளக்கவும் !

  • Arulezhilan

   வள்ளியாற்றில் இருந்து கடலோரத்திற்கு வந்து சேரும் இந்த மணலில் இயற்கையாகவே கதிர் வீச்சு இருக்கிறது. ஆனால் அது அப்படியே இருக்கும் வரை எவருக்கும் பிரச்சனையில்லை. அல்லது மிக மிக குறைந்த பாதிப்பைக் கொண்டதகாவே இருக்கும். ஆனால் இந்த அரிய மணலில் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் போதும், மணலை தோண்டிவிட்டு அந்தக் கழிவுகளையும் அங்கே கொட்டுவதால் அதிக கதிர்வீச்சுப்பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 • ஆமாம் அது உண்மைதான் …
  என் சகோதரியும் இந்த காரணத்தால் தான் இறந்தார்.

  என் இதயத்தில் கஷ்டமாக இருக்கிறது. நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் நம் அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் நடக்கிறது.
  நம் அரசாங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் முட்டாள்கள், சுயநலவாதிகள், உதவாக்கரைகள்.

  if any of the higher authorities who is present in that ISRO. I will kill them…
  If they will die, their family should feel my feeling of my sister lose.

 • jo.tamilselvan

  புதூர்துறை மற்றும் கொட்டில்பாடு கிராமத்திற்கும் இடையே ஐ.ஆர்.இ. நிறுவனம் மணலை வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றபோது, என்னுடைய தலைமையில் (வினாஞ்சுஸ், சகாயராஜ், அருள்ராஜ், செல்வன், ஜோஸ், தனசீலன், அவுசப், பீட்டர் மற்றும் சிலர்) நண்பர்களை இணைத்து வாகனங்களை தடுத்து புதூர்துறை சகாயமாதா குருசடி முன்பாகப் சிறைபிடித்து போட்டோம். ஊர் மக்கள் கூடினர். என்ன நடக்குமோ என்கிற ஒருவித அச்சரேகை மக்கள் முகங்களில் படர்ந்திருந்ததை கண்டேன். நான் வக்கீலாக இறுதி வருடம் படித்து கொண்டிருந்ததால் காவல்துறை வந்தால் இவன் சமாளித்து விடுவான் என்கிற ஒரு எண்ணமும் எங்கள் ஊரார் மத்தியல் நிலவியது. ஐ.ஆர்.இ, அதிகாரிகளுடன் காவல்துறை வந்து வாகனத்தை பிடித்தது யார் என விசாரித்தனர். நான் முன் சென்றேன். எங்கள் பகுதியில் மண் எடுக்கக் கூடாது என எழுதி தந்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என்றேன். என்னை மிரட்டி பார்த்தார்கள். எதுவும் நடக்காததால் என்னிடம் பேசி பலனில்லை என நினைத்து சாமியார் மேடைக்கு சென்றனர். பங்குப் பேரவையில் இருந்தவர்கள் எனது முடிவினையே கொண்டிருந்ததால் பலன் எதுவும் எட்டவில்லை. மறுநாள் வந்து, இனிமேல் மண் எடுக்கமாட்டோம் என எழுதக் கொடுத்து விட்டு சென்றார்கள். அப்பொழுது 1998 வது வருடம் ஆகும். இதற்கிடையில் என்ன நடந்ததோ பணி. நாற்பர்ட் அலெக்சாண்டர் பங்குப் பேரவையை தனது கையில் போட்டுக்கொண்டு ஐ.ஆர்.இ. நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டு மணல் எடுப்பதற்கு அனுமதித்தார். அதன்பிறகு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனது நண்பர்களும் இப்பொழுது மணல் எடுக்கும் பணியினை செய்கிறார்கள். இன்று மணல் அள்ளி புற்றுநோய்க்கு உள்ளாவதனை நினைக்கும்போது வருத்தப்படதான் முடிகிறது.

  • Arulezhilan

   நாற்பர்ட் அலெக்சாண்டர் என்பவர் பாதிரியார்தானே. அவர் மறைந்து விட்டார் என்பதால் அவரைப் பற்றி பேசுவது நன்றாக இருக்காது. ஜோ. தமிழ் செல்வன், குறும்பனை பெர்லின், போன்ற நண்பர்கள் இணைந்து இதற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும். நான் என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன்.

 • அன்பு அருள் எழில், இந்த கட்டுரையை ‘தமிழ் ப்ளைட்’ மாத இதழில் மீள் பிரசுரம் செய்ய உங்கள் அனுமதி தேவை… உடன் அனுமதி தாருங்கள். இது ஒரு அரசியல், சமுதாய மாத இதழ். நவம்பர் மாத இதழில் பிரசுரிக்க அனுமதி தேவை.

  அன்புடன்

  தேவகுமாரன்

 • தேவகுமாரன் தாராளமாக வெளியிட்டுக் கொள்ளவும்.

 • merlin

  அஜய்யின் மரணம் மன பாரத்தை ஏற்படுத்தி விட்டது சார்

Leave a Reply