தானே புயல் நிவாரண ஓவியக் கண்காட்சி.

Oleh: Arulezhilan
March 6, 2012

தானே புயலில் வாழ்வாதரங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவ விகடன் ஏற்பாடு செய்து நடந்து கொண்டிருக்கும் ஓவியக் கண்காட்சியைக் காண சென்னை லலித் கலா அக்காடமிக்குச் சென்றிருந்தேன். தரைத் தளத்திலும் மேல் தளத்திலுமாக இரண்டு அரங்கங்களிலுமாக சுமார் சுமார் 300 ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஓவியர்களில் எனக்குப் பழக்காமானவர்கள் மிகவும் குறைவு. ஓவியக் கோட்பாட்டுப் புரிதல் அதை விடக்குறைவு.கடந்த 100 ஆண்டுகளில் தமிழ் ஓவிய மரபில் கலந்தும் பிரிந்தும் போராடியும் ஒன்றை ஒன்று முந்தியும் சென்ற பல் வேறு ஓவியக் கோட்பாடுகளில் இருந்து உருவான சுமார் 300 ஓவியர்களின் படைப்புகளைக் காண நேர்ந்த அனுபவம் சிலிப்பானது.

ஓவிய மரபின் வரலாறு நீண்ட பல் வேறு வாசலைக் கொண்டது. பழைய மரபு பாணி ஓவியங்களை விட அதிக வீச்சோடும் நவீன அடையாளங்களோடும் உருவச் சிதைப்பு ஓவியங்களாகவும், கோட்டோவியங்களாகவும் உருவாகி வந்த நவீன ஓவியங்கள் இன்று அனைவரின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது. அந்தக் கால ஆனந்த விகடனின் அட்டைப்படத்தை வரைந்த ஓவியர் கோபுலுவில் தொடங்கி இன்று சிதைந்த உருவங்களால் உணர்வை உருவாக்கும் வில்லேஜ் மூக்கைய்யா வரை எத்தனை எத்தனை ஓவியங்கள். நான் நினைக்கிறேன் லலித் கலா அக்காடமியில் சம காலத்தில் நடந்த சிறப்பான ஓவியக் கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும். காரணம் எளிமைதான் . இவைகள் ஒரே மாதிரியான ஓவிய பாணியானதோ , ஒரே மாதிரியான வரையறுக்கப்பட்ட ஓவியங்களோ இல்லை. ம.செ தொடங்கி மருது வரை தங்களின் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பெரியவரும் மிகச்சிறந்த கோட்டோவியக்காரருமான மறைந்த ஆதிமூலம் குறித்து “வெளிகளினூடே “ என்ற ஆவணப்படத்தை நான் எடுத்த போது அவர் கோட்டோடியங்கள் தொடர்பாக சொன்ன விஷயங்களும். ஒரு காலத்தில் பெரும்பலான பாப்புலர் ஊடகங்கள் நவீன பாணி கோட்டோவியங்களை நிராகரித்த கதையையும் சொன்னார். சுமார் முப்பதாண்டுகளுக்குப் பின்னர் இன்று உருவச்சிதைப்பு ஓவியங்களும், கோட்டோவியங்களும் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்றால் அவர்கள் முப்பது வருடம் ஓவிய மரபில் ரசனை மாற்றத்திற்காக பாடு பட்டிருக்கிறார்கள் என்று பொருள். சித்திர வடிவ எடுத்துக்களை முதன் முதலாக கையாண்டது ஆனந்த விகடந்தான் அதுவும் ஆதிமுலத்தின் எழுத்தில். வெகு மக்களின் தமிழ் அச்சு ஊடகப்பரப்பில் கோடோவியங்களுக்கும் சரி நவீன பாணி உருவச்சிதைப்பு ஓவியங்களுக்கும் சரி ஆனந்த விகடன் அளித்த பங்களிப்பு அளப்பரியது. கோபல்லபுரத்து மக்கள் என்று தொடங்கிய கி.ராவின் கதைகளில் எத்தனை எத்தனை ஓவியங்களை ஆதிமூலம் கொடுத்தார். அது போல எத்தனையோ ஓவியர்கள் தங்களின் திறமைகளை விகடன் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

இப்படி தங்களை வெளிப்படுத்திக் கொண்ட எல்லா ஓவியர்களுமே இன்று தானே புயல் நிவாரணத்திற்காக பங்களித்திருக்கிறார்கள். இந்தக் கண்காட்சிக்காக பிரத்தியேகமாக வரைந்து கொடுத்த ஓவியர்கள் உண்டு. புயலின் கோரத்தை, அது மனிதர்களிடம் உருவாக்கிய தனிமையை ஓவியத்திலும் சிதைத்திருக்கிறார்கள். அது உருவாக்குகிற மன எழுச்சி அந்த மக்களுக்கு பயன்படும் என்றால் மகிழ்ச்சியே.

அப்படி அத்தனை ஓவியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு கண்காட்சியாக்கியிருக்கிறார்கள். ரூபாய் பத்தாயிரத்தில் தொடங்கி நான்கரை லட்ச ரூபாய் வரையிலான ஓவியங்கள் தானே புயல் நிவாரணக் கண்காட்சியில் இருக்கிறது. ஒரு சமூகம் தன் வாழ்வை மீள கட்டியெழுப்ப உதவும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் நீங்கள் ஒரு ஓவியம் வாங்கினால் அதில் ஒரு கடலூர் குடும்பம் வாழ்வைத் தொடங்கலாம்.

Category: நிகழ்வுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

No Comments

Leave a Reply