நான் அருள் எழிலன் பேசுகிறேன் – நேர்காணல்.

Oleh: Arulezhilan
August 12, 2012

பெற்றோர்கள் நினைப்பது போல் இல்லை வாழ்க்கை. பிள்ளைகள் தங்களை ஒழுங்குப் படுத்திக் கொள்வதில் எப்போதும் சிறந்தே விளங்குகிறார்கள் என்பதை சில பெற்றோர்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியான ஒரு சூழலில் இருந்து தனக்கான களத்தை தேர்ந்தெடுத்தவர் அருள் எழிலன். இதழியல் துறையிலிருக்கும் அரிதான மனிதர்களில் ஒருவர் இவர். தன் உயர்வுக்காக சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்களிடையே சமூகம் பற்றிய சிந்தனையை சுமந்து திரியும் இளைஞர். இயல்பான எளிய மனிதர். ஆனந்த விகடனில் இவர் பணியாற்றிய காலங்களில் இவர் எழுதிய சில கட்டுரைகள் நிச்சயம் எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு வித்தாகவே இருக்கும். ஒரு ஜனரஞ்சக இதழின் முகத்தையே சற்று மாற்றிவிட முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். அருள் எழிலன் சுமார் எட்டு ஆவணப்படங்களையும் சில குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார். தனது குறும்படங்களுக்காகவும், பத்திரிகைப் பணிகளுக்காகவும் சில அங்கீகார விருதுகளைப் பெற்றுள்ளார். 2007- ல் இந்தியா டுடே இதழால் கௌரவிக்கப்பட்ட அருள் எழிலனுக்கு வயது 36. சமூக வலைத் தளத்தில் கொந்தளிக்கும் கருத்துக்களோடு பாயும் அருள் எழிலனை நேரில் சந்தித்த போது அப்படித் தெரியவில்லை. தோற்றமும்,
வார்த்தைகளும் நட்பாய் விரிந்து செல்கிறது. தமிழ் ஸ்டுடியோவிற்காக அவரை ஒரு விரிவான நேர்காணலுக்காக சந்தித்தோம்.


இனி திரு. அருள் எழிலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. உங்களைப் பற்றி?

குமரிமாவட்டத்தில் அரபிக்கடலின் அலைவாய்க்கரையில் நெடுநீளமாய் விரிந்து கிடக்கும் மீனவ கிரமங்களில் ஒன்றான புத்தந்துறை என்னும் கிராமம்தான் என்னுடைய ஊர். பட்டா இல்லாத புறம்போக்கு நிலமான அந்த நெய்தல் வெளிதான் நான் பிறந்த இடம். அப்பா கேரளாவை ஒட்டிய ராமந்துறை என்னும் கிராமத்தில் உள்ள ஒரு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தார். அந்த கடலோரம் முழுக்க எல்லா ஊர்களிலுமே தேவாலங்கள் பிரமாண்டமானதாகவும், மீனவக் குடியிருப்புகள் குடிசைகளாகவும் இருந்தன. இன்று நீங்கள் எங்கள் கிராமத்திற்கு வந்தால் ஒரு மீனவர் கிராமம் எப்படியிருக்கும் என்று உங்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உடைந்து போகும். காலம் காலமாய் அவர்கள் கடலில் உழைத்து வருமானத்தில் பெரும்பங்கை தேவாலயங்களுக்குக் கொட்டிக் கொடுத்தார்கள். 90 -களுக்குப் பிறகு மீனவ இளைஞர்கள் அரபு நாடுகளுக்குச் சென்று உழைத்து அவர்களின் வாழ்வை முன்னேற்றிக் கொண்டார்கள்.மீனவ கிராமம் என்று நம்ப முடியாத அளவுக்கு கிராமம் மாறியது திருச்சபையால் அல்ல, அரபு நாடுகளுக்குச் சென்று உழைத்ததால் அந்த மக்களின் வாழ்வு முன்னேறியிருக்கிறது. பால்யத்தில் எனது ஊரின் நினைவுகள் மண்டைக்காடு கலவரத்திலிருந்தே துவங்குகிறது. நான் அப்போது இரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னோட அம்மா என்னை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு ஒடினார். வேலைக்குப் போன அப்பா திரும்பவில்லை. எங்கள் பக்கத்து ஊரான பள்ளந்துறையை ஒட்டு மொத்தமாக தீவைத்து விட்டார்கள். இந்து மத வெறியர்களால் மிக மோசமான முறையில் மீனவ கிறிஸ்தவ மக்கள் சூறையாடப்பட்ட வரலாறு அது. இந்த மண்டைக்காடு கலவரம் எனக்குள் கொண்டு வந்து சேர்த்தது சில சந்தோஷங்களையும்தான் என்று சொல்ல வேண்டும்.

தாமஸ் வாத்தியார் ரொம்ப ஸ்டிரிக்ட்…. ரொம்ப என்றால் அவர் வீட்டிற்குள் நுழைகிறார் என்றாலே வயிற்றைக் கலக்குகிற அளவுக்கு. கண்டிப்பதாலும் அடிப்பதாலும் மட்டுமே பிள்ளைகள் படித்து விடும் என்று நம்புகிற அப்பா. கண்ணில் பாசத்தைக் காட்டி விட்டால் பிள்ளைகள் கெட்டு விடும் என்று நினைத்தாரோ என்னவோ? அப்படி நடந்து கொள்வார். மண்டைக்காடு தாக்குதல் நடந்த போது நாங்கள் எல்லாம் வீட்டை விட்டு வெளியேறி கடலோரத்தில் கொல்லணி அமைத்து அதில்தான் தங்கி இருந்தோம். கொல்லணி என்பது கட்டுமரத்தில் பயன்படுத்தப்படும் பாயால் தற்காலிகமாக அமைக்கப்படும் டெண்ட்… நிலவொளி பரப்பிய கடலும், கரையோர நண்டும், குளிர்காற்றும், எனக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்தது. அப்பா இல்லை, படிப்பு இல்லை, அதட்டல் இல்லை…ஆமாம் அது ஒரு வசந்தகாலமாக என் நினைவில் என் ஊரின் முதல் நினைவாக பதிந்து போக இதுவே காரணம். எனது கிராமத்தில் புனித பால யேசு நடுநிலைப் பள்ளி என்றொரு பள்ளி இருந்தது, அங்குதான் நான் படித்தேன்.

என்னோட அப்பா மதத்தோடு, சொந்த சாதியோடு, ஊர் நிர்வாகத்தோடு, பள்ளியோடு, பாதிரியார்களோடு மோதிக் கொண்டிருந்தார். அவர் ஊருக்குள் நடத்திய எல்லா கிளர்ச்சிகளின், கலகங்களின் எதிர்விளைவுகளையும் நான் அனுபவித்தேன். வீட்டில் நான் இளையவன் என்பதால் நான் அனுபவிக்க நேர்ந்தது. ஊரிலிருந்து எங்களை விலக்கி வைத்ததெல்லாம் உண்டு. ஒரு மோசமான தகப்பனாக என் அப்பா நடந்து கொண்டாரே தவிர அவர் கிறிஸ்தவத்திற்கு எதிராகவும், பாதிரியார்களுக்கு எதிராகவும், போராடியதெல்லாம் மிகப்பெரிய கிளர்ச்சி. அவரது கோபத்தில், கேள்வியில் உண்மை இருந்தது. காலம் காலமாக மீனவ மக்களை சுரண்டிக் கொழுத்த தேவாலயத்தை அவர் எதிர்த்தார். தமிழ் திருச்சபையால் நவீன அரசியல் அடிமைகளாக்கப்பட்டு அறியாமையிலேயே வாழ்ந்து கொண்டிருந்த மீனவ மக்களை அவர் தூண்டினார். ஆமாம் இங்கு நான் அதிகப்படியாக எதையும் சொல்லவில்லை. அப்பா ஒரு உண்மையான உள்ளூர் போராளியாக இருந்தார்.

அவர் திருச்சபை, கோவில் வழிபாடு, பாதிரியார்களுக்கு எதிராக ஏகப்பட்ட கவிதைகளை எழுதினார். அதற்கு ஊரில் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் அதனுடைய பின் விளைவுகளை பால இயேசு நடுநிலைப்பள்ளியில் படித்த நான் அனுபவித்தேன். நான் ஒரு சாத்தனின் மகன் என்பதால் மோசமாக அந்த கிராமத்து ஆசிரியைகளால் வசவப்பட்டேன். அதனுடைய விளைவு சரியான ஆரம்பக் கல்வி எனக்கு கிடைக்கவில்லை. இந்த கலகங்கள் காரணமாக ஊரிலிருந்து எங்களை விலக்கி வைத்தார்கள். அது கொடூரமான நாட்கள். ஊரில் எவரும் எங்களோடு பேசக் கூடாது, தண்ணீர் கொடுக்கக் கூடாது, எந்த விதமான தொடர்புகளும் பேணக்கூடாது என்பது ஊர் கமிட்டியின் உத்தரவு. இந்த தடை பள்ளிக்கூடத்தில் என் மீதும் காட்டப்பட்டது. சர்வவல்லமை பொருந்திய கமிட்டி என்று நம்ப்பப்பட்ட பாதிரியார்களால் ஊட்டிவளர்க்கப்பட்ட அப்பாவி கமிட்டி மெம்பர்களின் அதிகாரத்தைக் கண்டு அந்த ஊரே அஞ்சி நடுங்கிய போது, மரியாதைக்குரிய என் அப்பா அதை உடைத்து தகர்த்தெரிந்தார். ஆனால் பள்ளியில், காலப்ந்து மைதானத்தில், நாங்கள் விலக்கி வைக்கப்பட்டோம். என் படிப்பு பாழாய்ப் போக அந்த கிராமத்து ஆசிரியைகள் என் மீது காட்டிய பாரபரட்சமான அணுகுமுறையே காரணம். பின்னர் எப்போதும் என்னால் படிக்க முடியாமல் போனதாற்கும் அந்த கசப்புகளே காரணம்.கிராமங்களில் அங்கீகரிக்கப்படாத நிர்வாக அமைப்பாக கமிட்டி என்பது இருப்பதும், அவர்கள், உள்ளூர் பிரச்சனைகளை கையிலெடுத்து கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதும் பரவலாக உள்ள செய்தி.

2. உங்கள் கிராமத்தைப் பொறுத்தவரை இந்த நிலை இன்று மாறியிருக்கிறதா?

ஆமாம் கட்டப்பஞ்சாயத்தின் தன்மை இன்று மாறியிருக்கிறது. முன்னர் கமிட்டி என்று இருந்தது. என் தகப்பனாருக்குப் பிறகு பலரும் கமிட்டிக்கு எதிராக துணிந்து பேசினார்கள். அதன் விளைவாக அந்த நிர்வாக முறை பலமிழந்து செயலிழந்தது. ஆனால் காலம் காலமாக கிறிஸ்தவ பாதிரியார்களால் கைப்பற்றப்பட்டுள்ள தென் தமிழக மீனவர்களை தங்களின் கட்டுக்குள் வைக்க அவர்கள் இப்போது அன்பியம் என்ற மக்கள் விரோத அமைப்புகளையும், பங்குபேரவை என்ற நவீன கட்டபஞ்சாயத்து முறையையும் கிராமங்களில் செயல்படுத்துகிறார்கள். அவர்கள் இதற்குச் சொல்கிற காரணம் திருச்சபையோடு மக்களை ஐக்கியப்படுத்த அன்பியம், பங்குப்பேரவை போன்ற ஜனநாயக அமைப்புகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்கிறார்கள். திருச்சபையோடு மக்களை ஐக்கியப்படுத்த தேவாலயமும், இயேசும், மேரி மாதாவும் போதாதா? ஏன் அதற்காக மக்களை நிர்வாகம் செய்யும் அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் எங்கெல்லாம் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இவர்கள் இந்த அன்பியங்களை வைத்திருக்கிறார்கள். மக்களே மக்களுக்காக மக்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக அமைப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாத முற்பட்ட சாதி கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் அதிகாரம் பெறவும், ஆதிக்க சாதி பாதிரியார்கள் தங்களின் சொத்துக்களை பெருக்கிக் கொள்ளவ்ம், பிஷப்புகள் என்று சொல்லக் கூடிய தலைமை நாட்டாமைகள் மன்னர்களைப் போல வலம் வரவுமே இந்த அன்பியங்கள் உதவுகின்றன. ஒரு கட்டத்தில் நினைத்துப் பார்த்தால் படிக்காத பாமர மீனவ மக்களால் நிர்வாகம் செய்யப்பட்ட கமிட்டியே பெட்டராக இருக்குமோ என்று கூட நினைக்கத் தோன்றும் அளவுக்கு கிறிஸ்தவ மக்களை ரோமன் கத்தோலிக்க மதம் ஏமாற்றிக் கொண்டிருகிறது. இந்த நிலை எங்குமே மாறவில்லை. இன்று மீனவ மக்களுக்கு கோட்டாறு மறைமாவட்டத்தில் இடமில்லை. அங்கு பிறபடுத்தப்பட்ட சாதி பாதிரியார்களின் ஆதிக்கம்தான் அதிகம்.
பெரும் பங்கு பள்ளிகளை அவர்களே நிர்வாகம் செய்கிறார்கள். அந்தப் பள்ளிகளும் தேவாலையங்களும் கட்டப்பட்டது மீனவன் பணத்தில். ஆனால் அங்கு ஆசிரியர்களாக வேலை செய்யும் உரிமை மீனவனுக்கு இல்லை. இவர்களுக்கு காலம் காலமாக அடியாட்களாக இருந்த மீனவ மக்கள் இன்று அப்படி இருக்க தயாரில்லை. எங்களோட மக்கள் இன்று அவர்களின் உரிமையைக் கேட்கத் துவங்கியுள்ளார்கள். இதை நான் வரவேற்கிறேன். எனக்கு தேவாலயமோ, பாதிரியார்களோ முக்கியமில்லை. மக்கள்.. ஆமாம் மீனவ மக்களுக்காக நான் கவலைப்படுகிறேன். ஏனென்றால் நான் என்பது அவர்கள்தான். திருச்சபையாக இருந்தாலும், பாதிரியார்களாக இருந்தாலும் மீனவ மக்களின் வழிபாட்டு, ஆன்மீக விஷயங்களில் மட்டுமே தலையிட வேண்டும். அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கவும், அரசியல் முடிவுகள் எடுக்கவும் இனி அனுமதிக்க முடியாது. எங்கள் மக்களை தூண்டும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

3. அப்பா மீது நல்ல நினைவுகள் என்று எதுவுமே இல்லையா?

அதான் சொன்னேனே… மரியாதைக்குரிய அப்பா என்று….. சிறு வயதில் கசப்பான நினைவுகளாக தோன்றுபவை பின்னர் மாறுவதில்லையா? இப்போ அவர் மீது எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை. இப்போ என்னோட ரோல் மாடல் அவர்தான். நான் அவராக மாறிக் கொண்டிருக்கிறேன். அது எனக்கு சிரமமாக இருக்கிறது. ஆனாலும் நான் கோபக்காரனாகத்தான் இருக்கிறேன். அப்பா ஒரு சின்ன லைப்ரரி வைத்திருந்தார். அதிலிருந்து நான் எடுத்துப் படித்த முதல் நூல் தகழியோட ’செம்மீன்’. அப்புறம் மர்க்சீம் கார்க்கியோட ’தாய்’, வண்ணநிலவனோட ‘கடல்புறத்தில்”, தோப்பில் முகம்மது மீரானுடைய ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ என இன்னும் சில நூல்கள். இந்த நூல்கள்தான் என்னை மாற்றின. இதெல்லாம் நான் அப்பாவுக்குத் தெரியாமல் வாசித்தவை. ஊரில் உள்ள சூழல் என்னை பல ஊர்களின் பள்ளிக்குத் துரத்தியது. எங்கள் பக்கத்து ஊரான கேசவன்புத்தந்துறையில் இரண்டு வருடம் படித்தேன். அனேகமாக ஏழாம் வகுப்பில் இருந்து எல்லா வருடமும் பெயிலாகி பெயிலாகித்தான் படித்தேன். இரண்டாம் வகுப்பில் இருந்தே குழந்தைகளை பெயிலாக்கலாம் என்றொரு வளர்ச்சித் திட்டத்தை நமது கல்விமுறை கொண்டிருக்கும் என்றால் இரண்டாம் வகுப்பில் இருந்தே நான் பெயிலாக்கப்பட்டிருக்கலாம். எனது இந்த தோல்விக்கு நான் காரணமல்ல என் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்கள்தான் காரணம். அவர்களே மோத முடியாத என் தகப்பனாரை வீழ்த்துவதற்கு பதிலாக அவரது சிறு வயது மகனை வீழ்த்தினார்கள். காயேன் ஆபேலைப் பலிகொடுத்து கடவுளிடம் தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டது போல, என்னைப் பலியிட்டு எங்களூர் ஆசிரியைகள் கிறிஸ்தவ பாதிரிகளிடமும், ஊர் கமிட்டியிடமும் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இதனால் பள்ளிக்கூடம் என்பது எனக்கு பிடிக்காமலேயே போனது.
பள்ளிக்குப் போகாமல் தியேட்டர்களே கதி என்று “மிஸ்டர் பாரத்” படத்தில் தொடங்கி மணிரத்னத்தின் “அக்னிநட்சத்திரம்” வரை அத்தனை படங்களையும் ஒன்று விடாமல் பார்த்த காலமது. ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடம், வீடு இரண்டுமே நெருக்கடிக்குள்ளான போது நான் பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டிலிருந்து ஓடி விட்டேன். பயம், தனிமை, வெறுமை சூழந்த மன நிலையில் நாகர்கோவில், திருவனந்தபுரம் என சுற்றித் திரிந்ததும். ஒரு ஹோமோ செக்சுவலிடம் சிக்கிக் கொண்டதும் கூட உண்டு. இதெல்லாம் பெரிய கதை….. அதை நான் தாமஸ் வாத்யார் என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். என் அப்பாவை மிக மோசமான முறையில் நோகடித்திருக்கிறேன், தண்டித்திருக்கிறேன். ஆனால் அது நான் அவருக்கு வழங்கிய தண்டனையா? அல்லது எனக்கு நானே விதித்துக் கொண்ட தண்டனையா? என்பதைத்தான் இன்று வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் பள்ளிக்குச் செல்லாமல் தியேட்டர் தியேட்டாரக அலைந்தது ஒரு பள்ளிக்கூட வாத்யரான அவருக்கு அவமானத்தை ஏற்படுத்த, நான் ஒழுங்காக பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று என்னிடம் ஒரு சமாதான ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார் அவர்.

‘’வாரம் இரண்டு சினிமாவுக்கு நானே அழைத்துச் செல்கிறேன். நீ ஒழுங்காக பள்ளிக்குச் செல்ல வேண்டும்” என்பதுதான் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். தன் வாழ்நாளில் ஒரு நாள் கூட தியேட்டர் பக்கமே செல்லாத அந்த தமிழ் வாத்தியார், என்னை வாரம் இரண்டு சினிமாவுக்கு அழைத்துச் சென்றார். நானும் அப்பாவும் வேதம் புதிது உள்ளிட்ட சில சினிமாக்களுக்குச் சென்றோம். அவர் மிகவும் சிரமப்பட்டார். நான் அப்பாவை நினைத்து வேதனைப்பட்டு அவரை விட்டு விட்டேன். ஒழுங்காக பள்ளிக்குச் சென்றேன். படிக்க முயன்றேன் என்னால் முடியவில்லை. நான்கு முறை எழுதியும் கூட என்னால் பத்தாம் வகுப்பு தேற முடியவில்லை. என் விஷயத்தில் அப்பா தோற்றதாக நான் நினைக்கவில்லை. நான் தான் தோற்றுப் போனேன். எனக்கு அம்மாதான் பிடிக்கும். அவர் எல்லோரையும் விட என்னை அதிகமாக நேசித்தார்.
நினைவுபடுத்திச் சொன்னால் நான் என் வாழ்வில் இரண்டு விஷயங்களுக்காகவே கதறிக் கதறி அழுதிருக்கிறேன் ஒன்று அம்மாவின் மரணம். இன்னொன்று 2009- மே ஈழத்தின் படுகொலைகள். ராஜுமுருகனின் வீட்டில்தான் தொலைக்காட்சிப் பார்த்த படியே கட்டுப்படுத்த முடியாமல் அழுததும், அளவு கடந்து குடித்ததும் அந்த நாட்களில்தான். அம்மாவின் மரணம் கொஞ்சம் வேறுபாடானது. அவர் தீவிரமான ஆஸ்துமா நோயாளி. நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் சில வேளைகளில் அவரைப் பார்க்கும் போது ஒரு பூனைக் குட்டியைப் போலிருப்பார். சுருங்கி படுத்திருப்பார். வைகோவின் பேச்சுக்களை விரும்பிக் கேட்பார். 35 வருடம் என் அம்மாவை தன் தோளில் தூக்கிச் சுமந்தவர் அப்பா. பல மாதங்களாக நாங்கள் மருத்துவமனைகளிலேயே வாழ்ந்தோம். அப்பாவின் வருமானத்தில் பெரும்பங்கை அம்மாவின் மருத்துவச் செலவுகள் எடுத்துக் கொண்டது. நான்கு பிள்ளைகளை வளர்க்கவும், மருத்துச் செலவைப் பார்ப்பதும் ஒரு ஆரம்ப்பள்ளி ஆசிரியரால் சாத்தியமான ஒன்றல்ல. இறுதியில் அம்மாவின் துன்ப வாழ்வுக்கு ஒரு முடிவு வந்தது. மாதக் கணக்காக மருத்துவமனையில் இருந்த பின்னர் அவரது உடலுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் துவங்கின.
இறுதியில் நான் அவருடனே இருந்தேன். ஆக்சிஜென் கொடுத்தால் உயிரிழப்பை தள்ளிப் போடலாம், காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொன்ன போது ஆக்சிஜனை எடுத்து விடச் சொன்னது நான் தான். அவர் உயிர் பிரிகிற போது மிகவும் மனம் வெறுமையாக கனத்திருந்தது. பின்னர்தான் நான் உடைந்து அழுதேன். நான் நீலாவைக் காதலித்ததோ, பொன்னிலா என்ற குழந்தை எனக்கு பிறந்திருப்பதோ நானும் இந்த சென்னையில் ஒரு மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதோ அம்மாவுக்குத் தெரியாது. அவர் என்னைப் பற்றிய கவலைகளோடுதான் செத்துப் போனார். இயக்குநர் கரு.பழனியப்பன் திருமணத்தில் வைத்து நான் சௌபா அண்ணனிடம் இப்படிச் சொன்னேன் // தாய் சாகும் போதே அவள் ஈன்றெடுக்கும் பிள்ளைகளும் அவளோடு மரித்துப் போகிறார்கள் என்று. // நான் முழுமையாக உணர்ந்து சொன்ன வரிகள்தான் அது.

4. சினிமாதான் விருப்பமானதாக இருந்ததா? அந்த உணர்வு எப்போது வந்தது?

சினிமாவும் இஷ்டமான ஒன்றாக இருந்தது. பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு தியேட்டருக்குப் போவேன்? அப்போ சில நாட்கள் காசில்லாமல் நாகர்கோவிலில் சுற்றித்திரிவேன் அங்கே மத்தியாஸ் வார்ட் என்று சொல்லக் கூடிய பிஷப் ஹவுஸ் பகுதியில் அவர்கள் பாஸ்டரல் சென்டர் என்றொரு இடம் வைத்திருந்தார்கள். அங்கே குருத்துவ மௌன மடம் என்று ஒன்று இருந்தது. அதைச் சுற்றி மிக ரம்யமான தோட்டம் இருந்தது. அங்கே போய் இருப்பேன். அங்கே ஒரு படிப்பகம் இருந்தது. அங்கே உள்ள நூல்களை எடுத்துப் படித்த போது ஒரு கதை படித்தேன். அது சதத் ஹசன் மண்டோவின் ‘ராஜாங்கத்தின் முடிவு” அது காலச்சுவடு இலக்கிய மலர் வருடாந்திர தொகுப்பில் வந்திருந்தது என நினைகிறேன். ஓவியர் ஆதிமூலத்தின் ஒரு ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த இதழில் விமாலித்த மாமன்னன், உள்ளிட்ட சிலர் சில மொழி பெயர்ப்புகளைச் செய்திருந்ததாக நினைவு.அதில்தான் நான் ராஜாங்கத்தின் முடிவு கதையை படித்தேன். அப்போதே.. ஆமாம், அப்போதே எனக்கு ஒரு நல்ல திரைக்கதை கிடைத்ததாக முடிவு செய்தேன், என்றைக்கு சினிமா எடுத்தாலும் ராஜாங்கத்தின் முடிவை படம் பண்ண வேண்டும் என நினைத்தேன். பின்னர் ஊரை விட்டு கிளம்பலாம் என்று முடிவு எடுத்த போது சென்னைக்கு வரமுடியவில்லை. கோவைக்குத்தான் சென்றேன் அங்கே ரத்னபுரியில் ஒரு ஹோலோபிளாக் செங்கல் செய்யக் கூடிய மிஷின் தயாரிக்கும் கம்பெனியில் லேத் அசிஸ்டெண்டாக வேலை பார்த்தேன். சுத்தியல் அடிப்பது, வெல்டிங் கெல்பர், பழைய இருப்புக்கடைக்குப் போய் இரும்புகளை வாங்கி வருவது மாதிரியான வேலை. ரொம்ப ஜாலியாக இருந்தது. பின்னர் பெரும்பாடு பட்டு சென்னைக்கு 95- ல் வந்தேன். தங்கவோ, தூங்கவோ, ஒரு இடமில்லாமல் அலைந்த காலம் அது என்றாலும் அதுவும் மிக நல்ல சுவாரஸ்யமான காலங்கள்தான். இந்த அனுபவங்களை எல்லாம் நான் துன்பமாக நினைத்ததில்லை. எல்லா விதத்திலும் அது என் ஊரை விட சிறந்த வாழ்வாகவே இருந்தது.
பின்னர் சாய் சித்தார்த் ரெசார்ட் என்றொரு கம்பெனியில் ஏவல் பையன் வேலை. டீ வாங்கிக் கொடுப்பது, பைல்களை எடுத்துச் செல்வது போக. சென்னையில் இருந்து லோட் ஏற்றிக் கொண்டு லாரியில் கொடைக்கானலுக்குச் சென்று, சைட்டில் லோட்களை இறக்குவதும் வேலை. லாரியின் மேல் கேபினில் படுத்துக் கொண்டு கொடைக்கானல் செல்வதுதான் எனக்கு அப்போது பிடித்த விஷயமாக இருந்தது. திடீரென அந்த கம்பெனியை மூடி விட்டார்கள். அப்புறம் அடையார் எல்.பி சாலையில் சுமந்த் பிரிண்டர்ஸ் என்றொரு பிரிண்டிங் கம்பெனி இருந்தது. அதில் இங்க் போடும் வேலை, பல்லாவரத்தில் தோல் பதனிடும் கம்பெனியில் ஒரு வேலை, என கையில் கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தேன். இதிலெல்லாம் சொல்லிக் கொள்ள ஏராளமாய் இருந்தாலும் அவை எதுவும் இப்போது தேவையில்லை. என் அண்ணன் அப்போது சென்னையில் வேலையில்லாமல் இருந்தார்.
ஆனால் அவருக்கு சினிமாத் தொடர்புகள் இருந்தது. அவரிடம் என்னை யாரிடமாவது உதவி இயக்குநராக சேர்த்து விடு என்றேன். அவர் என்னை சேர்த்து விடவில்லை. நான் காட்சி ஊடகத்திற்கோ, அச்சு ஊடகத்திற்கோ பொறுத்தமில்லாத ஆள் என்று அவர் நினைத்திருந்தாரோ என்னவோ? நான் என்னை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக என் அண்ணன் மூலம் ஒரு தொலைக்காட்சியில் உதவியாளர் வேலை கிடைத்தது. மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கூத்தாடிகள், பிரசில்லாவின் கனவு, சித்திரக்கன்னியின் அரிதாரம், பேசும் சிற்பங்கள். வேளிகளினூடே, பேசும் சிற்பங்கள் உள்ளிட்ட சில சிறிய ஆவணப்படங்களை எடுத்தேன். பின்னர்தான் ராஜாங்கத்தின் முடிவு எடுத்தேன். அது நான் ரசித்து நேசித்து செய்த படம்.

5. ராஜாங்கத்தின் முடிவு தமிழில் கொண்டாடப்பட்ட குறும்படம். அது உங்களை உற்சாகப்படுத்தியிருக்கும் தானே?

ஆமாம. நான் முதல் முதலாக கொண்டாடப்பட்டது அதில்தான். நிழல் திருநாவுக்கரசுதான் அதை தமிழகம் முழுக்க கொண்டு சென்றார். பிரான்ஸ் நண்பர்கள் வட்டம் எனக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு கொடுத்தார்கள். பல்வேறு நாடுகளில் அது திரையிடப்பட்ட போதெல்லாம் எனக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தார்கள். ஈழ நண்பர்கள், ஈழத்து அரசியல் காரணமாக அறிமுகமானவர்கள் அல்ல, எனது ராஜாங்கத்தின் முடிவு குறும்படத்தால் அறிமுகமானவர்கள். கி.பி.அரவிந்தன், அசோக், பிரகாலதன், வசந்தி, கேமிராமேன் செழியன், அஜயன்பலா, அய்யப்பமாதவன் என நிறையபேர் என்னை பாராட்டியதாக நினைவிருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அதுதான் என்னை அதிகளவான நண்பர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
ஓசூரில் ஏதோ ஒரு அமைப்பின் மூலம் ஆதவன் தீட்சண்யாவின் ஏற்பாட்டின் பேரில் எனது குறும்படத்தை திரையிட்டார்கள். அரசியல் ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும் இதுதான் உண்மை. நூற்றுக்கணக்கான திரையிடல்கள் மூலம் நான் ஏகப்பட்ட நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டேன். ஏராளமான பெண் நண்பர்கள் கிடைத்ததும் இந்த படத்தின் மூலம்தான். காலம் தோறும் நான் விழுந்து அழிந்து போகாமல் என்னைக் காப்பாற்றியவர்கள் இந்த நண்பர்களே.

6. அந்த படத்தில் நடிக்க வேறு ஆள் கிடைக்கவில்லையா? நீங்கள் ஏன் நடித்தீர்கள்? நடிகராகும் திட்டமும் இருந்ததா?

இல்லை. அப்போ என்னிடம் பணம் இல்லை. ஒரு பீட்டா கேமிரா கொடுத்தார்கள். என் நண்பர் விஜய் திருமூலம் கேமிரா பண்ணினார். செலவு ஐந்தாயிரமோ, பத்தாயிரமோ ஆகியிருக்கும். இந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நண்பர்கள் சொன்னதாலும், நானே அதை உணர்ந்ததாலும் நடித்தேன். நானே அப்படி ஒரு ஆளாக சில மாதங்கள் வரை வாழ்ந்தேன். மற்றபடி நடிகனாகும் திட்டம் எதுவும் எனக்கில்லை. சில நண்பர்கள் நடிக்க அழைத்த போதும் நான் மறுத்திருக்கிறேன். ராஜாங்கத்தின் முடிவுக்குப் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் நடிக்க வந்தது. சில பெரிய இயக்குநர்களே நடிக்கக் கேட்டார்கள் நான் மறுத்து விட்டேன். மிஸ்கின் நந்தலாலாவில் நடிக்கச் சொன்ன போது என்னால் மறுக்க முடியவில்லை. அவரே ஆட்டோ எடுத்துக் கொடுத்து பழகச் சொன்னார் பழகி நடித்தேன். மிஸ்கின் எனது மிகச் சிறந்த நண்பர் அவர் எனது பலத்தை, பலவீனத்தை என என் நிர்வாணத்தை அறிந்த சில நண்பர்களுள் அவரும் ஒருவர். மற்றபடி நல்ல கதையாக, நல்ல கேரக்டராக இருந்தால் நடிப்பேன். இல்லை என்றால் நோ.


7. காட்சி ஊடகத்திலிருந்துதான் பத்திரிகைத் துறைக்கு சென்றீர்களா?

ஆமாம். நான் விரும்பிய வெளிக்குள் பிரவேசித்தாலும் எனக்கு போதுமான இடமில்லாமல் இருந்தது. அப்போது ஆனந்த விகடன் கண்ணன் சார் என் அண்ணனைப் பார்க்க அங்கு வந்தார். சில ஆவணப்படங்களைக் காட்டிய போது எழுதியது யார்? என்றார் நான் என்றேன். பத்திரிகையில் எழுத ஆசையா? என்று கேட்டார் ஆமாம் என்றேன். அலுவலகம் வந்து பார்க்கச் சொன்னார் அவர்களின் அலுவலகம் போன பிறகு சேம்பிளுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். நான் எனக்கு மிகவும் பிடித்த சந்திரபாபு பற்றி பாதியில் முடிந்த பயணம் என்றொரு கட்டுரையை எழுதிக் காட்டினேன். அவர் என்னை ஆனந்த விகடனில் எழுதச் சொன்னார். நான் எழுதினேன். உதை பந்தை எடுத்துச் செல்லும் ஒருவன் எதிர்த்தாடுபவரை மீறி கோல் போடும் சிறந்த வீரனாக இருக்கலாம். எதிர்த்தாடவோ, தடுத்தாடவோ தெரிந்திருக்கலாம். அது பிரச்சனையே இல்லை. ஆனால் விளையாட கிரவுண்ட் வேணும்லியா? அந்த கிரவுண்டை உருவாக்கிக் கொடுத்தவர் ரா. கண்ணன் சார் தான், அச்சு ஊடகத்தில் அவர் உருவாக்கிக் கொடுத்த அடித்தளமே என் பத்திரிகைப் பணிகளுக்கு அடிப்படையாக இன்று வரை அடித்தளமாக இருக்கிறது.

8. குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கி உங்கள் பயணம் இருக்கவில்லை. பத்திரிகை, சினிமா, என்று இரண்டு பாதைகளில் பயணம் செய்திருக்கின்றீர்கள், ஏன்?

சினிமா, பத்திரிகை, இரண்டுமே விருப்பமான விஷயங்கள்தான். வாசிக்கவும் பின்னர் எழுதவும் துவங்குகிற ஒருவனே நல்ல பில்ம் மேக்கராகவும் இருக்க முடியும். எழுதுகிற விருப்பங்கள் ரா.கண்ணன் மூலம் ஆனந்த விகடனில் ஈடேறியது. பின்னர் கரு. பழனியப்பன் சார் என்னை உதவி இயக்குநாராக சேர்த்துக் கொண்டார். அவர் மிகச் சிறந்த மனிதர். சதுரங்கம் படம் வெளிவந்திருந்தால் அவருடைய ஊதியமும் சரி சினிமாவில் அவருக்கான இடமும் சரி வேறு எங்கோ சென்றிருக்கும். மிகச் சிறந்த படமான அந்த படம் வெளிவராமல் போனது அவருக்கு பாதிப்போ, இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு பெரும் பாதிப்பாக இருந்தது. நான் தான் கடைசி அசிஸ்டெண்ட் ஒரு பெரிய பெட்டியையும், கிளாப் போர்டையும் தூக்கிக் கொண்டு அலைவேன். அந்த வயதில் எனக்கு அது சிரமமானதாக இருந்தது. ஆனாலும் அதை பெருமையாகவும் ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் என்ற பெருமிதத்தோடும் செய்தேன். ஆனால் படம் முடிந்து பல நாள் ஆகி விட்ட நிலையில் பொருளாதாரப் பிரச்சனைகளை என்னால் அந்த வயதிலும் எதிர்கொள்ள முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டோம். நானும் ராஜுமுருகனும் ஒரே நாளில் ரா.கண்ணன் சாரால் ஆனந்தவிகடனில் சேர்க்கப்பட்டாலும், நான் சினிமாவுக்குப் போகிறேன் என்று சொன்ன போது அவன் வரவில்லை. அவன் அங்கேயே இருந்தான் சதுரங்கம் முடிந்து பிரச்சனைகள் ஆரம்பமானபோது நான் நீலாவிடம் காதல் வயப்பட்டேன் அதெல்லாம் பெரிய கதை. உதவி இயக்குநருக்கு பெண் தர மறுத்து விட்டார்கள். நான் மீண்டும் ரா.கண்ணன் சாரைப் பார்த்து வேலை வேண்டும் இல்லை என்றால் பெண் தர மறுக்கிறார்கள் என்றேன். உடனே சேருடா என்றார்.

நான் ஆனந்த விகடனில் மீண்டும் இணைந்தேன். நான் ராஜுமுருகன், கதிர் வேலன், மை.பா நாராயணன், ஞானவேல், திலகவதி, கலீல் என ஒரு டீமாக வேலை செய்தோம். ரொம்ப சுவாரஸ்யமாக ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும் வேகம் இருந்தது. திருமணமும் நடந்தது. இப்போதும் சில சினிமா முயற்சிகள் நடக்கின்றன. நண்பன் ராஜுமுருகன் விரைவில் சினிமா இயக்குவான். எனக்கு காலமும் சூழலும் ஒத்து வந்தால் சினிமா இயக்குவேன். இல்லை என்றாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. சாதிப் பின்புலமோ, பொருளாதாரப் பின்புலமோ இல்லாத நான் இன்று ஓரளவுக்கேனும் நிற்கிறேன் என்றால் அது என் நண்பர்களால்தான். நான் காதலித்தவர்கள், என் பெண் நண்பிகள், ராஜுமுருகன், பரமு, மிஸ்கின் என எத்தனை எத்தனை நண்பர்களோ நான் விழுந்து விடாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். எவர் ஒருவருக்காவது நான் நன்றியறிதல் செய்ய விரும்பினால் இவர்களுக்கே அதை நான் சமர்ப்பிப்பேன்.

9. இப்போது ஆவணப்படம், குறும்படம் எதுவும் இயக்குகிறீர்களா?

பயங்கரவாத இலங்கை அரசால், இந்தியாவின் துணையோடு நடத்தப்பட்ட ஈழப்படுகொலைகள் தொடர்பான இனப்படுகொலை ஆவணம் ஒன்றை இயக்க நினைக்கிறேன். இரண்டாவதாக தமிழகத்தின் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மீனவ மக்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், அவர்களின் வாழ்வியல் கலாச்சாரமும், கிறிஸ்தவ திருச்சபையும், சாதியும், சம வெளிச் சமூகமும் நிகழ்த்தும் வன்முறை பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் இயக்கப் போகிறேன். முதல் முதலாக கிறிஸ்தவத்தைத் தழுவிய பழங்குடி மீனவ மக்களை எப்படி திருச்சபை சுரண்டிக் கொளுத்திருக்கிறது என்பதையும், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக மீனவ மக்களுக்காக போராடுவதாக பாவனை செய்யும் திருச்சபையின் கபட நாடகத்தையும் அம்பலப்படுத்தி ஆவணப்படம் செய்யலாம் என நினைக்கிறேன்.

எண்பதுகளில் ரஷ்யாவின் உதவியோடு கூடங்குளம் அணு மின் நிலைய புரிந்துண்ரவு ஒப்பந்தம் ஏற்பட்டபோது, அதற்காக கூடங்குளத்தை ஒட்டிய கடலோர மீனவ மக்களின் நிலங்களை இந்திய அரசு அக்கிரமமான முறையில் கைப்பற்றிய போது இந்த தமிழக திருச்சபை என்ன மயிரைப் பிடுங்கிக் கொண்டு இருந்ததா? அன்றைக்கு முறையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தால் அந்த திட்டத்திற்கான நிலமே கையகப்படுத்தப்பட முடியாமல் போயிருக்கும். இதெல்லாம்தான் என் ஆவணப்படத்தின் உட் கருத்துக்கள். பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் எப்படி திருச்சபையைக் கைப்பற்றி இந்து மதத்தைப் போலவே கிறிஸ்தவத்திலும் தீண்டாமையைக் கடை பிடிக்கிறார்கள் என்பதையும் அதில் சொல்லப் போகிறேன். மிக முக்கியமாக ‘மகா நகரம்’ என்றொரு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த மூன்று தாதிப் பெண்களின் கதைதான் அது. இந்த ’மகாநகரம்”தான் எனது முக்கியமான குறும்படமாக இருக்கும் என நினைக்கிறேன்.

10. நீங்கள் ஆனந்த விகடனில் எழுதியவைகளில் பெரும்பலானவை எளிய மனிதர்களைப் பற்றிய கட்டுரைகள்தான். ஹியூமன் ஸ்டோரி என்று சொல்லக் கூடிய மனிதர்களைப் பற்றிய பதிவுகள் அதிகமாக இருக்கும். உங்களின் ஆவணப்படங்களில் கூட கூத்தாடிகள், சித்திரக்கன்னியின் அரிதாரம், பேசும் சிற்பங்கள் போன்றவையில் அதன் எளிமைத் தன்மை கவருவதாக உள்ளது. ஆனால் இப்போது அதுமாதிரி எதுவும் நீங்கள் எழுதுவதில்லையே? முழுக்க முழுக்க உங்கள் கட்டுரைகளில் அரசியல் கோபங்களும் சாடல்களும் தானே நிறைந்து விட்டது? உங்களுக்கு பரவலாக பெயர் வாங்கிக் கொடுத்த மனிதர்கள் பற்றிய பதிவுகளை விட்டு விட்டீர்களா?

இல்லையில்லை. நான் சில கட்டுரைகளை இப்போதும் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் ஈழப் பிரச்சனையின் முடிவும், அதன் வேதனையும் என்னை ஒரு அரசியல் மிருகமாக ஆக்கி விட்டது. இது நான் விரும்பாமல் நடந்த விஷயம். என்னை நான் மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வருகிறேன். சமீப காலமாக பல நேரங்களில் நண்பர்கள் தொலைபேசியில் திட்டும் போதுதான் எனக்கே உரைக்கிறது. பல சண்டைகள் தேவையில்லாதவைகளாக இருக்கிறது. ஈழப் பிரச்சனையும் அந்த போராட்டத்தின் முடிவும் அறிவுத்துறையில் மிகப்பெரிய பிளவை உருவாக்கி விட்டதோடு, அரசியல் உணர்வின் அடிப்படையை அதன் தவிர்க்க முடியாத இடத்தை எல்லோருக்கும் உணர்த்தி விட்டது. சமீபகால போராட்டங்களில் போராடவே வராத பல துறையினரை மரணதண்டனை, ஈழ ஆதரவு, இனப்படுகொலை குற்றவாளிகளை தண்டிக்கக் கோரும் போராட்டங்களில் காணும் போது இதுதான் தோன்றுகிறது.என் சமகாலத்தில் அநீதியான முறையிலும் அக்கிரமமான முறையிலும் கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காக நான் பேசிக் கொண்டுதான் இருப்பேன். மற்றபடி நான் இப்போது எனக்கு மிகவும் பிடித்தமான எளிய மனிதர்கள், உறவுகள் தொடர்பாக எழுதத் துவங்கியிருக்கிறேன். ஒரு அரசியல் மிருகமாக மாறிக் கொண்டிருக்கும் நான் எழுதியாக வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அந்த மனித உணர்வுக் கதைகளின் ஒரு அங்கமாக இனப்பிரச்சனை காரணமாக உலகெங்கிலும் சிதறிச் சென்று வாழும் புலம்பெயர் மக்கள் இடம்பெயர்ந்த கதையை அவர்களின் பயண வழிக்கதைகளை தொகுத்து வைத்திருக்கிறேன் அதையும் எழுதி முடிக்க வேண்டும்.11. இப்போது நீங்கள் இயக்கியிருக்கும் ‘கள்ளத்தோணி’ படத்தைப் பார்த்தோம் நன்றாக இருந்தது. போர் முடிந்து விட்ட நிலையில் நீங்கள் ஏன் தமிழக அகதி வாழ்வை பதிவு செய்தீர்கள்?

நான் கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் இருக்கும் அகதிகள் தொடர்பாக படம் ஒன்றை இயக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதற்குரிய பணம் கிடைக்கவில்லை. இப்போதுதான் அதற்குரிய தயாரிப்பாளர் கிடைத்தார். நடராஜா குருபரன் எனக்கு அந்த வாய்ப்பை அளித்தார். புகலிடத் தமிழர்களின் வாழ்வும், அவர்களின் வேதனைகளும், ஏராளமாக பதிவாகியிருக்கின்றன. புகலிடச் சூழலில் ஏராளமானோர் எழுதுகிறார்கள். புகலிட பெண் எழுத்து, தலித் இலக்கியம், போர் இலக்கியம் உருவாகியிருக்கிறது. சொந்த சமூகம் சிதைவதையும் நாடற்ற சூழலையும் அவர்கள் எழுதியிருப்பதோடு அவைகளை வாசிக்கவும் முடிகிறது. கிட்டத்தட்ட எல்லா பதிப்பகங்களுமே புகலிட எழுத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து நூல்கள் வெளியிடும் சூழல் உள்ளது.

நாமறிந்த யுத்த கால எழுத்துக்கள். அல்லது போர் நினைவுக் கட்டுரைகள் என்பதும் புகலிட எழுத்து என்பதாகவும் இருக்கிறது. ஆனால் நான் தமிழகத்தில் வாழும் அகதிகள் தொடர்பாக வாசிக்கத் தேடினால் மிக மிக அரிதாகவே சில கட்டுரைகள் கிடைக்கின்றனவே தவிற தமிழக அகதிகள் தொடர்பான பதிவுகள் இல்லை. இங்குள்ள ஈழ விடுதலை ஆதரவாளர்கள் தமிழக அகதிகள் தொடர்பாக போதுமான அக்கறை செலுத்தவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அது போன்ற ஒரு குற்றச்சாட்டைச் சொல்கிறவர்களும், கூட உள்ளூரில் வாழும் அகதிகள் தொடர்பாக பதிவுகள் ஏதுவும் செய்யவில்லை என்பதும் உண்மைதான். அகதிகள் என்றால் மேற்குலகில் வாழ்கிறவர்கள் என்பதும் நமது பொதுப்புத்தியில் பதிந்து போய் விட்ட நிலையில் நான் கடந்த பல வருடங்களாக தமிழக அகதி வாழ்க்கை தொடர்பாக ஏதும் கதைகள் உள்ளதா? என்பதைத் தேடினேன். சில கதைகளையும் படித்தேன். பின்னர் நானே ’கள்ளத்தோணி’என்றொரு கதை எழுதி அதை குறும்படமாக இயக்கியிருகிறேன். புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞரான மஹாகவியின் ‘சிறு நண்டு’ பாடலை ரஹ்நந்தன் இசையமைத்துக் கொடுத்தார். அந்த பாடலை நான் கவிஞர் சேரனிடம் கேட்ட போது அவர் அதன் வரிகளை எனக்குக் கொடுத்து உதவினார். பிரித்தானியாவைச் சார்ந்த ஊடகவியலாளர் நடராஜா குருபரன்தான் இந்தப் படத்தை தயாரித்தார். என்னிடம் கதை மட்டுமே கேட்ட அவர் என்னை நம்பி நான் கேட்ட பணத்தை முழுமையாகக் கொடுத்தார். அவர் கொடுத்த பணத்தை வைத்து சினிமா விதிகளுக்குட்பட்ட செலவுகளோடு இந்தப் படத்தை எடுத்து முடித்தேன். நண்பர் செழியன் ஒளிப்பதிவு செய்தார். இதற்காக அவர் என்னிடம் ஒரு ரூபாய் கூட ஊதியம் பெற்றுக் கொள்ளவில்லை. எடிட்டர் சுரேஷ் அர்ஸ் நான் கொடுத்த சொர்பத்தொகையை பெற்றுக் கொண்டு எடிட் செய்து கொடுத்தார். மேலும் என் நண்பர்களின் உதவியுடனுமே நான் இந்த படத்தை எடுத்து முடிக்க முடிந்தது. மற்றபடி உடலுழைப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்கள் கேட்ட ஊதியத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் கொடுத்துதான் படப்பிடிப்பை நடத்தி முடித்தேன். அது என்னால் தாங்க முடியாத செலவுப் பணமாக இருந்தாலும் நான் அப்படிச் செய்வதை மரியாதை சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்கிறேன். மற்றபடி ஈழவாணி, மரக்காணம் பாலா, ப்ரியாதம்பி, தர்மினி, சௌந்தர், கார்டூனிஸ்ட் பாலா என்று ஒரு பெரிய நண்பர்கள் கூட்டமே எனக்கு ஊதியம் வாங்காமல் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இப்போது படத்தை முடித்து விட்டேன். பார்த்தவர்களில் பல நண்பர்கள் படம் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்.

நான் எடுக்கும் படம் முதலில் என்னை திருப்திப்படுத்த வேண்டும் என்பதுதான் என் சினிமா ரசனை தொடர்பான அணுகுமுறை. அந்த வகையில் ‘கள்ளத்தோணி’ என்னை திருப்திப்படுத்தவில்லை. இதைச் சொல்வதில் உள்ள ஆபத்துகள் எனக்குத் தெரியும். இங்கே சினிமா எடுப்பவர்கள் அவர்கள் பேரலல் (parallel cinema) சினிமா எடுப்பவர்களாக இருந்தாலும் தாங்கள் எடுத்த படங்களை தாங்களே புரமோட் செய்யக் கூடிய அல்லது பிரசாரப்படுத்தக் கூடிய வேலைகளை கச்சிதமாகச் செய்கிறார்கள். லாபிகளில் வழிந்தோடும் உபசரிப்புகளே இங்கே படங்களின் எல்லைகளைத் தீர்மானிக்கிற சூழல் ஆவணப்பட, குறும்பட parallel cinema பரப்பில் காணப்படும் நிலையில். ஆபத்தான கத்தியில் நின்றே நான் எடுத்த சினிமாவை நானே திருப்தியில்லை என்கிறேன். உலகத் தரம்வாய்ந்த குறுந்திரைப்பட பரப்பிற்குள் பிரவேசிக்கும் போது ‘கள்ளத்தோணி’ எனக்கு திருப்தியாக இல்லை அவ்வளவுதான். ஒருசில நண்பர்களின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது. இது ஒரு சின்ன மனக்குறையாக என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. ரா. கண்ணன் அவர்கள் மூன்று முறை என்னிடம் கேட்டார் படம் காண்பிக்க மாட்டாயா? என்று நான் காண்பிக்கிறேன் என்று சொல்லி சமாளித்தேன். அவர் என் மீது வருத்தத்தில் இருப்பார். ஆனால் உண்மை இதுதான் இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு சிரமங்கள் எதுவும் இல்லை. ராஜுமுருகன் என்னை சமாதானப்படுத்துகிறான். விரைவில் ‘கள்ளத்தோணி” படத்தை கொஞ்சம் சரி செய்யலாம் என நினைக்கிறேன் பார்ப்போம்.

12. படத்தை இயக்கிய நீங்களே படம் திருப்தியில்லை என்கின்றீர்கள். இந்த திருப்தியின்மைக்கு என்ன காரணம்?

ஒரு படத்தில் வரும் எல்லா தவறுகளுக்கும் அந்த இயக்குநர் மட்டுமே காரணம். அவர் வேறு எவர் ஒருவரையும் குற்றம் சொல்லக் கூடாது சொல்லவும் முடியாது. முழுக்க முழுக்க நான் மட்டுமே காரணம். விரைவில் நான் எனது அடுத்த குறும்படமான ‘மகாநகரத்தில்’ இதை சரி செய்வேன். கடினமான உழைப்பையும் தீவீரத்தையும் எப்போதெல்லாம் நான் என் பணியில் கொடுக்கிறேனோ அப்போதெல்லாம் எனது எல்லா படைப்புகளும் சிறப்பாக அமைகின்றன. எளிதில் நான் எப்போதெல்லாம் சலிப்படைகிறேனோ அல்லது போதும் என்று திருப்தியடைகிறேனோ அப்போதெல்லாம் எனது படைப்பு என்னை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விடுகிறது. இதை எல்லாம் மீறி சிறப்பாக ஒரு படம் செய்வேன் என்று நான் நம்புகிறேன். மற்றபடி லாபி செய்வதெல்லாம் ஒரு படைப்பாளிக்கு நல்லதல்ல. அது என் இயல்புக்கே ஒத்துவராத விஷயம்.

13. இந்த சுய விமர்சனத்தை உங்களின் படைப்பு நேர்மை என்று சொல்லமா?

(சிரிக்கிறார்) அப்படி எல்லாம் இல்ல பாஸ். நான் நேர்மையான ஆளே கிடையாது. நேர்மை என்பதை புரிந்துகொள்வதற்கும், அதற்கான அர்த்தமும் ரொம்ப சிக்கலானது. நான் ரொம்ப இயல்பா என் வாழ்க்கையைப் பார்க்கிறேன். என்னோட இயல்பு என்னை சந்தோஷப்படுத்தும். இதைத்தான் நீங்கள் நேர்மை என்கிறீர்கள். இந்த மன நிலை மட்டுமே நான் வெளிப்படையாகப் பேசவும், அடுத்த படத்தை சிறப்பாக எடுக்கும் படி என்னை தூண்டுகிறது என்கிற சுய நலத்தால் வருகிற வார்த்தைகளாகவும் இது இருக்கலாம் இல்லையா?

14. சினிமா இயக்குநராக வரும் இளைஞர்கள், குறும்படங்களை தங்களுக்கு ஒரு அடையாளமாகவும், துருப்பாகவும் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் குறும்படம் எடுத்த போது அதை துருப்பாகவோ துடைப்பமாகவோ பயன்படுத்தியதில்லை. நான் செய்ய ஆசைப்பட்டேன் செய்தேன் அவளவுதான். குறும்படம் ஆவணப்படம் என்பது என் சந்தோசங்கள் தொடர்பான விஷயம் அவ்வளவே. அதனால் சினிமாவில் வாய்ப்புத் தேடி வருகிறவர்கள் குறும்படங்களை விசிட்டிங் கார்டாக பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் செய்து விட்டுப் போகட்டுமே அதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு பயோடேட்டா மாதிரி பயன்படுத்துவதில் தவறில்லை என நினைக்கிறேன். நான் பயன்படுத்தியதில்லை மற்றவர்கள் பயன்படுத்தினால் அது தவறில்லை என்பதுதான் என் கருத்து. இப்போது குறும்படம் எடுப்பவர்கள் முன்னர் எடுத்தது போன்று பார்க்கச் சகிக்காத படங்களை எடுக்கவில்லை. பல நல்ல படங்களை எடுக்கிறார்கள். ’புகைப்படம்’ ‘திருகாணி’ ‘வின்ட் ‘ ‘கர்ணமோட்சம்’ என்று நல்ல குறும்படங்களை இன்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆக எதிர்காலத்தில் மிக விரைவில் தமிழிலும் குறும்படங்களுக்கான சந்தை உருவாகும் என்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

நேர்காணல்: சிலம்பரசன் & சிவபிரகாஷ் (படிமை மாணவர்கள்)

Thank you – http://thamizhstudio.com/creators_30.php

Tags: , , , , , ,

Category: நேர்காணல், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

13 Comments

 • மீண்டும் மீண்டும் அருமை நண்பர் ரா. கண்ணனுக்கு நன்றி..நன்றி..ராஜு முருகனையும் அருள் எழிலனையும் கண்டு பிடித்து களம் தந்ததற்கு..!!

 • அருள் எழிலன் பற்றிய சித்திரத்தை இந்த நேர்காணல் உருவாக்குகிறது. மிகவும் பலவீனமான ஒரு இடத்தில் இருந்து கொண்டு பேசுகிறார்.ஆனால் மொக்கை படங்களை எடுத்துக் கொண்டு உலக சினிமா எடுத்த ரேஞ்சுக்கு பேசுகிறவர்களுக்கு மத்தியில் ராஜாங்கத்தின் முடிவு என்னும் படத்தை எடுத்து நல்ல பெயர் வாங்கிய எழிலன் தனது கள்ளத்தோணியை திருப்தியில்லை என்கிறார். இந்த நேர்மைதான் தமிழில் இல்லை. ஆனால் கவனமாக செயல் பட வேண்டியது எழிலனுக்கு அவசியம்.

 • அருள் பட்டா,புறம்போக்கு இந்த ரெண்டையும் விரியா சொல்லு.

  • இளைய அப்துல்லாஹ் // பட்டா நிலம் என்பது அரசால் வழங்கப்படும் நில உறுதிப் பத்திரம் இந்த நிலம் இவருக்குச் சொந்தமானது என்று அரசு வழங்கும் சான்றிதழ்தான் பட்டா நிலம். கடற்கரையில் வாழும் எந்த ஒரு பாரம்பரீய மீன்வச் சமூகங்களுக்கும் இதுவரை தாங்கள் வாழும் நிலம் பட்டா நிலமாக இல்லை. 99% சதம் அல்ல, 100 % அப்படித்தான். சும்மா பெருமைக்காக பேசித் திரிவார்களே தவிற உண்மையிலெயே மீனவர்களுக்கு பட்டா நிலம் கிடையாது. இலங்கை கரையோரங்களின் நிலை எனக்குத் தெரியாது.

 • அருள் உனது மனதை அறிகிறேன்.

 • ஜவஹர்ஜி

  தாய் சாகும் போதே அவள் ஈன்றெடுக்கும் பிள்ளைகளும் அவளோடு மரித்துப் போகிறார்கள்

 • GREAT…GREETINGS FROM NORWAY…!!!

 • Senthil

  Anna vanakkam.

  Thangal pechai pondre thangal pettiyum migavum nerpada irukkiradhu.. 4 aandugal chennayil cinema vaaiipu thedi alaindha ennai mudham mudhalil utkara vaithu pesiyavar neengaldhan.. Ungal sandhippukku piragu sarugaai udhira irundha en Kanavugal, Ilayaai thulir vittu kondirukkiradhu.

  Thuliyum pagattu illamal ellorudaiya unarvugalayum Madhikkum thangalai Naan manadhara Nesikkiren.
  ngal anbu Thambi Senthil.

 • 2009க்கு பிறகு தான் எனக்கு அரசியலின் மீது ஈடுபாடு வந்தது. மெள்ள மெள்ள காலம் கற்றுக்கொடுத்துக் கொண்டே வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவோ மாறியிருக்கிறேன். அந்த மாற்றத்துக்கு காரணம் வாசிப்பு தான். நீங்களும் ராஜுமுருகன் அண்ணனும் பாரதி தம்பி அண்ணனும் என்னை எனக்கு அடையாளாம் காட்டியிருக்கிறிர்கள். இன்னும் பலருக்கு இதில் பங்குண்டு என்றாலும் ராஜுமுருகன் அண்ணனுக்கு இதில் பெரும் பங்குண்டு. வாழ்வில் வெற்றி பெறுவதென்பதுக்கு பொருள் பொருளாதாரத்தை வலிமைப்படுத்திக் கொள்வதே ஆகும் என்ற எண்ணத்தை எனக்கு சிலர் போதனையாக வழங்கினாலும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கான காரணத்தை கூட நான் அப்பொழுது உணர்ந்ததில்லை. வாசிப்பு என்னை போக போக உணர வைத்தது. அந்த உணர்தல் சக மனிதர்களை வேறோரு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தது. காட்சி ஊடகமோ, எழுத்து ஊடகமோ ஏதேனுமொன்றில் நம் வாழ்வில் பெரும் நாட்களை ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். புகழுக்காகவோ, பொருளாதார வளர்சிக்காகவோ நான் இந்த துறையை அணுகவில்லை. இந்த வாழ்வின் பயணமானது என் மக்களுக்காக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். இந்த சாமானிய மனிதர்களுக்கான அரசியலை மேலும் மேலும் தெரிந்துக் கொள்ளவும் அதன்பால் இயங்கவே விருப்பம் கொள்கிறேன். என்றேனும் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் அண்ணா, அந்த நாளை உருவாக்க வேண்டும். விரைவில். நன்றி.

Leave a Reply