பேரா.அ.மார்க்சின் இலங்கை – இன்பச்சுற்றுலா – ஜூ.வி தொடரை முன் வைத்து.

Oleh: Arulezhilan
August 5, 2012

பேரா.அ.மார்க்ஸ் இலங்கை செல்கிறார். சிவதம்பி நினைவுப் பேருரை நிகழ்த்துகிறார் என்பதை அவர் மூலமாக அறிந்த போது இதை யாரும் எதிர்த்தால் மார்க்சின் இலங்கை பயணத்திற்கு ஆதரவாக எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். நல்ல வேளை தமிழகத்திலிருந்து அப்படி ஒரு எதிர்ப்பு உருவாகவில்லை என நினைக்கிறேன். இலங்கை செல்வது மார்க்சின் உரிமை இலங்கை அரசோடு இணைந்து வர்த்தக நோக்கங்களுக்காக செல்வதும், தமிழ் மக்களின் குருதியை வர்த்தக வெறிக்கான நல்வாய்ப்பாக பயன்படுத்துவோர் அவர்  எவராக இருந்தாலும் அதை தடுக்கும் உரிமை நமக்கு உண்டு என்ற போதிலும். மார்க்சின் பயணம் அது போன்ற ஒன்றல்ல, இன்றைய சூழலில் நாம் ஒவ்வொன்றையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படி இலங்கை சென்ற மார்க்ஸ். யாழ் வாழ் தமிழர்கள், கிழக்கு மாகாணத்தவர், மலையகத்தார், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மன்னார் பகுதி கிறிஸ்துவ மீனவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கூத்துக்கலைஞர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல தரப்பினரையும் சந்திக்கிறார். இது போக உரைகள், வாள் வீச்சுக்கள், பரிசுகளை வென்றவர்களுக்கு கேடயங்களை வழங்குதல், என இத்யாதி  இத்யாதிகள் என எல்லாவற்றையும் முடித்து விட்டு. யாழ்பாணத்தில் அ.மார்க்ஸ்  கலந்து கொண்டு தலித்தியம், தேசியம் தொடர்பாக ஆற்றிய உரையை தலித்துக்களே புறக்கணித்துள்ளனர். அக்கூட்டத்திற்கு 20 பேர் கூட வராத நிலையில் வந்திருந்தவர்களில் ஒருவர் கூட தலித் இல்லையாம். ஆனாலும் அவர் சென்னை திரும்பிய பின் முகநூலில் வெளியிட்ட படத்தில் அவர் கையில் சின்னதாக ஒரு கேமிரா இருந்தது. இலங்கை சென்ற பேராசிரியர் யாரைச் சந்தித்தார். அங்கு என்ன நடந்தது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது அவரது பயணம் தொடர்பாக அவர் காட்டும் சித்திரங்களை மட்டுமே நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஜூனியர் விகடனில் தொடர் எழுதப் போகிறார் என்பதை அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஈழ விவாகரத்தில் அவரோடு நான் முரண்பட்டால் கூட அவர் கொல்லப்பட்ட மக்களின் பக்கம் நிற்பார். குறைந்த பட்சம் எல்லாம் பிடுங்கப்பட்டு நிராதரவாக வெட்ட வெளிகளில் வீசப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக எழுதுவார்.அன்றாடம் கேள்விகளுக்கிடமின்றி கொல்லப்படும் அப்பாவி தமிழ் மக்களுக்காக எழுதுவார். புலிகளை விமர்சித்து விட்டேனும் மக்கள் பிரச்சனையை எழுதினால் கூட அது நல்லது என்றுதான் நான் நினைத்தேன். இதோ அவரது தொடரின் 4- வது சேப்டர் ஜூனியர் விகடனில் / பிரபாகரனின் ஆவி! அலறிய சிங்களவர்…/ என்னும் தலைப்பில் வந்திருக்கிறது. முதல் பகுதிக்கு அவர் வைத்த தலைப்பு என்னவென்று தெரியவில்லை ஜூனியர் விகடன் வைத்த தலைப்பு…சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் .

பகுதி-1 

சிதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள் – என்னும் முதல் பகுதியில் சிங்கள இராணுவ வீரர்கள் தன்னை தடுக்காமல் சுதந்திரமாக அனுப்பியது தொடர்பாக துவங்குகிறார் இப்படி . // யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமானால் அயலுறவு அமைச்சக அனுமதி பெற வேண்டும். இப்போதும் ஓமந்தையில் ராணுவ அதிகாரிகளால் நமது பாஸ்போர்ட்கள் பரிசீலிக்கப்படுகின்றன. என்றாலும் பதிவு செய்துகொண்டு மேலே செல்வதற்கு அனுப்பி விடுகின்றனர். மன்னார், மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் இந்தச் சோதனையும் செய்யப் படுவதில்லை.// ஏதோ ஒரு புரிபடாத பூமியில் போர் நடந்தது போலவும் அது பெரும் பாதிப்பை, அழிவை ஏற்படுத்தி விட்டது போன்றும் ஒரு சில வரிகளில் தொட்டுக்காட்டுகிறார், மீள் குடியேற்றம், நிவாரணம், போன்றவை நடக்கவில்லை என்பதை பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் நழுவிச் செல்கிறார் அ.மார்க்ஸ். அந்த சேப்டரின் இறுதியில், //தமிழர்களை நோக்கி ‘நீங்கள் தோல்வியடைந் தவர்கள்’ என ஒவ்வொரு கணமும் சொல்லிக்காட்டும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பயணத்தின்போது இதை எங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது!// நான் நினைக்கிறேன் முதல் சாப்டருக்கு அவர் வைத்த தலைப்பு ‘நீங்கள் தோல்வியடைந் தவர்கள்’ என்று . ஆனால் அதை ஜூனியர் விகடன் நீக்கி விட்டு தலைப்பை மட்டும் மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அதே தலைப்பை வைத்து அக்கட்டுரையை முகநூலில் வெளியிடுகிறார். நாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்றால் எப்படித் தோற்றோம். அந்த தோல்வியில் யாருக்கெல்லாம் பங்குண்டு. கிளஸ்டர் குண்டுகளை கொடுத்தவன் எவன்? கொத்துக் கொத்தாய் பாஸ்பரஸ் குண்டுகளை அப்பாவி மக்கள் மீது விசினார்களே அவைகளை கொடுத்தவன் எவன்? என்றல்லவா எழுதியிருக்க வேண்டும். கூடவே புலிகளையும் கடுமையாக செவுளில் அறைவது போன்று நான்கு கேள்வியை கேட்டிருக்க வேண்டமா மார்க்ஸ்? அதை எல்லாம் விட்டு விட்டு நீங்கள் தோற்றுப் போனவர்கள் என்கிற தலைப்பை வைப்பதன் மூலம் எதை உணர்த்த வருகின்றீர்கள் என்ன மாதிரியான மன நிலை இது ? ஏன் இத்தனை வன்மம்?

பகுதி-2

இரண்டாவது சாப்டருக்கு அவர் வைத்த்த தலைப்பு – இந்தியா கட்டியதாகச் சொல்லும் வீடுகள் எங்கே இருக்கிறது? இந்த தலைப்பில் இந்தியா கட்டிக் கொடுப்பதாகச் சொன்ன 50,000 வீடுகள் தொடர்பாக ஒரு பத்தியாவது எழுதுவார் என்று பார்த்தால் ஒட்டு மொத்த கட்டுரையிலும் இந்தியா கட்டிக் கொடுப்பதாகச் சொல்லும் வீடுகள் தொடர்பாக அவர் எழுதியிருப்பது இந்த ஒரே ஒரு வரியைத்தான் //இந்திய அரசு பெரிதாய்ச் சொல்லிக்கொள்ளும் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. // இந்த ஒரு வரியைத் தவிற வேறு எதுவுமே அந்த திட்டம் தொடர்பாக இல்லை, உண்மையில் அத்திட்டத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக தமிழ் ஓன் மீடியா விடியோ ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. தவிறவும் இந்தியாவின் உதவிகள் என்பது சுத்த அயோக்கியத்தனமானது. இவர்கள் வழங்குவதாகச் சொல்லும் பொருட்களை வாங்கும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது சிங்கள இராணுவம், அவர்கள் யாரை அழைத்துச் செல்கிறார்களோ அவர்களுக்கே இந்தியாவின் உதவிகள் கிடைக்கும். இதை எல்லாம் வளர்ந்து வரும் எழுத்தாளர் யோ. கர்ண்ணன் சொல்லவே இல்லையா மார்க்ஸ்?

அதே பகுதியில் // முல்லைத் தீவுக்குள் 2009 ஜனவரி 25-ல் இலங்கை ராணுவம் நுழைந்தது. சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்களும் புலிகளும் முள்ளிவாய்க்கால், புது மாத்தளன், புதுக்குடியிருப்பு பகுதிக்குள் முடங்க நேரிட்டது. தொடர்ந்த பேரழிவுகளை நாம் அறிவோம்// என்று எழுதுகிறார். ஈழத் தமிழர்களுக்கு நடந்த பேரழிவுகளை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள் மார்க்ஸ் உங்கள் தலித் முன்னணி நண்பர்கள் சொல்லியா அறிந்தீர்கள்? நாங்கள் இலங்கையில் கொத்துக் கொத்தாய் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற போது உங்கள் நண்பர்கள்தானே சொன்னார்கள் அங்கே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று. புலிகளின் வெற்றுக் கூச்சல் என்றல்லாவா 2009 -ல் சொன்னார்கள். அப்படுகொலைகள் பற்றி எதுவுமே எழுதாத நீங்கள் கொலை நடந்த இலங்கை சென்று வந்து //நாமறிவோம்// என்று எழுத வெட்கமாக இல்லையா?

பகுதி-3

மூன்றாவது தொடருக்கு காட்டின் நடுவே ஒரு நீச்சல் குளம் என்று தலைப்பிடுகிறார். வளர்ந்து வரும் எழுத்தாளர் யோ.கர்ணன் அவரை அடுத்து அழைத்துச் சென்றது கடற் புலிகளும் , அதன் தலைவரும் புலிகள் காலத்தில் முக்கிய பிரமுகர்களாக வந்து சென்றவர்களும் பயன்படுத்திய நீச்சல் குளத்திற்கு , வளர்ந்து வரும் எழுத்தாளர் , வளர்ந்த எழுத்தாளரை புலிகளின் நீச்சல் குளத்திற்கு அழைத்து வந்து விட்டார். கடந்த இரண்டு பகுதிகளிலும் வளரும் எழுத்தாளர் சில தன்னார்வக்குழுக்களின் மக்கள் தொண்டினை பேராசியருக்குக் காட்டுகிறார். கோழிகளும், ஆடுகளும் எப்படிச் செத்துப் போயின என்பதை விவரிக்கிறார். மக்கள் போரால் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை கண்களில் பயத்துடன் விவரிக்கிறார் அந்த வளர்ந்து வரும் எழுத்தாளர். கோழிகள், ஆடுகள் படுகொலைகளை பேராசிரியருக்கு உணர்த்திய பின்னர் புலிகளின் நீச்சல் குளத்தையும் யோ.கர்ணன் காட்டுகிறார் இப்படி,
//மிகப்பெரிய புலிகளின் முகாம் ஒன்றும், கடற்புலிகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆழமான நீச்சல் குளம் ஒன்றும் அமைந்திருந்த இடம் அது. போர் விமானங்களைக் கண்காணிக்க புலிகள் அமைத்திருந்த ராடார் ஒன்று காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் முகாம் இன்று இலங்கை ராணுவத்தின் 68-ம் படைப் பிரிவுத் தளமாக மாற்றப்பட்டுள்ளது, அதிகாரிகளுக்கான மெஸ், படை வீரர்கள் பிரிவு என்றெல்லாம் அறிவிப்புப் பலகைகளுடன் மிக வசதியாக உள்ளது. சுழன்றுகொண்டிருக்கும் அந்த ராடாரைப் பார்த்தவாறே மேலே சென்றோம். அதைத் தாண்டிக் குறுகலாகச் செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் மிகப் பெரிய ட்ரில்லர்களை வைத்து ஆழமாகப் பள்ளம் தோண்டிக்கொண்டு இருந்தனர். இதற்குச் சற்றுத் தொலைவில் மரங்கள் வெட்டப்பட்டு குழந்தைகள் பூங்கா ஒன்றும், உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு விசாலமான கேன்டீன் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. கேன்டீனை ஒட்டி இருந்த கடற்புலிகளுக்கான பயிற்சிக்குளம், நீர் அகற்றப்பட்டு காட்சியளித்தது. படிப்படியாக நான்கு தளங்களில் அமைக்கப்பட்ட அந்த நீச்சல் குளம் தண்ணீர் வரும் வழி, போகும் வழி, பயிற்சி முடித்தவர்கள் குளித்து, உடை மாற்றிச் செல்ல அறைகள் எனப் பக்காவாகக் கட்டப்பட்டு இருந்தது. மேலே கம்பிகள் வேயப்பட்டு, அவற்றின் மீது கொடிகள் பரவி வானில் இருந்து பார்க்கும்போது கீழேயுள்ள நீச்சல் குளம் தெரியாத வண்ணம் அடர்ந்த காடு என்று தோற்றம் அளிக்கும் வகையில் அதைப் புலிகள் அமைத்திருந்தனர்.இப்போது, கம்பிகளின் மீது பரவியிருந்த கொடிகள் அகற்றப்பட்டு இருந்தன. அருகில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும், ‘பயங்கரவாதிகளின் நீச்சல் குளம்’ என்று தலைப்பிட்டு விவரப்பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. 83 அடி நீளம், 22 அடி ஆழம், கடற்படைக்கு எதிரான தற்கொலைப் போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கென 2001-ல் கட்டப்பட்டது என்பது போன்ற விவரங்கள் இருந்தன. ‘உடை மாற்றுவதற்கு அறைகள் அருகில் அமைக்கப்பட்டு இருப்பதில் இருந்து, தலைமையில் இருந்தவரும் அவருக்கு நெருக்கமானவர்களும்கூட இதைப் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது’ என அந்த வாசகங்கள் முடிந்திருந்தன.//


என்று மிக நீண்ட பத்தியை நீச்சல் குளம் பற்றிய விவரணமாக எழுதுகிறார். மக்கள் படுகொலை தொடர்பாக, பாலியல் வன்முறை தொடர்பாக, கொல்லப்பட்ட பெண் போராளிகளின் முலைகள் அறுத்தெரியப்பட்டு. யோனிகள் பேனட் கத்திகளால் குதறப்பட்டது தொடர்பாக எழுதாத மார்க்ஸின் பேனா புலிகளின் நீச்சம் குளத்தைப் பார்த்து வியந்தபடியே கேண்டீனில் தின்பண்டங்களை வாங்கி இருவரும் மென்னத் துவங்கி விடுகிறது. அந்தக் கேண்டீன் பௌத்த பாசிச பயங்கரவாத இராணுவத்தால் நடத்தப்படும் கேண்டீன் என்பதை வளர்ந்து வரும் எழுத்தாளர் சொல்லியிருப்பார். கேண்டீனில் வாங்கிய தின்பண்டங்களைக் கொறித்துக் கொண்டிருந்த போது போரில் கொல்லப்பட்ட மக்களை வளர்ந்து வரும் எழுத்தாளர் நினைவு படுத்த அவர்களுக்காக மனசுக்குள்ளேயே அழுது அஞ்சலியும் செலுத்துகிறார் இப்படி //ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மரண அமைதியுடன் காட்சியளித்தது. அந்த ஊரின் சந்தை சிதைந்துகிடந்தது. கொடிய போர்க்குற்றங்களுக்கு ஆளாகி எந்த ஆதரவுமற்று நம் கண்முன் செத்து மடிந்த மக்களுக்கு மனசுக்குள் அஞ்சலி செலுத்திய வண்ணம் // என்று அழகான ஒரு நிலத்தை வர்ணிக்கிறார். மக்கள் மரணம் பற்றிய நினைவு மட்டும் இல்லாத போயிருந்தால் மிக அழகிய இடம் என்று வர்ணிக்கிறார். ஏன் நீங்க மனசுக்குள்ளயே அழலையா?

பகுதி-4

இயேசுவை சிலுவையில் அறையக் கொண்டு சென்ற நான்காவது ஸ்தலத்திற்கு வளர்ந்து வரும் எழுத்தாளர் பேராசிரியரை அழைத்துச் செல்கிறார். அந்த ஸ்தலத்திற்கு அவர் வைத்த தலைப்பு // பிரபாகரனின் ஆவி! அலறிய சிங்களவர்…// தொடரின் துவக்கத்திலேயே புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்கிறார் பேராசிரியர். அடுத்து பிரபாகரனின் பிரமாண்ட பங்கர் வீடு பற்றி அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார். வீட்டில் கார் பார்க்கிங் வசதி, ஃபேன், ஏ.சி. முதலான வசதிகள் இல்லை. ஆனால், அத்தகைய ஏற்பாடுகள் இல்லாமல் அங்கு வாழ்ந்திருக்க இயலாது. என்றெல்லாம் தனது அரசியல் அறிவால் பிரபாகரன் வீட்டை ஆய்ந்து //கிணறு, சமையற்கட்டு என்பதாக அமைக்கப்பட்ட ஒரு வலிமையான கோட்டை அது.// என்று தமிழ் சமூகத்திற்கு அந்த அதிகாரத்திற் கெதிரான உண்மையை அறிவிக்கிறார். மார்க்ஸ் கண்டு பிடித்த அந்த கோட்டையின் அடித்தளத்தில் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட பிரபாகரனின் ஆவி வந்து விட்டதென்று சிங்களர்கள் பயந்து வெளியேறியதாகவும், // ‘ஆவியான’ பிறகும் கூட சிங்கள மக்களை அச்சுறுத்தக்கூடியவராகப் பிரபாகரன் இருப்பதை நினைத்துக் கொண்டே வெளியே வந்தபோது பொழுது சாய்ந்திருந்தது.ஒட்டுச்சுட்டான், நெடுங்கேணி வழியாகப் புளியங்குளத்தை நாங்கள் அடைந்தபோது இருள் கவ்வத் தொடங்கியது. // என்று அந்த வளர்ந்து வரும் எழுத்தாளருக்கு விடை கொடுத்து விட்டு……………… விடை கொடுத்து விட்டு……… நான் நினைக்கிறேன் இனி வரும் பகுதியில் விட்டுப் போன இலக்கியர்களின் பங்களிப்பை மிச்சப் பகுதியில் தொட்டுக் காட்டுவார் . அந்த வகையில் அவர் நான்கு பகுதிகளில் தன்னை அழைத்துச் சென்ற வளர்ந்து வரும் எழுத்தாளருக்கு விடை கொடுத்து விட்டார்.

யார் இந்த வளர்ந்து வரும் எழுத்தாளர் யோ.கர்ணன்?

முன்னாளில் புலிப் போராளிகளாக இருந்த பலரும் இன்று இலங்கை அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆட்காட்டிகளாக செயல்படுகிறார்கள். அப்படிக் காட்டிக் கொடுப்பதன் மூலம் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றி சில சலுகைகளை அடைந்தவர்களும் உண்டு. முகாம்களில் வைத்து காட்டிக் கொடுக்கப்பட்ட போதிலும் இறுதிவரை பணியாமல் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களும் உண்டு. இவர்கள் பொதுவாகவே புலிகளை விமர்சிப்பதையும் தமிழர் தரப்பை விமர்சிப்பதையும் முதல் பணியாக கொண்ட போதிலும் ஒரு வார்த்தை கூட பேரினவாத அரசுக்கு எதிராகப் பேசுவதில்லை. வடக்கில் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்ட போதெல்லாம் அமைதியாக இருந்த இவர்கள், கிழக்கு முஸ்லீம்களுக்கும் வடபகுதி தமிழ் மக்களுக்குமான முரண்பாட்டை கூர்மையடைச் செய்பவதெல்லாம் இவர்களின் தொடர்ச்சியான பணி. இதில் யோ,கர்ணன் போன்றோர் இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர் அரசு ஆதரவாளராகத்தான் இருக்கிறார். இவர் ஏற்கனவே புலிகளை கொச்சைப்படுத்தி ஆனந்த விகடனில் இவரது கதை வந்த போது நான் வெளிப்படையாகவே கண்டித்து எழுதுதினேன். பிரபாகரனையும், அவரது மனைவி குழந்தைகளையும் மிக மிக கீழ்த்தரமாக சித்தரித்து புதுவிசை இதழில் ஒரு சிறுகதை எழுதினார். அக்கதையின் பெயர் நினைவில் இல்லை. முழுக்க முழுக்க அவர் விகடன் சிறுகதையில் கொட்டியிருந்தது புலிகள் மீதான வன்மத்தை. புதுவிசைக் கதையிலோ பிரபாகரனின் மனைவி குழந்தைகளை இழிவு படுத்தியிருந்தார். ஒரு எழுத்தாளனாக வளருவது இப்படித்தானா? இலங்கை இராணுவத்தோடும் இலங்கை அரசு ஆதரவாளர்களோடும் சேர்ந்தியங்கும். யோ கர்ணன்தான் பேராசிரியரை பயண வழித் துணைவனாக இனப்படுகொலை நடந்த ( மார்க்சின் வார்த்தையில் போர்ப்பகுதி) பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இப்படியானவர் புலிகளின் நீச்சல் குளத்தையும், புலிகளின் சித்திரவதைக் கூண்டையும், பிரபாகரனின் ஏசி வீட்டையும் காட்டாமல் கொல்லப்பட்ட காணாமல் போன மக்களையா காட்டுவார்?


சரி உண்மையில் மக்களின் பிரச்சனைகளை எழுத யோ.கர்ணணின் உதவி அவசியமா? அது தேவையே இல்லை . இலங்கை அரசை எதிர்க்கும் எவரையும் இலங்கை இராணுவம் இனப்படுகொலை நடந்த பிராந்தியத்திற்குள் குறிப்பாக பாசிஸ்டுகளால் படுகொலைக்குள்ளான மக்களைச் சந்திக்க அனுமதிக்காது. இதை என்னிடம் நேரடியாகச் சொன்னவர் நிமல்கா பெர்னாண்டோ அது ஏன் ? 70- பதுகளில் சிங்கள இளைஞர்களிடையே செல்வாக்குச் செலுத்திய ஜேவிபி சிங்கள இனவாதக் கட்சியாக மாறிய பின்னர் அதிலிருந்து விலகி தனி அமைப்புத் துவங்கிய இடதுசாரியான குணரத்னத்தை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். அவரது முன்னிலை சோசலிசக் கட்சி வடக்கில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் வேலை செய்கிறது. அவர்கள் ஒன்றும் புலிகளையோ, தனி ஈழத்தையோ ஆதரித்தவர்கள் அல்ல ஆனால் பேரினவாதிகளால் கொல்லப்பட்ட, இல்லாமல் ஆகப்பட்ட மக்களிடம் பணி செய்தவர் குணரத்னம். பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டினார் என்பதற்காக குணரத்னம் கடத்தப்பட்டார். பின்னர் அவுஸ்திரேலிய அரசு தலையிட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். புலிகளை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்ட் அவர் ஆனால் அதிகாரத்திற்கெதிராக பாசிசத்தின் குகைக்குள் நின்று உண்மைகளை பேச முயன்றார் என்பதற்காக அவர் கடத்தப்பட்டார். வவுனியாச் சிறையில் நிமலரூபன் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு நியாயம் கோரி குரல் கொடுப்போர் நசுக்கப்படுகிறார்கள். ஆக இன்றைய இலங்கையில் அதிகாரத்திற்கெதிராக எவன் ஒருவன் உண்மையைப் பேச எத்தனிக்கிறானோ அவன் கடத்திக் கொல்லப்படுவான். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் கொல்லப்பட்டிருகிறார். காணாமல் போன யாரோ ஒருவரைத் தேடி ஒவ்வொரு ஈழத் தமிழ் குடும்பமும் யாரிடம் கேட்பதென்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு குடும்பத்தைச் சந்தித்திருந்தால் கூட எழுத உங்களுக்கு ஏராளமாகக் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களைச் சந்திப்பது அத்தனை எளிமையானதல்ல ஏனெனில் உங்களை அழைத்துச் சென்றவர்கள் அப்படி ஒன்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலைச் செய்யவில்லை.
பேராசிரியரின் தொடரை வாசித்து முடித்த பின்னர் எனக்கு தோன்றியதெல்லாம் இதுதான் வன்னிப் பெருநிலம் என்று அழைக்கப்படும் வட பகுதி நிலத்தில் சுமார் நான்கரை லட்சம் மக்கள் வசித்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இறுதிப் போருக்குப் பின்னர் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களைக் காணவில்லை. ஆனால் கோழிகளுக்காக கண்ணீர் விடும். பேராசிரியர் மக்களை ஏதோ போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற தொனியிலேயே டீல் செய்கிறார். அந்த தொனியில் இருந்துதான் பிரபாகரன் ஆவி தொடர்பான எண்ணம் பிறக்கிறது, நொறுக்குத் தீனியை சுவைத்தபடியே படுகொலை நடந்த பூமியையும் கடக்கிறார்.

2002 -ல் குஜராத்தில் இந்துப் பாசிஸ்டுகளால் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதை இஸ்லாமியர் மீதான இந்து வெறியர்களின் தாக்குதல் என்று துல்லியமாக நாமும் சொல்கிறோம் பேராசிரியரும் சொல்கிறார். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் என்று கூட குந்தாங்குறையாக எழுதுவதில்லை. காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அத்துமீரல் என்கிறோம் பேராசிரியரின் குரலும் அழுத்தம் திருத்தமாக அப்படியே ஒலிக்கிறது. இங்கெல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஒலிக்கும் அ..மார்க்சின் குரல் ஈழம் என்று வந்தால் பம்பிப் பதுங்குகிறது. பேராசிரியர் மார்க்ஸ் இலங்கையை பௌத்தர்களுக்கான ஒரு நாடாகப் பார்க்கிறார் . வட பகுதியில் வாழும் தமிழ் மக்களை தனக்குப் பிடிக்காத தமிழ் தேசியத்தின் பிரதிநிதிகளாக நினைக்கிறார். சைவத்தாலும் வைணவத்தாலும் உருவாக்கப்பட்டதாக நினைக்கும் அவரது வழமையான வெறுப்பரசியலின் விளைவாக அவர் ஈழத் தமிழர்களை இந்துக்களாக பார்ப்பதும், கிழக்கு முஸ்லீம்களிடம் காட்டும் கரிசனத்தை வடபகுதி தமிழ் மக்கள் மீது காட்ட மறுப்பதாலும் வனமம் கலந்த எள்ளலாகவும் வெளிப்படுகிறது. பெரும்பான்மை அரசியல் பாசிசம் என்பது இந்தியாவில் இந்து வெறியாகவும், ஆப்கானில் முஸ்லீம் வெறியாகவும், இலங்கையில் பௌத்த வெறியாகவும் கட்டமைக்கப்படுகிறது. இந்துக்கள் எனப்படுவோராக தமிழர்களை புரிந்து கொண்டால் கூட இலங்கையின் வட பகுதியில் அவர்கள் சிறுபான்மையினர் என்ற எண்ணமோ பார்வையோ அ.மார்க்சிடம் இல்லை. மிகவும் வறட்சியான அவரது பார்வையை பௌத்தம் மீதான பாசமும், இஸ்லாம் மீதான பற்றும் உருவாக்க அதையே தமிழ் மக்கள் மீது கொட்டுகிறார். அதுதான் அதிகாரம் சார்ந்த குரலாக ஒலிக்கிறது.

பேராசிரியரைப் பொறுத்தவரை இதை எழுதும் உரிமை அவருக்கு உண்டு. எழுதக் கூடாது என்று சொல்லவோ,. அதை ஜூனியர் விகடன் வெளியிடக்கூடாது என்றோ ஒரு ஊடகவியலாளனாக நான் சொல்ல முடியாது. ஆனால் அவர்  ஈழத் தமிழர் விவாகரத்தில்  அதிகாரத்திற்கெதிராக உண்மைகள் எதையும் பேசி விடவில்லை. எப்போதுமே அரசு ஆதரவாளர்களான அவரது பழைய, புதிய நண்பர்கள்  மார்க்சின் குணமறிந்து தீனி போட்டிருக்கிறார்கள். அவர் அதை அனுபவித்து ருசிக்கிறார். ஈழம் தொடர்பான மார்க்சின் குரலை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் பேரினவாதத்தின் கொடுங்கரங்களின் நீண்ட ரத்த வெறியில் அடுத்து பலியாகப் போகிறவர்கள் கிழக்கு முஸ்லீம்கள். அதன் ஆரம்ப குறி குணங்கள் தென்படத் துவங்கி விட்டன. இந்துக் கோவில்கள், சிறு தெய்வக் கோவில்களை இடித்து பௌத்த விஹாரைகளாக மாற்றியவர்கள் இப்போது மசூதிகளை குறிவைக்கிறார்கள். அப்போது உங்கள் குரல் என்னவாக ஒலிக்கப் போகிறது என்பதைக் காண காத்திருக்கிறேன்.

Tags: , , , , , , ,

Category: ஈழம், முதன்மைப் பதிவுகள் | RSS 2.0 | Give a Comment | trackback

6 Comments

 • pratheep

  Nalla article anna.a.marks eluthvathu varuthamalikkirathu.

 • இந்த மார்க்சை யார் ஆதரித்தார்கள்? உங்களைப்போன்றவர்கள்தானே. இப்போது அனுபவிக்கவேண்டியதுதான். எந்த விதத்திலேயும் சேர்த்தியில்லாத ஆளுங்கதான்
  இவர்கள் என்பது எனக்கு 15 வருடங்களுக்கு முன்பே தெரியும்

 • arumai..marsidam essarkkaiyaaga erukka veendum/

 • pursoth

  hi mr arul, i would like to invite you to visit sri lanka and understand the real situation of Tamil peoples.

 • veera kumar

  இலங்கை தமிழ் மக்களின் எதிரிகள் எவ்வலோபர் இருக்க
  அ.மார்க்ஸ்ஐ ஏன் \திட்டுகிரிர்கள்

  • Arulezhilan

   பேராசிரியரை திட்டி எதையும் இதில் எழுத வில்லை. அவர் ஒரு பாப்புலர் இதழில் இலங்கை தொடர்பாக எழுதியதெல்லாம் ஒரு பக்கச் சார்பானவை. அரசு சார்பானது மட்டுமல்லாமல் இலங்கையில் முஸ்லீம் தமிழ் முரண்பாட்டை கூர்மைப்படுத்தி விடுவதுமாகும் கட்டுரையில் மறுப்பிருந்தால் மட்டும் எழுதவும்.

Leave a Reply